தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் தீபக் இயக்கி இருக்கிறார். மேலும், அவரே ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறைகளில் மாபெரும் வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட ‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’, ஒரு அழுத்தமான, அதே சமயம் உணர்வுபூர்வமான திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறது.
“தி பீப்பிள் மீடியா பேக்டரி” சார்பாக டி.ஜி.விஷ்வபிரசாத்.தயாரிக்க, விவேக் குச்சிபோட்லா.இணைந்து தயாரித்துள்ளார்.
ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்க, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களாக நடித்துள்ளனர்.
இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். பிலோமின் ராஜ் எடிட்டராகவும், ரமேஷ் தமிழ்மணி இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பாடலாசிரியர் கபிலன் பாடல்களை எழுதியிருக்கிறார்.
இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.