நடிகர் சூர்யாவுக்கு குரல் கொடுத்தேன் : டப்பிங் கலைஞர் ராமு

ramu-meesaiதிரைப்படம் என்பது கூட்டுமுயற்சி, பலரது உழைப்பில் விளைந்து, வியர்வையில் நனைந்துதான் அது உருவாகிறது. சினிமாவில் 24துறையினர் பணியாற்றுகின்றனர். முகம் தெரிவது சிலர்தான். திரைக்குப்பின் இருந்து உழைப்பவர்கள் பலர். அவர்களில் முக்கியமானவர்கள் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப்படும் பின்னணிக் குரல் கலைஞர்கள்.

படம் பார்க்கும் பலருக்கும் தெரியாது. பார்ப்பது நட்சத்திரங்களின் தோற்றத்தை  மட்டும்தான் என்பதும்   பலருக்கும் குரல் வேறு ஒருவருடையது என்பதும்.

இப்படி பின்னணித் துறையில் பல ஆண்டுகாலம் பலபடங்கள், டிவி தொடர்கள் என்று குரல் கொடுத்து வருபவர் பின்னணிக் குரல் கலைஞர் ராமு.

அண்மையில் வெளியாகியுள்ள ‘சங்கராபரணம்’ படத்தில் சோமயாஜுலுவுக்குக் குரல் கொடுத்திருப்பவர் இவர்தான்.

ராஜ்டிவியில் ‘சிந்துபைரவி’ ‘மண்வாசனை’ ,’கருத்தம்மா’ சன் டிவியில் ‘பைரவி’, ‘மகாபாரதம்’ என்று பல தொடர்களில் பேசிவருபவர்.

ராமுவை சந்தித்த போது…

உங்கள் முதல் டப்பிங் அனுபவம் எப்போது? எப்படி?

அதைச் சொல்லும் முன்பு எங்கள் அப்பா பற்றிச் சொல்லவேண்டும். அப்பாபெயர் திருவேங்கடம். பூர்வீகம் பரமக்குடி கோட்டையூர்.அவரை கோட்டையூர் திருவேங்கடம் என்றால் தெரியும். அவர் ஒரு எழுத்தாளர். பல மொழிமாற்றுப் படங்களுக்கு வசனம் எழுதியவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘மாடப்புறா’ போன்ற படங்களில் பணியாற்றியவர்:

அவர் டப்பிங் படங்களுக்கு எழுதிக் கொண்டு இருந்த போது நான் அவரிடம் உதவியாளனாக சேர்ந்தேன்.

நான் சிறுவனாக இருந்த போதே சிரஞ்சீவி ,ராதிகா நடித்து தமிழில் வந்த ‘புரட்சி வீரன்’ படத்தில் சிறுவயது சிரஞ்சீவிக்குப் பேசினேன். அதுதான் நான் முதலில் டப்பிங் பேசியபடம்.

எழுத்தாளருக்கு உதவியாளராக பணியாற்றி விட்டு டப்பிங் பேசவந்தது ஏன்?

அப்பாவைத் தொடர்ந்து அப்பாவிடம் உதவியாளராக இருந்த மருதபரணி, மயிலைகுமார் போன்றவர்களிடமும் உதவியாளராக நான் பணியாற்றினேன் வசன உதவியாளராகஆரூர்தாஸ் தேவநாராயணன், செல்வா போன்றோரிடமும் பணியாற்றினேன்.அதில் ஈடுபட்ட போது டப்பிங் பேச ஈர்ப்பு வந்துவிட்டது. டப்பிங் பேசவந்து விட்டேன்.

எத்தனை படங்களுக்கு பேசியிருப்பீர்கள்?

சுமார் ஆயிரம் படங்கள் பேசியிருப்பேன் இதில் கன்னடத்திலிருந்து தமிழ் ,தெலுங்கிலிருந்து தமிழ்,ஆங்கிலத்திலிருந்து தமிழ் என பலபடங்கள் பேசியிருப்பேன்.கதாநாயகன், வில்லன், காமெடியramu-rajiniன், சிறு நடிகர் என பலதரப்பட்ட கலைஞர்களுக்கும் குரல் கொடுத்திருக்கிறேன். நான் தெலுங்கு ,தமிழ் நடிகர்களுக்கு  மட்டுமல்ல ஹாலிவுட் நடிகர்களுக்கும் பேசியிருக்கிறேன்.

குறிப்பிடத்தக்க படங்கள்?

‘ஸ்பைடர்மேன்’ வில்லன், ‘பைரேட்ஸ்ஆப் கரீபியன்’, பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ், மிஷன் இம்பாசிபிள் போன்ற படங்களின் பலபாகங்கள்,’அனகோண்டா’,டைட்டானிக் போன்ற எக்கச்சக்க ஆங்கிலப் படங்கள் தமிழில் வந்த போது பேசியுள்ளேன்.நார்னியாவில் சிங்கத்துக்குக் கூட பேசியுள்ளேன்.
பல டிவி தொடர்களுக்கும்  பேசியுள்ளேன்.ஜெட்டக்ஸ், டிஸ்னியின் பல கார்ட்டூன் தொடர்களுக்கும் பேசியுள்ளேன்.இதில் ‘டிமோன் அண்ட் கும்பா’ பிரபலம்.
பிரபல எல்லா நடிகர்களுக்கும் பேசியிருக்கிறேன். ‘ஆறு’ படத்தில் சூர்யாவுக்குக்கூட  ட்ராக் பேசியுள்ளேன்.ஆனால் அது படத்தில் வராது. அவர் பேசுவதற்கு மாதிரிக்காக  ட்ராக் பேசியுள்ளேன்

டிஸ்கவரி, ஹிஸ்டரி சேனல்களில் பல நிகழ்ச்சிகளுக்கு வாய்ஸ் ஓவர் எனப்படும் வர்ணனைக்குரல் கொடுத்திருக்கிறேன்.பல டிவி தொடர்கள், மேடை நாடகங்களில் நடித்தும் வருகிறேன்

டப்பிங் பேசுபவர்களுக்கு என்ன தேவை?

குரல் வளம், ஞாபகசக்தி, மொழி உச்சரிப்பு வேண்டும். தமிழில் சரியாக பேசவராததை பெருமையாகக் கூறுகிறார்கள். அதில் என்ன பெருமை?

தமிழில் பல பேருக்கு ல,ள,ழ சரியாக வருவதில்லை. இதன் வேறுபாடு புரிவதில்லை. டப்பிங் பேசு உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும். பேசும் நடிகர், கதை,பாத்திரம், பேசும்   சூழல் எல்லாம் தெரியவேண்டும். பேசும்போது தொனி முக்கியம். என்ன என்பதைக்கூட பல தொனியில் பல விதத்தில் கேட்கமுடியும்.

டப்பிங் பேசுபவர்கள் தண்ணீர் மாதிரி எதில் ஊற்றினாலும் பாத்திரத்துக்கு ஏற்ப நிரம்பிக் கொள்ள வேண்டும். இயக்குநர் எதிர்பார்க்கிறபடி பேச பொறுமை வேண்டும்.

இவர்கள் வெளியே தெரியாமல் இருளில் இருப்பதுபற்றி?

தொழில் அப்படிப்பட்டது வேறு வழியில்லை.காலம் மாறிவிட்டது. இப்போது பின்னணிக்குரல், சிஜி ஒர்க் பற்றி  எல்லாம் கொஞ்சம் ரசிகர்களுக்கும் தெரிகிறது.

குடும்பம் பற்றி…?
.நான் பிடித்துதான் இதைச் செய்கிறேன்.என்றாலும் மனைவி பார்கவியின் ஆதரவு உண்டு
சந்தோஷ் பாலாஜி, பிரசன்ன வெங்கடேஷ் என 2 மகன்கள்.. அவர்களும் டப்பிங் பேசி வருகிறார்கள்.’சந்தோஷ் சுப்ரமணியன்’படத்தில் பேசினார்கள்.
‘லிங்கா’ சிறுவயது ரஜினிக்குக்கூட  பேசினார்கள்.

மறக்க முடியாத அனுபவங்கள்..?

என் மகன்கள் நல்ல மிமிக்ரி கலைஞர்கள். முதலில் டிவியில் மிமிக்ரி செய்தவர்கள்  அவர்கள்தான். ஒரு முறை விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

ramu-sonsஅந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்க மனோரமா வந்திருந்தார். என் மகனைப் பற்றி விசாரித்து விட்டு என் அப்பாவைப் பற்றி பேசினார். எனக்கு மனோரமா என்று பெயர் வைத்ததே திருவேங்கடம் தான் அவரது பேரனா என்று கூறினார். ‘அந்தமான் கைதி’ நாடகத்தில் வைத்த போது அப்பா மனோரமா  எனப் பெயர் வைத்ததைக் கூறினார்.

‘சேது’ படத்தில்ஒரு காட்சியில்  கேலி செய்ய பெண் குரலில் ஸ்ரீமனுக்குப் பேசிய போதுஇவ்வளவு கம்பீர குரலை வைத்துக் கொண்டு பெண் குரலில் பேசுகிறீர்களே என்று பாலாசார் பாராட்டினார்.

சமீபத்தில் ‘சங்கராபரணம்’ இசை வெளியீட்டு விழாவில் 35 வருஷத்துக்கு முந்தைய படம் கோமயாஜுலுக்கு பாடும்போது குரலை மாற்றிப் பாடினேன். குரல் கொடுத்தவரும் வயதுக்கு ஏற்றபடி சிரமப்பட்டு குரல் கொடுத்துள்ளார். என்று எஸ்.பி.பி அவர்கள் மேடையிலேயே என்னைப் பாராட்டியது மறக்க முடியாதது.எஸ்.பி.பி.யின்அந்தப்  பாராட்டு எனக்கு ஊக்கம் தந்தது

முகம் மட்டும் காட்டும் நட்சத்திரங்கள் எல்லாம் கோடிகளில் குவிக்கிறார்கள்.பலருக்குக் குரல் கொடுக்கும் இவர்களுக்கு சொற்ப சம்பளமே வழங்கப் படுகிறது. . இருள் உலகில் இருக்கும் இவர்களுக்கு குரல் கொடுப்பவர் யார்.?

-ஆதி