தொலைக்காட்சி சேனல்களில் வரும் ‘அழுவாச்சி’ தொடர்களை பெரும்பாலான ஆண்கள் பார்ப்பதில்லை என்றாலும் பெண்கள் மத்தியில் இத்தொடர்கள் பெரிதும் செல்வாக்கு பெற்றுவிட்டன.
பெண்களை மட்டுமே கவரும் விதத்தில் எப்படி கதை, திரைக்கதை வசனம் போன்றவை அமைக்கப்படுகின்றன. குறிப்பாக ஒரு கதையை எப்படி இவ்வளவு நீஈஈஈளமாக இழுக்கிறார்கள்? இந்த சந்தேகத்தை பிரபல தொடர்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் போன்று ஆயிரக்கணக்கான எபிசோடுகளில் பங்கு பெற்ற எழுத்தாளர் குரு சம்பத் குமாரிடம் கேட்டோம். எப்படி எப்படி இழுப்பது எப்படி என்று கூறுமாறு கேட்டோம். காட்சிகளிள் ’இழுவை’ திறமையும் ‘அழுகை’ புலமையும் வர எப்படி தயாரானீர்கள்? என்றும் விளக்கக் கேட்டோம்.
இதோ குரு சம்பத்குமார்
“இழுவைன்னு நினைக்காதீங்க முன் கதை சொல்றேன். எங்க குடும்பம் பெரிய குடும்பம் எட்டு பேர் அண்ணன் தம்பி. வீடே ஒரு கூட்டமா இருக்கும், நிறைய பேசுறது… நிறையபேர்னு எங்க குடும்பம் கலகலப்பா இருக்கும்.
எல்லாரும் கல்யாணமாகி போனபிறகும் போனவங்க… வர்றவங்கன்னு வீடு எப்பவும் கூட்டம் குறையாது. எட்டு பேருக்கும் கல்யாணமானதும் சம்பந்தி அவங்க சம்பந்தப்பட்டவங்கன்னு இன்னும் சொந்த பந்தக் கூட்டம் விரிவாச்சு.
பிலிமாலயா வேலை போகும்முன்பு கலைப்புலி தாணு அவர்களின் வினியோக அலுவலகத்தில் வேலை பார்த்தேன். அப்போது திரையுலக அனுபவம் கிடைச்சுது. அவரது ‘புதுப்பாடகன்’ ,‘கூலிக்காரன்’, ‘நல்லவன்’ படங்களில் வேலை பார்த்தேன். சினிமா புரிய ஆரம்பிச்சுது.
யாரிடமாவது உதவி இயக்குநராக சேரலாம்னு நினைச்சேன். எனக்குப் பிடிச்ச கே. பாக்யராஜ்கிட்ட சேர ஆசைப்பட்டேன், முடியல. பத்திரிக்கையாளராகி அவரைப்பேட்டி எடுக்க மட்டுமே முடிஞ்சது. ஜெமினி சினிமா, பிலிமாலயா, சினிமா எக்ஸ்பிரஸ், பேசும் படம், குங்குமம், வண்ணத்திரை என பல பத்திரிக்கைகளில் 12 வருஷம் எழுதினேன். பிறகு சினிமா பி.ஆர்.ஓ.வா சில படங்கள் செஞ்சேன். ‘ஒரு தாயின் சபதம்’ ‘எங்க வீட்டு வேலன்’ போன்ற டி.ராஜேந்தர் படங்கள். இதுக்கு கலைஞர் கையில் நாலுமுறை கேடயம் வாங்கியிருக்கிற அனுபவமெல்லாம் உண்டு.
இந்த நேரத்துல நான் படிச்ச வண்ணாரப்பேட்டை கார்ப்பரேஷன் பள்ளி தமிழாசிரியர் அழகர்சாமி அவர்களைச் சொல்லணும். என் தமிழார்வத்த பார்த்த அவர் உனக்கு தமிழ் நல்லா வருதுடா… நீ எழுத்தாளனா போடா…ன்னு ஊக்கப்படுத்தினார். அந்த வகையில் உன் திறமையை வளர்த்துக்கோடான்னு எனக்கு வழி காட்டினார். நிறைய கதை, கவிதை போட்டிகளில் பங்கு பெற்று பரிசு வாங்கியிருக்கேன்.
எனக்கு சின்ன வயசிலிருந்தே ஆக்ஷன், அடிதடி சண்டைப் படங்கள் பிடிக்காது. அப்போதே எம்.ஜி.ஆர் படங்களைவிட சிவாஜி படம் பார்த்து அழறதுதான் பிடிக்கும். கே.எஸ் கோபாலகிருஷ்ணன், பாக்யராஜ் படங்கள் மாதிரி கதையம்சம் உள்ள படங்களைத்தான் விரும்பிப் பார்ப்பேன். இப்படியே கதையார்வத்துடந்தான் வளர்ந்தேன்.
நான் முதன்முதலில் தி. ஜானகிராமனின் ‘வடிவேலு வாத்தியார்’ கதைக்கு 13 அத்தியாயம் உள்ள நாடகமாக்கி தூர்தர்ஷனுக்கு கொடுத்து அது 13 வார நாடகமாக வந்திச்சு. அது 26 வாரம் வந்திச்சு. அதுதான் முதல் திரைக்கதை அனுபவம். இப்படி சின்னத்திரைப்பக்கம் வந்தேன்.
நான் முதலில் ஏவிஎம் தயாரிச்ச ‘சொந்தம்’ தொடரில் இணை வசனம் எழுதினேன். அதுக்கு வசனம் எழுதியவர் பீட்டர் செல்வக் குமார். பிறகு ‘வாழ்க்கை’ தொடர் அதிலும் இணை வசனம் எழுதினேன். 400 எபிசோடுகள். பிறகு ‘நம்பிக்கை’ தொடருக்கு திரைக்கதை வசனம் தேவிபாலாவுடன் எழுதினேன். தெலுங்கில் ‘ஜோதி’ என்றொரு தொடர் 520 எபிசோடுகள். ஆனந்த விகடன் தயாரிப்பில் ‘அவர்கள்’ சன் டிவியில் 480 எபிசோடுகள். பாலாஜி டெலி போட்டோ நிறுவனம் தயாரிச்ச ‘கணவருக்காக’ தொடரில் 465 எபிசோடுகள் வசனம் எழுதினேன். இது பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்ல எனக்கு நல்ல பெயரையும் வாங்கிக்கொடுத்திச்சு. பிறகு ‘கஸ்தூரி’ 800 ,ஆனந்த விகடனில் ‘தென்றல்’ 200. ’இளவரசி’ 700 ‘செல்லம்’ 800 தாண்டி போய்க்கிட்டிருக்கு. தெலுங்கில் ‘மகாலட்சுமி’ 560 எபிசோடுகள்.
நான் சுமார் 5000 எபிசோடுகளுக்கு கதை என்றும், திரைக்கதை திரைக்கதை என்றும், திரைக்கதை வசனம் என்றும் பல்வேறு வகையிலும் பங்கு பெற்ற அனுபவம் உண்டு.
இத்தனை ஆயிரம் தொடர்கள்-எபிசோடுகள் அனுபத்தில் நான் வியந்தவங்க மூணுபேர். முதலில் ஏவிஎம் சரவணன் அவர்கள். நல்ல கதை ஞானம் மிகவும் ரசிக்கிற மனசு உள்ளவர். எந்தக்காலத்திலும் எழுத்தாளர்களை காயப்படுத்திடமாட்டார். எதையும் நாகரிகமா அணுகும் பண்பாளர். கதை வசனம் சரியா வர, நிறைய உதாரணங்கள் மாதிரியாகத் தருவார். கதைகளில் காட்சிகளில் குழப்பம் வந்தபோது பழைய படங்களில் எப்படி பிரச்சனையை அணுகியிருக்காங்கன்னு பார்க்கச் சொல்வார். எனக்கு ஒருமுறை ரங்கோன் ராதா வீடியோ கேசட்டைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார்.
இன்னோரு மறக்கமுடியாத மனிதர் ஆனந்த விகடன் பா. சீனிவாசன் அவர்கள். என்மீது மிகுந்த அன்பும் அக்கறையும் வச்சிருப்பவர். பகல்ல கதை பேசிட்டு வந்திருப்போம். இரவில் எத்தனை மணிக்கு வேணும் னாலும் போன் செஞ்சு தெளிவு படுத்தச் சொல்வார். அந்த அளவுக்கு ஊக்கமுள்ள மனிதர். தன் வீட்டுக்கே அழைச்சு டைனிங் டேபிள்ல சாப்பிடச் சொல்லும் அளவுக்கு, தன் கையால் பரிமாறும் அளவுக்கு எழுத்தாளர்களை மதிப்பவர்.
மறக்க முடியாத மற்றோருவர் ராதிகா மேடம். கதை சொல்லும் போதே கவனமா கேட்பார். அவர் எதாவது திருத்தம் சொன்னா மிகச் சரியா இருக்கும். திரைக்கதை மேம்படுத்த டிப்ஸ் கொடுப்பார்.
ராதிகா மேடத்தைப் பொறுத்தவரை நான் பிரமிப்பா மதிக்கிற விஷயம் என்ன தெரியுமா? நாம சம்பாதிச்சா போதும்னு ஒதுங்கிட நினைக்காம ஆயிரம் குடும்பங்கள் நேரடியா மறைமுகமா அவங்களை சார்ந்திருக்குனு அந்த நிறுவனத்துக்காக இரவுபகலா உழைக்கிறாங்க. அவங்க தாம் முதலாளி, இருந்தாலும் காலையில் 8மனிக்கு டப்பிங் பேச வந்திடுவாங்க. 1 மணி முதல் 2 மணி வரை ஆபிஸ் வேலைகள். இரவு 12 மணிக்கு பார்த்தா லண்டன் சிங்கப்பூர்னு பறப்பாங்க. அப்படி ஒரு ஊக்கமான உழைப்பாளி.
சீரியலில் இழுப்பதுங்கிறதை ஏத்துக்கமாட்டேன். கதை வளர்ச்சின்னு சொல்லலாம். கதை வளர்க்கிற விஷயம் பிரச்சனைதான். பிரச்சனைகள், சிக்கல்கள், இடையூறுகள், எவ்வளவோ கேள்விப் படறோம். குணச்சித்திரங்களின் நடைஉடை , பாவனைகளில்கூட பேச்சு, செயல் ஏன் சிந்திக்கிறதில் கூட பிரச்சனைகள் வரும். அப்படி புதுசு புதுசா பிரச்சனைகள் முடிச்சுகளை உண்டாக்குறதும் அவிழ்க்கிறதும் தான் சீரியல் ரகசியம்.
சின்ன வயசிலிருந்தே கதை கேட்கிறது எனக்குப் பிடிக்கும். அப்போதிலி ருந்தே நான் அம்மா பிள்ளை. எப்பவும் அம்மா கூடவே இருப்பேன். அம்மாவைப் பார்க்க வரும் அக்கம்பக்கம் வீட்டுக்காரங்க அத்தனை பேரும் ஏதாவது.. யாரைப் பற்றியோ கதை சொல்வாங்க. சிலநேரம் அந்தக் கதை முடியாது, மறுநாள் தொடரும். இப்படி ஆளாளுக்கு எங்கம்மாகிட்ட சொல்ற கதை எனக்குள் அப்போதே ஒரு தொடர் மாதிரி ஓடும். காதில் கேட்கிற சீரியல் மாதிரி இருக்கும்.
எங்கள் அம்மாகிட்ட இப்படி நிறையபேர் தங்கள் கதை அக்கம்பக்கம் கேள்விப்பட்டது, பேசிக்கிட்டதுன்னு நிறைய விஷயங்கள் சொல்வாங்க. சிலநேரம் நான் விளையாட்டா இருப்பேன். சில சுவாரஸ்யமா இருக்கும், கவனிப்பேன். இப்படி பல கதைகள் குடும்ப் பிரச்சனைகள். எனக்குள் பதிவாய்ட்டே இருந்திருக்கு. அப்போ பொழுது போக்கா இருந்தது. இப்போ எனக்கு உதவியா இருக்கு.
படிச்சு முடிச்சதும் எழுத்துமேல ஆர்வம். சினிமாவுல சேரணும்னு ஆசை வந்திச்சு. முதல்படியா பத்திரிக்கையில வேலை கிடைச்சுது. ‘ஜெமினி சினிமா’வுல வேலை பார்த்தான். ‘பிலிமாலயா’வில் பிறகு சேர்ந்தேன்.
எந்த செய்தியையும் கதை போல சொல்றது எனக்குப் பிடிக்கும். அது பழக்கமா வழக்கமா ஆகி இன்னைக்கு வாழ்க்கையா ஆய்டுச்சு. பிலிமாலயா ஆசிரியர் ஏதாவது வேலை கொடுத்தால்கூட… வந்து விளக்க ஆரம்பிப்பேன் கதை போல. எனக்கு கதை சொல்லாதய்யா… விஷயம் என்னாச்சுன்னு கேட்பார். அப்படி கதை சொல்றது எனக்கு ரத்தத்தில ஊறிடுச்சு. எனக்கு கதை கேட்கிறதுகூட பொசுக்குன்னு முடிஞ்சிடறது பிடிக்காது நீளமா ராமாயணம். மகாபாரதம் கேட்கிறது பிடிக்கும். நீளமானதுன்னா சுவையா இருக்கணும். அப்போ இழுவையா தோணாது