‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்பட விமர்சனம்

விஷ்ணு விஷால், ருத்ரா, மிதிலா பால்கர், கருணாகரன், மிஷ்கின். ரெடின் கிங்ஸ்லி,நிர்மல் பிள்ளை, கஸ்தூரி, விஜயசாரதி, திவ்யா நடித்துள்ளனர். கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி உள்ளார். இசை ஜென்மார்ட்டின்.ஒளிப்பதிவு ஹரிஷ் கண்ணன், படத்தொகுப்பு பிரணவ்.தயாரிப்பு விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்.

அஸ்வின் என்ற பெயர் கொண்ட ருத்ரா சினிமாவில் ஓர் உதவி இயக்குநர்.வாய்ப்பு தேடி பிரபல கதாநாயகனான விஷ்ணு விஷாலிடம் கதை சொல்கிறார்.முதல் இரண்டு கதைகள் பிடிக்காமல் போகவே மூன்றாவதாகத் தனது சொந்தக் கதையையே சொல்கிறார்.அது ஒரு காதல் கதை .சுவாரஸ்யமாகச் செல்கிற கதை ஒரு கட்டத்தில் நிற்கிறது ,ஏன் என்று கேட்கிற போது பிரேக்கப் ஆகிவிட்டது என்று சோகமாகச் சொல்கிறார் ருத்ரா. அதற்கு மேல் கற்பனை கலந்து கதையைச் சொல்லாதே மீண்டும் அந்த நிஜக் காதலியைப் பார்த்துவிட்டு அவளது எதிர்வினை என்னவாக இருக்கிறது என்று அறிந்து கொண்டு வா, அதன் பிறகு நடந்ததைச் சொல் கால்ஷீட் தருகிறேன் என்கிறார் விஷ்ணு விஷால். அதன்படி தனது காதலியைச் சந்திப்பதற்காக மணிபால் செல்கிறார் ருத்ரா.அங்கே அவரது காதலியைச் சந்திக்கிறாரா ? உடைந்து பிரிந்து போன அவர்களது காதல் கைகூடியதா? நடந்தது என்ன என்பதுதான் ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் மீதிக் கதை.

உதவி இயக்குநர் அஸ்வினாக அறிமுக நடிகர் ருத்ரா நடித்துள்ளார். இவர் விஷ்ணு விஷாலின் தம்பி. கதைக் கேட்கும் நடிகராக விஷ்ணு விஷால் வருகிறார். ருத்ராவின் பள்ளிப்பருவத்தில் இருந்து கதை தொடங்குகிறது. அந்த வயதில் ஏற்படும் கிரஷ், கிஸ் என்று காட்சிகளில் இளமை ஊஞ்சலாடுகிறது.அந்த உறவும் நிலைக்கவில்லை. இப்படிக் காட்சிகள் கலகலப்பாக நகர்கின்றன.கல்லூரி முடித்தவுடன் ஒரு திருமண வீட்டில் மிதிலாவைச் சந்திக்கிறார் .அவர் ஒரு டாக்டர். அங்கே காதல் உருவாகிறது, கலாட்டாவும் சேர்ந்து வருகிறது. சின்ன அனுசரிப்புகள் இல்லாததால் மோதல் வந்து கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.இடைவேளைக்குப் பிறகு அந்தக் காதலுக்கு என்னாச்சு காதலர்களுக்குள் என்ன பிரச்சினை அவர்கள் சேர்ந்தார்களா என்பதை காட்சிகளாக்கியிருக்கிறார் இயக்குநர்.

பள்ளிப் பருவத் தோற்றம், இளைஞனான பருவம் எனஇரு வேறு தோற்றங்களில் அச்சு அசலாகப் பொருந்தி கலக்குகிறார் ருத்ரா. பள்ளிக்காலத்தில் அப்பாவியாக வருகிறார்.வளர்ந்த இளைஞனாகி காதல், சண்டை என்று வேறு நிறம் காட்டுகிறார் .பாடல் காட்சிகளில் இளசுகளைக் கவர்கிறார். இப்படித் தோற்றம் உடல் மொழி முக பாவனைகள் வசன உச்சரிப்பு என ஓர் உயிர்ப்புள்ள கதாநாயகனாக இதில் அவர் உருவெடுத்து இருக்கிறார்.

அவரது பள்ளித் தோழியாக வரும் திவ்யா ஹாட் கேர்ளாக வருகிறார் .குறைந்த எண்ணிக்கையில் காட்சிகள் வந்தாலும் அழகால் ரசிகர்களைக் ஈர்க்கிறார்.மராட்டிய நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக வருகிறார். அவரது தோற்றம் சின்ன சின்ன முக பாவனைகளில் மின்னல் அடிக்கும் மாற்றங்கள், நடனம் என்று முதல் படத்திலேயே பளிச் நாயகியாக தனது முத்திரையைப் பதித்துள்ளார். அவரது உடைகள் சிகை அலங்காரம் மூக்குத்தி இளைஞர்களைக் கவரும்.விஷ்ணு விஷாலின் மேனேஜராக வரும் ரெடின் கிங்ஸ்லி முழு நீளக் கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.
நாயகனின் தந்தையாக ஜோசியப்பிரியராக விஜய சாரதி , அம்மாவாக கஸ்தூரி, நாயகனின் சித்தப்பாவாக கருணாகரன், நாயகியின் தோழியாக நிர்மல் பிள்ளை  என்று அனைவரும் அவரவருக்கான இடத்தைப் பிடித்து ஸ்கோர் செய்கிறார்கள். திருமண வீட்டுக் காட்சிகள் வண்ணமயமாய் இருக்கின்றன.இயக்குநர் மிஷ்கின் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புக் காட்சிகளில் அவர் திட்டும்போதும் கோபப்படும் போதும் ரசிக்க வைக்கிறார்.

படத்தின் முதல் பாதி ஓஹோ என்று வண்ணத்தோரணம் காட்டி சுவாரசிய ஓவியம் வரைகிறது. இடைவேளைக்குப் பிறகு அந்த வேகம் மட்டுப்படுகிறது. மீண்டும் வேகமெடுக்கிறது.நாயகி சம்பந்தப்பட்ட மணிபால் காட்சிகள் ,அதைத் தொடர்ந்து வரும் திருப்பம் உச்சக்கட்டத்தை நோக்கிச் செல்லும் பயணம் போன்றவை சுவாரஸ்யம் கொண்டவை.

ஹரிஷ் கண்ணன் கேமரா பதிவு செய்துள்ள காட்சிகளில் வண்ணமயமான இளமைக் கொடி பறக்கிறது. ஜான் மார்டினின் இசை படத்தை மேலும் இளமையாக்கிச் செழுமை செய்திருக்கிறது.

சின்ன சின்ன விட்டுக் கொடுத்தல்கள் புரிதல்கள் இல்லாததால் உறவில் ஏற்படும் தடைகளையும் பிரச்சினைகளையும் இந்தப் படம் அழகாக வெளிப்படுத்தி உள்ளது..

விளம்பரப் படங்களை இயக்கியவர் இந்த இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் என்பதாலோ என்னமோ ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து உருவாக்கி சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை நிரூபித்துள்ளார்.

காதலின் சுவாரசியத்தை இழை பிரித்து சமகால உணர்வுகளை வெளிப்படுத்தி இன்றைய இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் படியான ஒரு கதை.கலகலப்பான ஜாலியான இளமைக் காட்சிகளுக்குப் படத்தில் பஞ்சமில்லை. எனவே இந்தப் படத்தை இளைஞர்கள் கொண்டாடுவார்கள். மற்றவர்கள் பொறாமையுடன் திண்டாடுவார்கள்.

மொத்தத்தில் இந்தப் படம் ஒரு கலகலப்பான காதல் கதை.