ஓவியாவிற்கு ஒரு பிரச்சினை என்றால் நாடே கொதித்தெழுகிறது என்று சாய்ராம் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து பேசினார்.
சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியின் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா இக்கல்லூரியின் வளாகத்தில் உள்ள ஸ்ரீலியோ முத்து உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பட்டம் பெற வந்த மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்துகொண்டனர்.
இவ்விழாவிற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் தலைவர் பேரா. திரு, அனில் தத்தாரேயா சஹஸ்ரபுத்தே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவர்களுக்கு பட்டமளித்துப் பாராட்டினார்.
மேலும் இவ்விழாவில் சாய்ராம் கல்வி குழுமத்தின் சேர்மன் திருமதி கலைசெல்வி லியோமுத்து, சாய் ராம் கல்வி குழுமத்தின் அறங்காவலர் திருமதி சர்மிளா ராஜா, கல்லூரி முதல்வர் பேரா திரு C V ஜெயக்குமார், மேலாண்மைத்துறை இயக்குநர் முனைவர் K.மாறன்,வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி துறை டீன் A.ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவை திருமதி கலைசெல்வி லியோ முத்து குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
மாணவர்களின் கடந்தாண்டு தேர்ச்சி விவரங்களை வெளியிட்டு கல்லூரியின் முதல்வர் பேரா திரு ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து சாய் பிரகாஷ் லியோ முத்து வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசியதாவது…
“இந்த பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் வணக்கம். வெள்ளம், வர்தா புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டிருந்தும் இந்த பேட்ச் மாணவர்கள் மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார்கள். தேர்வுகளையும், தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களையும் அண்ணா பல்கலைக்கழகம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையுடன் காத்திருந்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு பக்கபலமாக இருந்த பெற்றோர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதைக் காட்டிலும், போராடி வெற்றி பெறுவது தனி அடையாளம். அதனால் தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் வேறு எந்த கல்லூரியும் பெறாத 96.82 சதவீத தேர்ச்சி பெற்று சாய்ராம் கல்லூரி சாதனை படைத்திருக்கிறது.
நம்முடைய கல்வி முறை மதிப்பெண் அடிப்படையிலானது. அதையும் கடந்து எந்த மாணவன் தெளிவான சிந்தனையுடன் தொலைநோக்கு பார்வையுடன் பணியாற்றவேண்டும் என்ற சவாலை தனக்குள் உருவாக்கிக் கொண்டு பயணப்படுகிறானோ அவருக்கு தான் வெற்றியும் வாய்ப்பும் கிட்டும்.
தற்போது உலகத்திலேயே இளைய தலைமுறையினரை அதிகமாக கொண்டுள்ள தேசமாக இந்தியா திகழ்கிறது. பாரத பிரதமர் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவருக்கு கிடைக்கும் வரவேற்பு இந்த நாடு பெற்றிருக்கும் வளமிக்க தொழில்நுட்ப அறிவுக்கு கிடைத்த அங்கீகாரம். ஏனெனில் இன்றைய சூழலில் கூகுளில் இருப்பதும் ஒரு இந்தியர். மைக்ரோசாப்டில் இருப்பதும் ஒரு இந்தியர்.
கடந்த காலங்களில் சிலருக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். சிலருக்கு அதிகமாக மறுக்கப்படும். இப்போது வாய்ப்புகள் ஏராளமான உள்ளன. அதை தேர்ந்தெடுக்கவேண்டிய பொறுப்பு உங்களிடமே வழங்கப்பட்டிருக்கிறது. ஐ டி நிறுவனங்களின் தற்போதைய நிலையைப் பற்றி கவலையடையவேண்டாம். உங்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது. உளிகளால் சிலைகள் செதுக்கப்படுவது, சிலை சிறப்பாக வரவேண்டும் என்பதற்காகத்தான். பெற்றோர்களின் கனவு நனவாகியிருக்கிறது. உங்களின் கனவை நிறைவேற்ற விடாமுயற்சியுடன் பணியாற்றத் தொடங்குங்கள். அப்துல் கலாம் ஐயா உங்களைப் போன்ற திறமையான சாதிக்கத்துடிக்கும் மாணவர்களைப் பார்த்து தான் கனவு காணுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இந்த பேட்சில் படித்து வெற்றிப் பெற்ற மாணவர்கள் தங்களைப் பற்றிய சுயவிவரக்குறிப்புகளை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எழுதுங்கள்.பகிருங்கள்.
இன்றைய மாணவர்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கும் விமர்சனங்கள் இருக்கிறதே..கவலையடைய வைக்கிறது. உதாரணத்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா எலிமினேட் ஆவார்களா? இல்லையா..? இவைகள் தான் அதிகமாக இடம்பிடித்திருக்கின்றன. இதன் மூலம் நெடுவாசல் பிரச்சினை, ஜல்லிக்கட்டு பிரச்சனை போன்றவற்றை மறக்கடித்துவிட்டது. ஓவியாவிற்கு ஒரு பிரச்சினை என்றால் நாடே கொதித்தெழுகிறது. இது தான் இன்றைய சூழலில் பெரிய சிக்கலாக இருக்கிறது. மக்களையும் மாணவர்களையும் பெரிய பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்ப சிறிய விசயம் போதுமானதாக இருக்கிறது. இது மிகப்பெரிய தவறு. திருத்திக் கொள்ளவேண்டும்.
திருத்திக் கொள்வதற்கு பல சமயங்களில் வாய்ப்பே கிடைக்காது. வாய்ப்பை கொடுக்கமாட்டார்கள். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்று முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். உங்களுடைய அடிமைத்தனம் திருடப்படுகிறது. உங்களுடைய நம்பிக்கை திருடப்படுகிறது. உங்களுடைய எதிர்காலம் திருடப்படுகிறது. அதற்கு வழிவகுத்துவிட்டு. பின்னால் மற்றவர்கள் மீது பழி சொல்லாதீர்கள்.’ என்றார்.
இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய பேரா. அனில் தத்தாரேயா சஹஸ்ரபுத்தே பேசுகையில்,‘இன்றைய உலகிற்கு தொழில்நுட்பத்தின் தொலைநோக்கு திட்டம் அவசியமாக தேவைப்படுகிறது. அதற்கு ஏற்ப இந்தியாவில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் விஞ்ஞான வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது இந்தியாவில் பொறியியல் கல்லூரியின் தரம் மிக நன்றாக இருக்கிறது. இதன் காரணமாகவே நம் நாட்டு தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு அயல் நாடுகளில் பணியாற்றுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கிறது. இதன் காரணமாகவே அநத நாடுகளின் முன்னேற்றத்திற்கு காரணமாகவும் இருக்கிறார்கள். இடையே நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபடுகின்றனர். உலக வணிகம் மற்றும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப நமது தொழில் நுட்ப கல்வியின் பயிற்று முறை மற்றும் தொழில் சார்ந்த அனுபவ முறையை புகுத்துவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் முனைப்புடன் செயல்படுகிறது.
மேலும் பொறியியல் மாணவர்களின் செயல்திறன்களை வளர்ப்பதற்கு மாண்புமிகு பாரதபிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலின் படி பல்வேறு வகைகளில் ஊக்கமளித்து வருகிறோம். பொறியியல் மாணவர்களுக்கு இந்தியாவில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. தாங்கள் ஒரு சிறந்த தொழில் முனைவோர் ஆவதற்கு ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற வியப்பான உத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவை இன்றைய பொறியியல் வல்லுநர்கள் உலக அரங்கில் இந்தியாவை வல்லரசு நாடாக எடுத்துச் செல்ல முனைப்புடன் செயல்படவேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
திருமதி சர்மிளா ராஜா அவர்கள் பட்டம் பெறும் மாணவர்களை பட்டியலிட்டும், பாராட்டியும் பேசினார்.
முனைவர் மாறன் அவர்களின் வாழ்த்துரைக்கு பின்னர், முனைவர் திரு ராஜேந்திர பிரசாத் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
முன்னதாக அண்ணா பல்கலை கழகத்தின் தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் உள்ள வேறு எந்த கல்லூரியும் பெறாத வகையில் 96,82 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், பல்கலை கழக மற்றும் கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற 236 மாணவர்களுக்கு 75 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.