சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரபலமான ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் கலை வண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகமான க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தை பிரபல இயக்குநர் நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் நடிகர் விக்ரமின் தாயாரான திருமதி ராஜேஸ்வரி ஆகியோர் ஊடகங்களின் முன்னிலையில் துவக்கி வைத்தனர்.
இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள், நிகழ்ச்சியில் குத்து விளக்கைக் தீபத்தை வரைந்து ஏற்றினார்கள் .
நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் “நாம் ஏதாவது புதுமையாக செய்ய முயன்றால் அதை முந்திக் கொண்டு செய்ய இங்கே கமல்ஹாசன் , ஏ.பி.ஸ்ரீதர் போன்ற பலபேர் இருக்கிறார்கள் நானும் ரவுடிதான் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை தனியாக எடுத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தசாவதாரத்தின் பல்ராம் நாயுடுவை தனியாகப் பிரித்து ஒரு படமாக்கி கமல் அந்த வேலையை ஆரம்பித்து விட்டார் . குத்துவிளக்கு ஏற்றுவதை நெருப்பு இல்லாமல் ஓவியமாக எதாவது ஒரு நிகழ்ச்சியில் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் . ஆனால் இங்கே ஸ்ரீதர் செய்து விட்டார். இந்த ட்ரிக் ஆர்ட் மியூசியம் உண்மையிலேயே ஒரு சுவாரஸ்யமான அனுபவம் ” என்றார் .
நிகழ்ச்சியில் பேசிய ஏ.பி.ஸ்ரீதர் “இதுபோன்ற தந்திரக் கலை ஓவியக் காட்சியகங்கள் உலகம் முழுக்க பனிரெண்டு நாடுகளில் 42 இடங்களில் இது இருக்கிறது . பார்வையாளரின் பங்களிப்பு இல்லாமல் இவை முழுமை அடையாது . இந்தியாவில் இதுதான் முதல் முதல் . அடுத்து பெங்களூர், மும்பை உள்ளிட்ட இடங்களிலும் இதை அமைக்க இருக்கிறேன் . இங்கே பெரியவர்களுக்கு கட்டணம் 150 ரூபாய். சிறியவர்களுக்கு 100 ரூபாய்” என்றார்.
இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கிய ஸ்ரீதர் காரைக்குடி அருகில் இருக்கும் பள்ளத்தூர் எனும் ஒரு கிராமத்தில் பிறந்தவர். இவர் ஒரு சிறந்த ஓவியர், யாரும் துணியாத பாதையில் பயணிப்பதே இவருக்குப் பிடித்தமானது. இதுவரை அவர் 62 ஓவியக் கண்காட்சிகள் வைத்துள்ளார். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இவரது ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. வித்தியாசமான சிந்தனையுடன், புதுமையான தொழில்நுட்பத்துடன் இவர் படைக்கும் ஓவியங்கள் கமலஹாசன், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளை அலங்கரித்துள்ளன.
இவரது ஓவியங்கள் மாபெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் பிரதான தேர்வாக இருக்கிறது. விருதுகள், பிரபலங்களின் பாராட்டுகளோடு இவர் ஓய்ந்துவிடவில்லை, என்றென்றைக்கும் புதிய உற்சாகத்துடன் புதிய புதிய விஷயங்களைப் படைக்கும் ஆர்வத்துடன் ஓடிக்கொண்டே இருக்கிறார்.
இதுபோன்ற எண்ணற்ற புதுவகையான படைப்புகளை நமக்காக படைக்க விரும்பும் ஸ்ரீதரின் வேட்கை என்றைக்கும் தணியாது. இப்படிப்பட்ட சிறப்புகளை கொண்ட ஏ.பி. ஸ்ரீதர் அமைத்துள்ள இந்த தந்திரக் கலை ஓவியக் காட்சியகத்தை இயக்குநர்- நடிகர் ஆர். பார்த்திபன் துவங்கி பல்வேறு ஓவியங்களுடன் இணைந்து தோற்றம் காட்டினார்.