பரத் ,அபிராமி,அஞ்சலி நாயர், தலைவாசல் விஜய் ,ராஜாஜி, கனிகா, ஷான்,கல்கி, பி ஜி எஸ், அரோல் டி சங்கர் நடித்துள்ளனர்.பிரசாத் முருகன் எழுதி இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு – கே.எஸ். காளிதாஸ் – கண்ணா.R ,இசை – ஜோஸ் பிராங்க்ளின்,படத்தொகுப்பு – ஷான் லோகேஷ்,கலை இயக்குநர் – வீ.கே. நடராஜன்.
ஃப்ரைடே ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரித்துள்ளார்.இணை தயாரிப்பு -ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் ,பி ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் பி.ஜி.சரவணன்.
வெவ்வேறு தளத்தில் வெவ்வேறு திசையில் பயணிக்கும் நான்கு கதைகளில் ஒரு துப்பாக்கி இடம் பெற்று தனக்கான இடத்தை பிடிப்பதுதான் இந்த 121 .31 நிமிடங்கள் கொண்ட படத்தின் கதை.ஆந்தாலஜி பாணியில் நான்கு கதைகளை உள்ளடக்கிய படமாக இது உருவாகி இருக்கிறது .’கிஷ்கிந்தா காண்டம்’ என்ற மலையாளப் படம் காணாமல் போன ஒரு துப்பாக்கியின் பயணம் சார்ந்த கதையாக உருவாகி ,அண்மையில் வெளியாகி அந்த படம் பெரிய வெற்றி பெற்றது.அதுபோல் இந்தப் படத்தில் ஒரு துப்பாக்கி முக்கியமான பாத்திரமாக வகிக்கிறது.
சரி படத்தின் கதை என்ன?
காதல் திருமணம் செய்து கொண்டவர் பரத்.உயிருக்குப் போராடும் தன் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக50 லட்சம் ரூபாய் பணம் தேடி அலைகிறார் அவர்.
திருநங்கையாக தன் மகள் பிறந்திருந்தாலும் அவரை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்கிற கனவோடு போராடுகிறார் துப்புரவுப் பணியாளர் அபிராமி. அவரது மகளை அடைய கந்து வட்டிக்காரர் முயற்சி செய்கிறார்.
ஜாதிப் பெருமை பேசும் தனது தந்தைக்கு எதிராகக் காதலனை மணக்கத் தயாராகிறார் பவித்ரா லட்சுமி.
புகுந்த வீட்டில் தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி மனம் குமுறுகிறார் அஞ்சலி நாயர்.
இப்படி அனைவரது பிரச்சினைக்கும் தீர்வு சொல்ல அவர்கள் கையில் ஆயுதமாக ஒரு கணத்தில் துப்பாக்கி வருகிறது.அதை பயன்படுத்தவும் செய்கிறார்கள்.
அதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை.
ஆந்தாலஜி பாணியில் இந்த திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு கதையும் தனித்தனியே பிரிந்தாலும் அவற்றை இணைக்கும் ஓர் உள்ளார்ந்த சக்தியாக துப்பாக்கி வருகிறது.தனித்தனி கதைகளாக கிளைக்கும் கதை ஓட்டத்தில் சம்பவங்கள் நடக்கின்றன. யாரும் எதிர்பாராத அதிர்ச்சிகரமான கிளைமாக்ஸ் வருகிறது.அடுத்த பாகம் தொடரும் சாத்தியத்துடனும் அது அமைக்கப்பட்டுள்ளது.
காதல் டூயட் என்ற பாடிக் கொண்டிருந்த பரத் முரட்டுத் தோற்றத்தில் வருகிறார். அது அவருக்குச் சற்று வித்தியாசமான கதாபாத்திரம்தான். அவர் தனது நோயாளி மனைவியைக் காப்பாற்ற நெருக்கடியான தருணங்களில் அவர் எடுக்கும் முடிவு அதிர்ச்சி ரகம்.அபிராமியின் பிரச்சினை வேறு, தன் மகளை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று போராடும் தாயாக ஒரு அச்சு அசலான துப்புரவுத் தொழிலாளியாக மாறி ஏற்ற பாத்திரத்திற்கு நீதி செய்துள்ளார்.
பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர் இருவருமே தோற்றம், நடிப்பு இரண்டிலுமே சோடை போகவில்லை.
இந்த நான்கு முனை பிரச்சினைகளுக்கும் திருப்புமனையாக ஒரு துப்பாக்கி வருகிறது. அது ஒரே துப்பாக்கி தானா? இவர்களுக்குள் ஏதாவது உள் தொடர்பு இருக்கிறதா?இல்லையா என்கிற மர்மம் படம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிற பரபர அனுபவமாகும்.
பரபரப்பான திரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகி இருந்தாலும் காதல், ஜாதி பிரச்சினை, திருநங்கைகள் பிரச்சினை, கந்து வட்டிக் கொடுமை , கூலிக்கு குற்ற செயல்கள் செய்யும் கூட்டம் என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி கதை உருவாக்கி இருக்கிறார்கள்.சில இடங்களில் அளவோடு பொருத்தமாகவும் சில இடங்களில் மிகையாகவும் காட்சிகள் வருகின்றன.படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
வெவ்வேறு திசைகளில் கதை பயணித்தாலும் ஒரு கட்டத்தில் அவற்றிற்கான தொடர்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. சில இடங்களில் பட்ஜெட் போதாமையை உணர முடிகிறது. இருக்கிற பட்ஜெட்டில் பெரிய அளவில் கூற முயன்று உள்ளார்கள்.
இப்படத்தை கேப்டன் எம்பி ஆனந்த் தயாரித்திருக்கிறார்.இயக்குநர் விரும்பிய பாதையில் படப்பதிவு செய்துள்ளனர் ஒளிப்பதிவாளர்கள் கே.எஸ். காளிதாஸ் – கண்ணா.R. இருவரும்.ஜோஸ் பிராங்கிளின் இசை காட்சியோடு இணைந்து ஒலிக்கிறது.
‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ்’ சிறிய பட்ஜெட்டில் பெரிய முயற்சி – க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்குப் பிடிக்கும்.