ஆர்.கே. ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் .தன்னுடன் இளவரசு, தலைவாசல் விஜய்,மீனாட்சி தீட்ஷித்தைச் சேர்த்துக் கொண்டு சமூக விரோதிகளை களையெடுத்துச் சுட்டுப் பொசுக்கி வருகிறார்.
அந்தச் சமூக விரோதிகளில் அரசியல்வாதிகள். காண்ட்ராக் டர்கள் மட்டுமல்ல போலீஸ் அதிகாரிகளும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளது தெரிகிறது.
தன் பணியை விடாமல் தொடர்கிறார் ஆர்.கே. ஆனால் அந்த ரகசியக்
கூட்டாளிகள் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதற்கும் இடையூறு வந்தால் விட்டு விடுவார்களா?
அவர்கள் சதியால்ஆர் கே.மீது அவர் வேலை பார்க்கும் போலீஸ் துறையினரே பழிபோடுகிறார்கள். திசைதிருப்பி குற்றவாளியாக்க சதித்திட்டம் தீட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவரையே ரகசியமாகப் போட்டுத் தள்ள திட்டம் போடுகிறார்கள்.
இந்த மோதல் பகையில் தன் பாசமுள்ள தாயை இழக்கிறார்ஆர்.கே. திடீர் திருப்பமாக அவரே நேரில் சரண் அடைந்து தன்னிலையை நிரூபிக்கிறார். அதற்குள் எதிரிகள் கூட்டணி வலுப்பெற்று வெல்ல முயல்கிறது. இதில் ஆர் கே.ஜெயித்தாரா அவரை உருகி உருகிக் காதலிக்கும் முறைப்பெண் காதல் என்னானது என்பதே ‘என் வழி தனி வழி’ யின் க்ளைமாக்ஸ்
படத்தில் என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக ஆர்.கே மிடுக்குடன் முறுக்குடன் வந்து மிரட்டுகிறார். அவருடன் துணைபுரியும் இளவரசு, மீனாட்சி தீட்ஷித்தும் பலே கூட்டணிதான்.
இந்த சமூக விரோதக் கூட்டணியும் மிரட்டுகிறது. போலீஸ் அதிகாரி ஆசீஷ் வித்யார்த்தி ,முரட்டு ராதாரவி, அட்டகாச வில்லன் ராஜீவ்கிருஷ்ணா என பலரும் பயமுறுத்துகிறார்கள்.
குறிப்பாக அரசியல்வாதியாக வரும் ரோஜாவின் பாத்திரம் தெலுங்கு வாடை வீசினாலும் ரசிக்க வைக்கிறது.இனி இப்படி இவர் கலக்குவார்.
போலீசுக்கான விறைப்பு குறையாத கதையால் அதைச் சொன்ன விதத்தால் நிமிர்ந்து அமர வைக்கிறார் இயக்குநர் ஷாஜி கைலாஸ்.
படத்தில் தம்பி ராமையா, சிங்கமுத்து ஒரு பக்கம் காமெடி கல்லா கட்டுகிறார்கள். நாயகனின் அம்மாவாக வந்து சீதா இறந்து அனுதாபத்தை அள்ளுகிறார்.
விசு,விவேக், அன்பாலயா பிரபாகரன், மதன்பாப், ராஜ்கபூர்,கராத்தேராஜா, அஜய்ரத்னம், டி.பி. கஜேந்திரன். போன்ற நட்சத்திரக் கூட்டமே பட்டாளமாய் இருக்கிறது. அனைவரையும் மேய்த்து தினிபோட்டு இயக்குநர் வேலைவாங்கியிருக்கிறார்.மீனாட்சி தீட்ஷித்தை அழகாகக் காட்டி ரசிக்க வைக்காமல் துப்பாக்கி தூக்க வைத்துள்ளார். சமூக விரோத போலீஸ் ஆசீஷ் வித்யார்த்தியை அவர்தான் போட்டுத் தள்ளுகிறார்.
பூனம் அழகு மயிலாக வருகிறார். உருகி உருகி சுற்றும் முறைப் பெண்ணாக வருகிறார் வெளிநாடுகளில் டூயட் பாடி அழகு காட்டி போய் வருகிறார். ஆனால் ஆக்ஷன் பரபரப்பில் அவரை மறந்து விடுகிறோம்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வைரமுத்து வரிகளில் பாடல்கள் கவனம் பெறுகின்றன.
பரபர காட்சிகளில் நாயகன் வில்லன்கள் மோதல்கள் துரத்தல்களில் மட்டுமல்ல பாடல் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் ராஜரத்னத்தின் உழைப்புதெரிகிறது.
இந்த நாட்டின் அமைப்புக்கு எதிராக இறுதிக் கட்ட காட்சிகளில் ஆர்கே பேசும் வசனங்கள் சரியான சாட்டையடி.அதில் வசனகர்த்தா பிரபாகர் தெரிகிறார்.
அரசு கட்டடங்களை தனியாரிடம் காண்ட்ராக்ட் விடாமல் வெளிநாடுகளைப் போல இராணுவம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது கைதட்டல்களை அள்ளுகிறது.
போலீசுக்கான தனி நீதிமன்றம் தொடர்பான வசனமும் விறு விறு.