பரோட்டா முருகேசன்,கார்த்திகேசன் ,சித்ரா நடராஜன் ,முருகன், சேனாபதி, விஜயன், விகடன் நடித்துள்ளனர் .எழுதி இயக்கிருக்கிறார் சுகவனம்.இசை : என்டிஆர் என்கிற நடராஜன் சங்கரன், ஒளிப்பதிவு: ஜே.டி .விமல், எடிட்டிங். சதீஷ் குரோசோவா, கலை : ஜே .கே . ஆண்டனி
தயாரிப்பு : திருமலை புரொடக்ஷன் சார்பில் கே. கருப்புசாமி.
உழைப்பைத் தவிர வேறு எதுவும் அறியாத ஓர் அப்பாவி ஏழை விவசாயி நல்ல பாடன். நன்றாக பாடுபடுவதால் நல்ல பாடன் என்று அவருக்குப் பெயர். அவரது மகன் ஒரு நாள் விளையாடும்போது தவறிக் கிணற்றில் விழுந்து விடுகிறான். சிரமப்பட்டு கிணற்றிலிருந்து தூக்கி மேலே கொண்டு வருகிறார்கள். பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறான். பதறிப் போனவர், மகனைக் காப்பாற்று என்று ஒண்டி முனி யை வேண்டிக் கொள்வதுடன் ஓர் ஆட்டுக்குட்டியைத் தூக்கி நேர்ந்து விட்டு வேண்டிக் கொள்கிறார். சிறுவன் கண்விழிக்கிறான். பெரிதும் மகிழ்ச்சி அடைகிறார். தன் மகனைக் காப்பாற்றியது ஒண்டி முனிதான் என்று திடமாக நம்புகிறார். அந்த ஆட்டுக்குட்டி வளர்ந்து பெரிய கடாவாகிறது .
அதைப் பலியிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்ற வேண்டிய தருணம் வருகிறது. ஆனால் அந்தக் கோவில் இரண்டு பண்ணாடிகளின் சச்சரவால் எந்த வழிபாடுமற்றுக் கிடக்கிறது.
நல்ல பாடன் ஒவ்வொருவரையும் போய் சமரசப் படுத்துகிறார். ஆனால் அவர்களோ அவரிடம் வேலை வாங்கிக்கொண்டு அவரது உழைப்பை மட்டும் சுரண்டிக்கொண்டு இழுத்தடிக்கிறார்கள்.ஒரு வழியாக சம்மதிக்கிறார்கள் .அதன் பின்னே உள்ள சதித்திட்டம் யாருக்கும் தெரியவில்லை.
அந்த ஊருக்கு ஒரு பொதுக்குளம் வேண்டும் என்று ஒரு திட்டம் கொண்டு வரப்படுகிறது. அதனை அந்த ஏழைகள் வசிக்கும் பகுதியில் வெட்டுவதற்குத் திட்டமிடுகிறார்கள். ஆனால் அவர்களோ இடம் கொடுக்க மறுக்கிறார்கள் .நல்ல பாடனின் கோவில் விசேடத்திற்கு சம்மதம் வாங்குவது போல் கையெழுத்தை வாங்கிக் கொண்டு அந்த நிலத்தை மோசடியாக அபகரித்து எழுதி வாங்கி விடுகிறார்கள்.
இது பிறகுதான் தெரிய வருகிறது.அங்கே பெரிய கலவரமாக ரணகளமாகிறது.அந்த ரணகளத்தில் அந்த ஆடு தப்பித்து விடுகிறது.இப்படிச் செல்கிறது இந்தக் கதை.
இந்தக் கதையைக் கொங்கு மொழி பேசி, கொங்கு வட்டாரத்தில் எதார்த்தம் குறையாமல் அப்பகுதி மண்ணின் மைந்தர்களை உருவாக்கி பாத்திரங்களாக உலவ விட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள் .
நல்ல பாடனாக பரோட்டா முருகேசன் நடித்துள்ளார். அந்தப் பாத்திரமாகவே மாறி இருக்கிறார். ஒரே ஒரு காட்சியில் கூட அவர் எதார்த்தம் பிறழ்ந்து விடாமல் நடித்துள்ளார். படம் முழுக்க உழைத்துக் கொண்டே அவர் பாடுபடுவதும் அந்த நேர்த்திக்கடன் செலுத்த அல்லாடுவதும் பார்ப்பவரைக் கலங்க வைக்கும் .ஒரு கட்டத்தில் மகனால் திருடப்பட்டு விற்கப்பட்ட அந்த ஆடு கசாப்புக் கடையில் வெட்டப்படும் முன்பு தடுத்து கதறி அழுவது கண்ணீர் வரவழைக்கும்.படத்தில் சொந்த வீட்டுக் கோழியையே திருடி நண்பர்களுடன் செலவு செய்து ஜாலியாக இருக்கும் மகனாக விஜயன் வருகிறார்.அவரது காதலியாக வெட்கம் பூசிய கொங்கு தமிழ் பேசிடும் குமரியாக வித்யா சக்திவேல் வருகிறார்.நல்ல பாடன் மகளாக வரும் சித்ரா நாகராஜன், அவரது கணவராக வருபவர், நல்ல மனது கொண்டு டீக் கடைக்காரர் , சற்றே அனுசரிக்கும் கசாப்புக் கடைக்காரர் என்று படத்தில் வரும் பாத்திரங்கள் அனைவருமே பார்ப்பவர் மனதில் தங்குகிறார்கள்.அந்த வகையில் நடிப்புக் கலைஞர்கள் அனைவருமே நடிக்க வைக்கப் பட்டவர்களாகத் தோன்றாமல் அந்தப் பாத்திரங்களாகவே தோன்றுகிறார்கள். இந்தப் படத்தில் பெரும் பலமாக இருப்பது விமலின் ஒளிப்பதிவு என்று கூறலாம். மிகை ஒளி காட்டாமல் இயற்கை ஒளியில் படப்பிடிப்பு நடந்துள்ளது.எதார்த்தமான காட்சிகளுக்கு செயற்கையான பாடல்கள் தேவை இல்லை என்று பாடல்களைத் தவிர்த்து உள்ளார் இயக்குநர்.பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியுள்ளார் நடராஜன் சங்கரன்.
ஏழைகளைச் சுரண்டிக் கொழுக்கும் வர்க்கத்தையும் அறியாமையில் உழலும் ஏழைகளையும் இப்படத்தில் காட்டி உள்ளார்கள்.இந்த வர்க்க பேதம் நம் நாட்டில் என்றும் இருக்கும் போலும்.
இயல்பாக நிகழும் காட்சிகள் ஊடே கதாபாத்திரங்கள் ஒன்றை ஒன்று சீண்டிக்கொண்டு பேசும் வசனங்கள் சிரிப்பு மூட்டுகின்றன.
ரத்தமும் சதையுமாக வாழ்ந்து வரும் மனிதர்கள் வசிக்கும் அந்த ஊருக்குள் நம்மை அழைத்துச் சென்று கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து காட்சிகளைக் கண் முன் நிறுத்துகிறார் இயக்குநர்.
இந்தப் படம் வணிக ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள படம் அல்ல .இந்த படத்தின் வெற்றி தோல்வி கணிக்க முடியாத ஒன்று. ஆனால் ஒரு எதார்த்தமான படப்பதிவு என்பதை இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
வணிக சமரசங்களுக்கு உட்படாமல் வாழ்க்கைப் பதிவாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. அப்படிப்பட்ட அனுபவத்தை நாடும் ரசிகர்களுக்கு இது திருப்தியைத் தரும்.இப்படிப்பட்ட முயற்சி எடுத்த இயக்குநரை மட்டுமல்ல அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளரையும் பாராட்டலாம்.


