கிரிக்கெட் விளையாட்டிற்கு பிறகு இந்தியர்களால் அதிகம் விளையாடப்படும் விளையாட்டுகளுள் ஒன்று இறகு பந்தாட்டம் எனப்படும் பேட்மிண்டன். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் வெல்லும் அளவிற்கு நாட்டம் பற்றிக்கொண்ட இவ்விளையாட்டில் சாமானிய குடும்ப பின்னணி உடைய, ஆர்வமிக்க குழந்தைகளும் பயிற்சி பெற்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையை சேர்ந்த சுபிகா ‘டி பேஸ் பேட்மிண்டன் அகாடமி’ தொடங்கி உள்ளார்.
பல்லாவரத்தை அடுத்த திருமுடிவாக்கத்தில் அமைந்துள்ள இப்பயிற்சி பள்ளியை இயக்குநர் பா.ரஞ்சித் சனிக்கிழமை துவக்கி வைத்துள்ளார். கபாலி பட குழுவினரும் பங்கேற்றனர்.
“ எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள நண்பர்கள் அனைவரும் தீவிர பேட்மிட்டன் ரசிகர்கள். அனைவரும் சேர்ந்து பல டோர்னமென்ட் விளையாடியுள்ளோம். இருப்பினும் உள்விளையாட்டு அரங்கில் எங்களுக்கு போதுமான பரிச்சயமும், பயிற்சியும் தேவைப்பட்டது. அதற்கென ஒரு அரங்கை அமைக்க ஆரம்பித்தோம். நாட் போக்கில் இதையேன் நமக்கு மட்டும் வைத்துக் கொள்வதென முடிவு செய்தோம். நம்மை போன்று விளையாட்டை நேசிப்போர்க்கும், ஆர்வமிக்க சிறார்களின் பயிற்சிக்கு உதவட்டுமே என்று எங்கள் பயிற்சியாளரிடம் அணுகி இதை ஒரு சர்வதேச தரத்திலான அம்சங்களை பொருத்தி நிறுவியுள்ளோம்.”
“ஒலிம்பிக்கில் இவ்விளையாட்டுக்கென பதக்கம் வென்றுள்ள PV.சிந்து போன்று. எங்களது பயிற்சிக்கூடம் மூலமும் மேன்மேலும் பல திறமைமிக்க பேட்மிண்டன் விளையாட்டு வீரர்களை நாட்டிற்கு அர்ப்பணிப்போம் என்ற நம்பிக்கையும், உறுதியும் கொண்டே நாள்தோறும் செயல்பட்டு வருகிறோம். இதை மேல்தட்டு மக்களுக்கான ஒரு விளையாட்டு என்றில்லாமல் அனைவருக்கும் சென்றடையும் வகையில் திட்டமிட்டுஉள்ளோம்.” என்றார் இப்பயிற்சி பள்ளியின் நிறுவனர்.