என்னைக் கண்ணீர் விட வைத்த தயாரிப்பாளர் : விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேச்சு!

தன்னைக் கண்ணீர் விட வைத்த தயாரிப்பாளர் பற்றி ஒரு திரைப்படத்தின் விழாவில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி விநியோகஸ்தர் சக்திவேலன் பேசினார் . இதோ அது பற்றிய விவரம்.

ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எலக்சன்’.
மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடுகிறார்.சென்னையில் நடைபெற்ற ‘எலக்சன்’ திரைப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி விநியோகஸ்தர் சக்திவேலன் பேசும்போது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் வெளிப்பட்டன. அவர் பேசும்போது,

” இப்படத்தின் தயாரிப்பாளர் நண்பர் ஆதித்யா. ‘ஃபைட் கிளப்’ எனும் படத்தின் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்னரே எனக்கு அறிமுகமானார். அவர் யார்? எப்படி? என்று எனக்குத் தெரியாது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விஜய் குமாரை வைத்து படம் தயாரிக்கிறேன் என்றார்.

அதன் பிறகு அவரைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். அமெரிக்காவில் உள்ள பிரபலமான சர்வதேச கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் பணியாற்றி வருகிறார். அவர் இதுவரை இரண்டு திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படத்திற்கும் அவர் உழைத்த பணத்திலிருந்து தயாரிப்பு செலவுகளைச் செய்திருக்கிறார்.

திரையுலகைப் பொறுத்தவரை உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களைத் தவிர்த்து ஏனைய தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களது உழைப்பில் ஈட்டிய சொந்த பணத்தை முதலீடு செய்து தான் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இவர் தற்போது உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தி எலக்சன் என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். எனக்குள், ‘வெளிநாட்டில் பணியாற்றி வரும் ஒருவர் எப்படி இந்தக் கதையை உள்வாங்கி தயாரித்திருக்க முடியும்’ என்ற கேள்வி எழுந்தது. அதன் பிறகு தான் அவர் இந்தப் படக் குழுவுடன் குறிப்பாக இயக்குநருடனும், நாயகன் விஜயகுமாருடனும் எப்படி உணர்வு பூர்வமாக இணைந்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.

படத்தை தொடங்கும் போது என்னை சந்தித்து ஒரு முறை பேசினார். அப்போதே படத்தை நிறைவு செய்துவிட்டு உங்களைத் தொடர்பு கொள்கிறேன் என்றார். அவர் சொன்னபடி படத்தின் பணிகளை நிறைவு செய்த பிறகு மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

அவரிடம் பொதுவாக திரையுலக அனுபவம் எப்படி இருந்தது? எனக் கேட்டேன். இந்தப் படத்தை நான் தயாரித்து விட்டேன். ஆனால் பட தயாரிப்பின் போது.. படப்பிடிப்புத் தளத்தில் ஒவ்வொருவருடைய கடின உழைப்பை நேரில் பார்த்தேன். நான் என்னுடைய பணத்தை மட்டும் தான் முதலீடு செய்து இருக்கிறேன் ஆனால் தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும் தங்களுடைய ஆத்மார்த்தமான உழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்குகிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படத்தை தயாரித்ததற்காக நான் பெருமிதம் அடைகிறேன். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றால் இதன் மூலம் நான்கு தொழில்நுட்பக் கலைஞர்களும், நான்கு நடிகர்களும் வெற்றி பெறுவார்களே.. அவருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்குமே.. இதைவிட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி என்றார். இதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வடிந்தது.

பொதுவாக சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் பதவிகளில் உள்ளவர்களிடத்தில் மனித நேயத்தைப் பார்க்க இயலாது என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தயாரிப்பாளர் ஆதித்யா திரைப்படத்தை ஒரு வணிகப் பொருளாகப் பார்க்காமல் உணர்வுபூர்வமான படைப்பாகப் பார்த்திருக்கிறார். அதிலிருந்து அவருடைய நட்பு மேலும் உறுதியானது.

அவர் தயாரித்த ‘ஃபைட் கிளப்’ படத்திற்கு நான் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. தற்போது தயாரித்திருக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்திற்கும் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இனி மேலும் எங்கள் இருவரிடத்திலும் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளப் போவதில்லை.

படத்தையும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் அளவு கடந்து நேசிக்கும் ஒரு தயாரிப்பாளரை நான் வியந்து பார்க்கிறேன். இவரைப் போன்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டும். இதுபோன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறும்போது இவரைப் போன்ற ஏராளமான புதிய தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரை உலகத்திற்கு வருகை தருவார்கள். புதிய தொழில்நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும் அறிமுகமாவார்கள். தமிழ்த் திரையுலகம் மேலும் வலிமை பெறும்.

இந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன் .திரைப்படத்தில் இடம் பெறும் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. உள்ளாட்சித் தேர்தலை பற்றிய படமாக இருந்தாலும் அதில் நுட்பமாகச் சில விசயங்களை இயக்குநர் இணைத்திருக்கிறார்.

ஓர் அரசியல் கட்சியில் தொண்டராக இருக்கும் ஒருவரின் மகன் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும்..? இந்த அடிப்படையில் அமைந்திருக்கும் இந்தக் களம் புதிது. இதுவரை தமிழ்த் திரையில் சொல்லப்படாதது.
அரசியல் கட்சியின் தலைவரின் மகன் அரசியல்வாதியாவது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஒரு விளிம்பு நிலை மக்களின் பார்வையில் இருந்து இப்படி யோசித்தால் தான் இது போன்ற புதிய களம் உருவாகும்.

நடிகர் விஜய் குமார் அண்மையில் ஒரு இயக்குநருடன் கதை விவாதத்தில் தொடர்ச்சியாக ஆறரை மணி நேரம் விவாதித்ததைக் கண்டு வியந்திருக்கிறேன். அவர் சினிமாவில் மேலும் மேலும் உயர்வதற்கான தகுதியாக இதனை நான் பார்க்கிறேன்.

படத்தில் இதுவரை தமிழ்த் திரையில் சொல்லப்படாத நாயகனின் தந்தை கதாபாத்திரத்தை உயிர்ப்புள்ள கதாபாத்திரமாக திரையில் செதுக்கிய இயக்குநரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

வழக்கமான திரைப்படங்களிலிருந்து விலகி நேர்த்தியாகவும், கடுமையாகவும் உழைத்து ‘எலக்சன்’ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் மே 17ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நிச்சயம் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.”  இவ்வாறு விநியோகஸ்தர்   சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசினார்.