டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய், அஜு வர்கீஸ்,மந்திரா பேடி, அர்ச்சனா கவி, ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷாக் நாயர், மேஜர் ரவி, சுஜித் சங்கர் நடித்துள்ளனர்.அகில்பால் மற்றும் அனஸ்கான் இயக்கியுள்ளனர். ஜாக்ஸ் பி ஜாய் இசையமைத்துள்ளார். ராகம் மூவிஸ், கான்ஃபிடன்ட் குரூப், ராஜு மில்லியத் மற்றும் ராய் சி ஜே தயாரித்துள்ளனர். ஶ்ரீகோகுலம் மூவீஸ் கோபாலன் வெளியிட்டுள்ளார்.
மம்முட்டி, மோகன்லால் போன்ற பெரிய பெரிய நட்சத்திர கதாநாயகர்கள் ஒரு பக்கம், துல்கர் சல்மான், பகத் பாசில், நிவின் பாலி என்று அவர்களது வாரிசுகள் மற்றும் புதியவர்கள் என்றெல்லாம் கொடிகட்டிப் பறக்கும் மலையாளத் திரை உலகில் இளைஞர் கூட்டம் ஒன்று புறப்பட்டுள்ளது. அந்த இளைஞர்கள் வரிசையில் வந்திருப்பவர் தான் டோவினோ தாமஸ்.அவர் த்ரிஷாவுடன் இணைந்து நடித்த படம் தான் ஐடென்டிட்டி.
சரி படத்தின் கதை என்ன?
துணிக்கடையில் உடை மாற்றும் இடத்தில் கேமரா இருந்தது பற்றிய சர்ச்சையில் மத்திய அமைச்சர் கூட பாதிக்கப்பட்டுள்ளதை நாடே அறியும் . அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையை மையப்படுத்தி ஒரு திரில்லர் கதை உருவாக்கி உள்ளார்கள்.
ஒரு ஜவுளிக் கடையில் பெண்கள் உடைகள் மாற்றம் ட்ரையல் ரூமில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் உடை மாற்ற வரும் பெண்களை ஆபாசமாகப் படம் எடுக்கிறார்கள்.அதை வைத்த மிரட்டி பணம் பறிக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒருவனை அவனது இடத்திற்கே சென்று எரித்துக் கொலை செய்கிறார் ஒருமர்ம நபர் .அந்தக் கொலையாளியை நேரில் பார்த்த சாட்சியாக இருக்கிறார் திரிஷா. அவர் மூலம் கொலையாளியைப் பிடிக்க போலீஸ் அதிகாரி வினய் தலைமையில் களத்தில் குதிக்கிறது குழு. மனிதர்களின் அடையாளங்களை வைத்து அவர்களை அப்படியே படமாக வரையும் திறமை கொண்ட டோவினோ தாமஸின் உதவியை நாடுகிறார்கள்.திரிஷா கூறும் அடையாளங்களை வைத்து டோவினோ தாமஸ் வரையும் உருவம் அவரைப் போலவே இருக்கிறது.
கொலையாளி நான் தான் என்றால், என்னையே காட்டிவிட்டு போகலாமே பிறகு ஏன் இப்படி அடையாளம் சொல்ல வேண்டும்? என்ற டோவினோ தாமஸின் கேள்வி ஒரு பக்கம். மீண்டும் மீண்டும் ஒரே அடையாளத்தை எந்தவித தடுமாற்றமும், குழப்பமும் இல்லாமல் சொல்லும் திரிஷா மறுபக்கம்.இந்நிலையில் கொலை செய்யப்பட்டது யார்? என்றும் கொலைக்கான காரணம் என்ன? என்றும் முடிச்சுகள் விழுகின்றன.
இந்த மூன்று பேருக்குள் பின்னப்பட்ட மர்மத்தை உடைக்கும் விதத்தில் நடக்கும் விசாரணையும் அதன் பயண மும்தான் ‘ஐடென்டிட்டி’ திரைப்படம்.
டோவினோ தாமசுக்கு என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனென்றால் அவர் வித்தியாசமான களங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர்.அவர் இந்தப் படத்தில் ஹரன் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் அற்புதத் திறமை கொண்டவராக ஸ்டைலான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.தனது தனியான உடல் மொழி மூலம் பார்வையாளர்களை ஈர்க்கிறார்.அது மட்டுமல்ல நடிப்பைத் தாண்டி ஆக்சன் காட்சிகளிலும் கவருகிறார்.
திரிஷாவை ஒரு மாமூலான கதாநாயகியாக இதில் காண முடியாது.தமிழ் சினிமாவின் வழக்கமான வணிக அம்சங்கள் எதுவும் ஒட்டிக் கொள்ளாத கதாபாத்திரம் அவருக்கு.குழப்பமான மனநிலை கொண்ட அந்தக் கதாபாத்திரம் திரைக்கதையின் விறுவிறுப்புக்கு உதவுகிறது. போலீஸ் அதிகாரியாக வரும் வினய், அடுத்தடுத்த காட்சிகளில் எடுக்கும் அவதாரங்கள் எதிர்பாராத திருப்பங்கள்.
அஜு வர்க்கீஸ், மந்திரா பேடி, அர்ச்சனா கவி, ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷாக் நாயர், மேஜர் ரவி, சுஜித் சங்கர் என மற்ற துணைப்பாத்திரங்களின் நடித்திருப்பவர்கள் அனைவருமே தங்கள் நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு சாதகம் செய்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜின் கேமரா கிரைம் திரில்லர் ரகப் படத்திற்கு ஏற்ப ஓடி ஓடி உழைத்துள்ளது. குறிப்பாக விமானத்தில் நடைபெறும் சண்டைக்காட்சி, கார் சேசிங் போன்றவற்றில் நேர்த்தி காட்டி உள்ளது. இசையமைப்பாளர் ஜாக்ஸ் பி ஜாயின் பின்னணி இசை படத்தைப் பெரிதும் தூக்கி நிறுத்துகிறது.
ஆரம்பத்தில் ஒரு திரில்லர் படமாக ஆரம்பித்து இரண்டாம் பாதியில் பிரியும் கிளைக்கதைகளால் திசை மாறுவது போல் பயணம் செய்தாலும்,ஆங்காங்கே தர்க்க மீறல்கள் தென்பட்டாலும் அனைத்தையும் மறந்து நமது கவனம் விலகிச் சென்று விடாத அளவிற்கு விறுவிறுப்பாகப் படத்தொகுப்பு செய்துள்ளார் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோ.
ஒரு கொலை பற்றிய புலனாய்வுப் பயணத்தில் அடுத்தடுத்த காட்சிகளை ஈர்க்கும் வகையில் இருக்கை நுனியில் அமர்த்திக் கதை கூறியிருக்கிற இயக்குநர்கள் அகில் பால் – அனஸ் கான் சபாஷ் போட வைக்கிறார்கள்.
மொத்தத்தில், ’ஐடென்டிட்டி’ அனைவரையும் கவரும் சஸ்பென்ஸ் திரில்லர் .