காதலை வைத்து சாதி அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் பற்றியும், ஆணவக் கொலைகள் பற்றியும் இயக்குநர் வ.கீரா, பேசியிருப்பது தான் ‘எட்டுத்திக்கும் பற’
உயர்ந்த சாதியினர் என்று சொல்பவர்களின் பெண்ணும், தாழ்ந்த சாதியினர் என்று சொல்லக்கூடிய ஆணும் காதலித்து திருமணம் செய்துக் கொள்வதை அவர்களது பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும், அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காயும் அரசியல்வாதிகளின் முகத்திரையை இயக்குநர் கீரா கிழித்திருக்கிறார்.
காதல் என்பது பணம், மதம், சாதியை பார்த்து வருவதில்லை என்பதை உணர்த்துவதற்காக, வயதானவர்களின் காதல், சாலை ஓரங்களில் வாழ்பவர்களிடம் ஏற்படும் காதல் என்று மூன்று காதல் கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்று காதல் கதைகளின் ஜோடிகளான சாந்தினி – சஜூமோன், நித்தீஷ் வீரா – சவுந்திகா, தீக்கதிர் குமரேசன் – நாச்சியாள் சுகந்தி என அனைவரது நடிப்பும் இயல்பாக இருக்கிறது.
அம்பேத்கர் என்ற வழக்கறிஞர் வேடத்தில் கச்சிதமாக பொருந்தும் சமுத்திரக்கனி, தனது பாணியில் சாதி பிரிவினைக்கு எதிராகவும், ஆணவக்கொலைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார்.
அரசியல்வாதி வேடத்தில் நடித்திருக்கும் முத்துராமனின் கதாப்பாத்திரம், சமகால சாதி கட்சி தலைவரை நினைவுப்படுத்துகிறது.
சிபின்சிவனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. எம்.எஸ்.ஸ்ரீகாந்த் இசையில், “உசுருக்குள் உன்னை வைத்தேன்…” பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகம்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்துள்ள இயக்குநர் வ.கீரா, ”நாடக காதல்” என்ற ஒன்றே இல்லை என்கிறார்.
தான் சொல்ல வந்த கருத்து, அதை காட்சிப்படுத்திய விதம், அதற்கான வசனங்கள் என்று அனைத்தையும் நேர்மையாக கையாண்டிருக்கும் இயக்குநர் வ.கீரா, சினிமாவுக்கான வழியில் அதைச் செய்யத் தவறியிருக்கிறார். அதனால், படம் சற்று பலவீனமடைந்திருப்பதை மறுக்க முடியாது.
இருந்தாலும், ‘எட்டுத்திக்கும் பற’ பார்க்க வேண்டிய படம் தான்.