திறமை எங்கிருந்தாலும் கவனிக்கப்படும். அது வெளிச்சத்துக்கு வந்தே தீரும் என்பதற்கு உதாரணம் இசையமைப்பாளர் சாம். சி.எஸ் .
விஜய்சேதுபதி நடித்துள்ள ‘மெல்லிசை’படத்தின் பாடல் வெளியாகி ஒரு மாதத்திற்குள் ‘ஒரே ஒரு படம் ஒஹோன்னு வாய்ப்புகள்’ என இருக்கிறார். இப்போது ஆறுபடங்களில் சாம் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இனி சாமுடன் பேசலாம்..!
இசையமைப்பாளர் சாமின் முன் கதை என்ன?
“எனக்குப் பூர்வீகம் கம்பம் என்றாலும் நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளா மூணாறுதான். அப்பா வங்கியில் பணிபுரிந்ததால் குடும்பம் அங்கு இருந்தது.
பள்ளி, கல்லூரிப் படிப்பு என பி எஸ்ஸி வரை அங்குதான் படித்தேன். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் எம்.சி.ஏ. முடித்தேன். கிறிஸ்டியன் பள்ளி, கல்லூரிகளில் படித்ததால் அங்கும் இசையை வளர்த்துக் கொள்ள முடிந்தது. படிப்பு முடித்ததும் ஐடி துறையில் நல்ல வேலை கிடைத்தது.
எனக்கு சிறுவயதிலேயே இசையார்வம் உண்டு, தாத்தா மூலம் இது எனக்கு வந்தது. இசையைக் கற்றேன். இன்றும் கற்கிறேன்.
என் இசையார்வத்தை வீட்டில் புரிந்து கொண்டதால் ஊக்கமும் ஆதரவும் சொடுத்தார்கள். எனவே நல்ல வேலையை விட்டுவிட்டுப் படங்களில் பணியாற்றினேன்..பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினேன்.பலரிடம் கீபோர்டு வாசித்து இருக்கிறேன். ‘ஓர் இரவு’ ,’அம்புலி,’ ‘ஆ.’,போன்ற ஹாரர் படங்களில் பணியாற்றினேன்.அவை பின்னணி இசை வாய்ப்புள்ள படங்கள்.
‘மெல்லிசை’தான் நான்முதன் முதல் தனியாக இசையமைத்திருக்கும் படம்.”
என்று சாம் தன் முன்கதைச் சுருக்கத்தைக் கூறி முடிக்கிறார்.
‘மெல்லிசை’ பட வாய்ப்பு பற்றி என்ன கூறுகிறார் சாம்.?
”படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.எனக்கு நண்பர் .இந்தப் படம் இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் பல பெரிய இசையமைப்பாளர்கள் இசையமைக்க வேண்டிய படம் வேறு ஒருவர் இசைஅமைப்பதாக இருந்தது. என்மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார் இயக்குநர் ..’மெல்லிசை’ படத்தில் எனக்கு நிறைய வாய்ப்பு இருந்தது. ” என்கிறார்.
எந்த அளவுக்கு இசை வாய்ப்புள்ள படம்? என்றால்
” படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி ஒரு இசையமைப்பாளர். நாயகி மீரா ஒரு வயலின் டீச்சர். நண்பர்களும் இசை சம்பந்தப்பட்ட வர்களே. ஒரு காட்சியையும் அடுத்தகாட்சியையும் இணைப்பது கூட இசையாகவே இருக்கும்.
படத்தில் ஆறு பாடல்கள் . வேறு சிறு சிறு பாடல்களும் உண்டு. அதற்கெல்லாம் தனித்தனியாகவே மெட்டு போட்டேன் அந்தக் கதையில் இசை மிகப்பெரிய பங்கு வசிக்கும் .படம் இசை கலந்த உணர்ச்சிகரமான கதை.மெல்லிசை படத்துக்கு எல்லாமே லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்தான் பயன்படுத்தப் பட்டுள்ளன.தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி,ரத்தீஷ்வேலு இருவரும் இதை உணர்ந்து ஊக்கம் தந்தார்கள்.
படத்தில் ஹரிஹரன், ஸ்ரேஷயா கோஷல், ஹரிச்சரண், ஆண்ட்ரியா, ஸ்ரீநிவாஸ், ஹரிணி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். எல்லாருமே உணர்ந்து ரசித்து பாடியிருக்கிறார்கள் நிச்சயம் இந்தப் படத்தின் இசை வழக்கமான கமர்ஷியல் டெம்ப்ளேட்டில் இருக்காது. ஸ்ரேயாகோஷல் பாடவந்த போது அவருக்கு ஏதோ பிரச்சினை மனசு சரியில்லை பாட முடியாது என்றார்.பாடவேண்டிய பாடலைக் கேட்ட பிறகு அந்தச் சோகப் பாடலை ரசித்துப் பாடியவர் மனசு லேசாகி விட்டது என்றார் இது மறக்க முடியாது.” என்கிறார் சாம்.
இசையில் எது சாமின் பாணி? யார் இவரது உதாரணம்?
” நான் இளையராஜா சார், ரகுமான் சார் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன் அவர்களின் தாக்கம் என்னிடம் இருக்கும். அவர்களில் வழியில் செல்ல ஆசை.ஆனால் யார் சாயலும் இல்லாமல் இசையமைக்க வேண்டும். ஒரு பாடலுக்கு ட்யூன் ,வரிகள், இசைக்கருவிகள், ஒலி நுட்பம் இவை எல்லாம் கலந்துதான் இருக்க வேண்டும்.
படத்தில் இரண்டரை மணி நேரத்தில் ஒன்றரை மணி நேரம்தான் வசனம் இருக்கும் மற்ற ஒரு மணி நேரமும் இசைதான் கதை சொல்கிறது. இதை விட என்ன வாய்ப்பு எனக்கு?ஹரிஹரன்’ நீண்ட நாளைக்குப் பிறகு மெலடியில் பாடியிருக்கிறேன் ‘என்றார் .ஸ்ரேஷயா கோஷல் ‘பாடிய போது புல்லரித்தது’ என்றார்.இதைவிடஎனக்கு என்ன பெருமை?” என்கிறார்.
சாம் இசையில் புதிய படத்துக்கு வைரமுத்து பாடல் எழுதியுள்ளார் அப்போது குத்துப்பாட்டிலும் இனிமையான இசை இருக்கிறது எனப் பாராட்டியவர்,இதையே தொடர்ந்து செய்யுங்கள் என்றுஅறிவுரை கூறி வாழ்த்தியுள்ளார்.அதை எண்ணிப் பெருமைப்படுகிறார்.
பழைய பாடல் போல புதிய பாடல் இல்லையே..?
” என்றைக்கும் மெலடிதான் நிலைத்து நிற்கும். காலத்தைக் கடந்து நிற்பவை அவைதான். குத்துப்பாடலிலும் மெலடி தேவை. இப்போது மெலடி மீது ஆர்வம் குறைந்தது போல் தோன்றலாம். ஆனால் அது உண்மையல்ல.” என்கிறவர் இப்போது பலபுதிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
மெல்லிசை விரைவில் வரவுள்ளது. அடுத்து ம.கா.பா.ஆனந்த் நடிக்கும் ‘தீபாவளி துப்பாக்கி’ ,கிஷோர் நடிக்கும் ‘கடிகார மனிதர்கள்’, சமுத்திரக்கனி நடிக்கும் புதியபடம், இரண்டு பெயர் வைக்கப்படாத படங்கள் ,மலையாளத்தில் ஒருபடம் என ஆறு படங்களுக்கு சாம் இசையமைத்து வருகிறார்.