முந்திரிக்காடு ‘பட த்தில் வில்லனாக நடித்த நடிகர் சோமுவைச் சீமான் பாராட்டியுள்ளார்.
அண்மையில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘6 அத்தியாயம்’ இது தமிழ்ச் சினிமாவில் ஒரு வித்தியாசமுயற்சி என்று பாராட்டப்படுகிறது . இதில் ஆறாவது அத்தியாயத்தில் ‘சித்திரம் கொல்லுதடி’யில் அழுத்தமான பாத்திரத்தில் நடித்திருப்பவர் சோமு.
இவர் சாப்ட்வேர் உலகத்திலிருந்து திரையுலகத்துக்கு வந்திருப்பவர்.
இதோ சோமு தன்னைப் பற்றிக் கூறுகிறார்,
“நான் பள்ளி , கல்லூரி என்று படித்து சாப்ட்வேரில் புகழ் பெற்ற ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனக்குச் சின்ன வயது முதலே சினிமா என்றால் பிடிக்கும். அந்தக் கனவு உலகத்தில் நம் காலடி படாதா என்று ஏங்குவது உண்டு. நான் படித்து வேலைக்குப் போனதும் என் ஆர்வத்தை கலை நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்த ஆரம்பித்தேன். எனக்கு நடனத்தில் அபார ஆர்வம். அலுவலக நடனக் குழுவில் நான் அங்கம் வகித்து ஆடுவேன்.
இப்படிப் போய்க் கொண்டிருந்த போது கலைஞர் டிவியில் ‘நாளைய இயக்குநர்கள் ‘சீசன் தொடங்கியது அது பலருக்கும் திரையுலகக் கதவுகளைத் திறந்து விட்டதை யாவரும் அறிவர்.
நானும் ஒரு குறும்படத்தில் நடித்தேன் . அது சிறந்த நடிகருக்கான விருதையும் எனக்குத் தேடித்தந்தது. விருதை இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள் கையால் பெற்றேன். முதல் குறும்படத்திலேயே சிறந்த நடிகர் விருது ,அதுவும் திரையுலகில் சாதனை படைத்த பாக்யராஜ் அவர்களால் என் பதை எண்ணிப் பெருமையாக இருந்தது. நடிப்பில் இறங்கலாம் என்று சிறு நம்பிக்கையும் வந்தது. அதன் பிறகு நாளைய இயக்குநாகளுக்கே 5 குறும்படங்கள் நடித்தேன். வேறு மாதிரியும் என சுமார் 15 குறும்படங்களில் நடித்தேன்.
அப்படி ஒரு குறும்படமாக வந்த வாய்ப்பு தான் ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கிய ‘சித்திரம் கொல்லுதடி’. அதுவே 6 அத்தியாத்தில் ஆறாவது அத்தியாயம். இன்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்படுகிற முயற்சி அது ‘ அதைப் பார்த்த பலரும் என்னை இனங்கண்டு பாராட்டினார்கள். இது தான் என் திரையுலக அறிமுகக் கதை. ” என்று தன் முன் கதையைக் கூறினார் சோமு.
இவர் நடித்து இப்போது மு.களஞ்சியம் இயக்கத்தில் ‘முந்திரிக்காடு ‘படம் முடிந்திருக்கிறது . வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வட சென்னை’யில் நடித்திருக்கிறார்.
அந்த அனுபவங்கள் பற்றிக் கூறும் போது “என்னைத் திரையுலகிற்கு முழுத் தகுதியாக வளர்த்து உருவாக்கியவர் களஞ்சியம் அவர்கள் தான் என்று கூறுவேன். சினிமாவில் அவரே என் திரையுலக. தந்தை அவர் 3 மாநில விருதுகள் உள்பட பல விருதுகள் பெற்ற இயக்குநர் பூமணி பூந்தோட்டம் , மிட்டா மிராசு , எதிரும் புதிரும் போன்ற பல படங்களை இயக்கியவர் .அவர் ‘முந்திரிக்காடு’ படத்தில் நான் நடிக்கும் போது என்னைச் சரியானபடி நடிக்க வைக்க எனக்கு நடிப்புப் பயிற்சியளித்தார்.
படத்துக்காகப் பெரிய தாடி ஓராண்டு காலம் வளர்த்தேன் அத்துடனேயே அலுவலகம் போனேன். ஐடி துறையில் தாடியுடனா என்று என்னைச் சிலர் அருவருப்பாகப் பார்த்தார்கள். நான் பொறுத்துக் கொண்டேன். அதன் பிறகு படப்பிடிப்பு போனோம். படத்தில் முக்கியமான வில்லன் நான் தான். படத்தின் பெரும் பகுதியில் நான் வருவேன். சுமார் 60 நாட்கள் தஞ்சாவூர் .புதுக்கோட்டை . திருநெல்வேலி என்று படப்பிடிப்பு நடந்தது. முந்திரிக்காடுகளில் செம்மண் பூமியில் படப்பிடிப்பு போனது மறக்க முடியாதது .நான் நடித்திருந்ததை அண்ணன் சீமான் அவர்கள் பார்த்து என்னைத் தனிப்பட்ட முறையில் பாராட்டி வாழ்த்தியிருந்தார். அதை மறக்க முடியாது. அது விருது கிடைத்த மகிழ்ச்சியைத் தந்தது.
அதே போல வெற்றிமாறன் அவர்கள் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில் நடித்ததும் மறக்க முடியாதது. அதில் நான் சிறிய அளவில் வந்தாலும் அடையாளம் கண்டு பாராட்டப் படுவேன். ” என்கிறார் .
“சினிமாவுக்கு என்று வந்த பிறகு என்னை முழுத் தகுதியுள்ளவனாக மாற்ற வேண்டுமல்லவா? அதற்காக நடனப் பயிற்சி , கராத்தே , குதிரைச் சவாரி ,நீச்சல் என பலவற்றிலும் பயிற்சி பெற்றுக் கற்றுக் கொண்டேன். வில்லனாக எனக்கென ஓர் இடம் பெற வேண்டும், இதுவே என் இப்போதைய லட்சியம் “என்கிற சோமு கையில் புதிதாக மேலும் 2 பட வாய்ப்புகள் வந்துள்ளன .
இவர் பந்தயப் புறாக்கள் வளர்ப்பதில் கைதேர்ந்தவர்.
“இந்த 2018 க்குள் உங்கள் மனதில் பதிகிற ஒரு நடிகனாக நான் வந்து விடுவேன்” என்கிற சோமுவின் கண்களில் நம்பிக்கை மின்னுகிறது.