‘எலக்சன்’ விமர்சனம்

உறியடி விஜய் குமார்,  ‘அயோத்தி’ புகழ் ப்ரீத்தி அஸ்ரானி , ரிச்சா ஜோஷி, திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியன், நாச்சியாள் சுகந்தி ஆகியோர் நடித்துள்ளனர் . ஆதித்யா தனது ரீல் குட் பிலிம்ஸ் பேனரில் படத்தைத் தயாரித்திருக்கிறார்.சேத்து மான் படம் இயக்கிய தமிழ் இயக்கி உள்ளார். 96 படப்புகழ் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் அரசியல் பின்னணியில் இந்தக் கதை உருவாகியுள்ளது.ஒரு தேர்தல் என்பது குடும்பத்திற்குள், ஊருக்குள் சக ,மனிதர்களுக்குள் ,நட்பு வட்டத்திற்குள் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்சிகளாக்கிக் காட்டுகிறார்கள். நண்பன் துரோகியாவதும் துரோகி துணைவன் ஆவதும் அரசியல் இயல்பு. தேர்தல் காலங்களில் உள்ளூரில் நடக்கும் நிகழ்ச்சிகள் எப்பொழுது உணர்ச்சிகரமான ஒன்றாக மாற்றப்படுகிறது என்பதையும் இப்படத்தில் கூறியுள்ளார்கள்.

அரசியல் அறியாத அப்பாவி இளைஞன் நடராஜன் என்கிற ராசு எப்படி அரசியல் பொறியில் சிக்கி அடிபட்டுத் தோற்று வெளியேறிய பின்னும் அவனை எப்படி அரசியல் உள்ளே கொண்டு வந்து பழிவாங்குகிறது .அதனை எப்படி எதிர்கொள்கிறான்? எதிர்பாராத முனைகளில் இருந்து வரும் தாக்குதல்களையும் கெடு விளைவுகளையும் எப்படிச் சமாளிக்கிறான் என்பது தான் கதை.

2006 ல் தொடங்கும் கதை 2016 வரை போகிறது. 119.45நிமிடங்கள் கொண்ட இப்படம்,” நம்மள ரவுண்டு கட்டிட்டாங்க. எத்தனை பேர் வந்தாலும் மொத்தமா பொலி போட்ரு ”என்ற காட்சியுடன் தொடங்கி,முன் கதை காட்சிகளாக விரிந்து அதே காட்சியில் முடிகிறது.படம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் முதல் பாட்டு வருகிறது பிறகு காட்சிகள் விறுவிறு என்று செல்கின்றன.

படத்தில் ராசு என்கிற நடராஜனாக  உறியடி விஜயகுமார், ஹேமாவாக ப்ரீத்தி அஸ்ராணி, செல்வியாக ரிச்சா ஜோஷி, நல்ல சிவமாக ஜார்ஜ் மரியான் , கனியாக பாவெல் நவகீதன், சுதாகராக திலீபன், மூர்த்தியாக ராஜீவ் ஆனந்த், தியாகுவாக குலோத்துங்கன் உதயகுமார் நடித்துள்ளனர்.

அரசியலில் சிக்கிக் கொள்ளும் வட்டார இளைஞனாக நாயகன் உறியடி விஜயகுமார் நடித்துள்ளார். பாசமுள்ள மகனாக ,நேசம் பொங்கும் காதலனாக, பொறுப்புள்ள கணவனாக, துடிப்பான அரசியல் இளைஞனாக,விசுவாச நண்பனாக, சிறுமை கண்டு ஆவேசம் கொள்ளும் இளைஞனாக என்று படத்தில் கிடைத்த பல்வேறு நடிப்பு தருணங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.பல்வேறு தருணங்களில் அரசியலை எதிர்கொள்ளும் பாத்திரத்தில் அவர்  தனது உணர்ச்சிகளைக் காட்டி நடித்துள்ளார் .குறிப்பாக இரண்டாவது பாதியில் அவர் சீண்டப்பட்டு சீறும் காட்சிகள்,வேறு வழியின்றி வன்முறையில் இறங்கும் காட்சிகள் அவரது நடிப்புக்கு சாட்சியங்கள்.

அவரது மாமனாக  கனி பாத்திரத்தில் வரும் பாவெல் நவகீதன் நடிப்பில் பல உயரங்களை இதில் தொட்டுள்ளார்.கலங்க வைக்கும் வகையில் அற்புதமான தருணங்கள் அவருக்கு வாய்த்துள்ளன.நாயகி ப்ரீத்தி அஸ்ராணி வெறும் ஷோகேஸ் நாயகியாக இல்லாமல் நடிக்கவும் செய்துள்ளார்.அரசியல் என்பது போர் மாதிரி அதில் ஜெயிப்பது தான் முக்கியம் என்ற கொள்கையோடு இருக்கும் சுதாகர் பாத்திரத்தில் நடித்துள்ள திலீபன் அந்தப் பாத்திரத்தின் பாதையில் வெற்றிகரமாகப் பயணம் செய்துள்ளார்.கட்சி விசுவாசி நல்ல சிவமாக வரும் ஜார்ஜ் மரியான் கதாபாத்திரம் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் உண்மைத் தொண்டனை நினைவூட்டும்.
படத்தில் வெவ்வேறு பாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்களும் நிஜ பாத்திரங்கள் போல் தங்கள் நடிப்பால் நம்ப வைத்துள்ளனர்.

படத்தில் சமகால சமுதாயத்தில் காணும் பல்வேறு கதாபாத்திரங்கள் உலா வருகின்றன. படம் பார்ப்பவர்கள் இந்தப்படத்தின் கதையை ஒவ்வொருவரும் தங்களோடு இணைத்துக் கொள்ள முடியும்.கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்கள், காசுக்காக கட்சிகளில் பணியாற்றுபவர்கள், கட்சி மூலம் காசு சம்பாதிப்பவர்கள், கட்சிகளில் பண முதலைகள் செலுத்தும் ஆதிக்கம் , அரசியல் என்றாலே எதுவென்று தெரியாத நபர்கள், ஓட்டுகளைப் பிரிக்க அரசியல்வாதிகளால் களமிறக்கப்படும் சாமானியர்கள்,தேர்தலில் தாக்கம் செலுத்தும் மத -ஜாதி அரசியல், பண அரசியல், பிண அரசியல் அனைத்தையும் காட்டி உள்ளாட்சித் தேர்தலை காட்சிப்படுத்தியுள்ளார் தமிழ்.

வெயில் சுட்டெரிக்கும் வேலூர் பகுதியில் கதை நடக்கிறது .அதற்கு ஏற்றார் போல் கதையில் சம்பவங்களும் காட்சிகளும் சூடு பிடித்து இறுதிவரை அதைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.வேலூர் மாவட்டத்தின் வட்டார வழக்கும் படத்திற்குப் புதிய நிறத்தை கொடுத்துள்ளது.படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நிறைய கதாபாத்திரங்கள், கூட்டம் என்று இடம் பெறுகின்றன.கதையோட்டத்திற்கு ஏற்ற மகேந்திரனின் ஒளிப்பதிவு படத்தினை நம் முன் நடக்கும் வாழ்க்கையாக மாற்றி உள்ளது .கோவிந்த் வசந்தாவின் இசையும் பக்க பலமாக அமைந்துள்ளது.

அரசியலில் தொண்டர்களை பயன்படுத்திக் கொள்வதைப் பற்றிய ஒரு வசனம் வருகிறது இப்படி,”இல்லாதவன் உழைப்பான் இருக்கிறவன் அறுவடை செய்வான்”,”அரை காசுக்கு போன மானம் அரை பவுனு கொடுத்தாலும் வராது ”இப்படி,’ஆங்காங்கே தெறிக்கும் அர்த்தமுள்ள வசனங்களும் பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தருகின்றன.வசனம் அழகிய பெரியவன், தமிழ், விஜயகுமார்.

எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு வன்முறையாக உள்ளது.படத்தின் இறுதிக் காட்சியும் பெரிய வன்முறையில் முடிகிறது.இறுதியில் அரசியல் என்பது தேர்தல் என்பதும் சுய கௌரவப் போட்டியோ குடும்ப கவுரவமோ தனி மனித அகங்காரத்தின் அடையாளமோ அல்ல அது மக்களுக்கானது, சமூகநீதிக் கானது என்று கருத்து சொல்கிறார்கள்.

திரையரங்கில் ஒரு தேர்தல் அனுபவத்தைப் பெற எலக்சன் படத்தைக் காணலாம்.