‘ஓ பட்டர்ஃப்ளை’ திரைப்பட விமர்சனம்

நிவேதிதா சதீஷ், சி பி சந்திரன் ,அத்துல், நாசர், லட்சுமி பிரியா , கீதா கைலாசம் நடித்துள்ளனர்.விஜய் ரங்கநாதன் இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு: வேதராமன் சங்கரன்,இசை : வைசாக்சோமநாத். அண்ட் ஹில் சினிமா மற்றும் பாலாம்பூர் டாக்கிஸ் இணைந்து தயாரித்துள்ளன.

இந்தக் காலத்தில் ‘எக்ஸ்’ என்று பேசிக்கொள்கிற முன்னாள் காதலி அல்லது காதலன் பற்றிய கதைதான் இது.திருமணமானவர்கள் ஏற்கெனவே காதலித்த காதல் அனுபவங்களைப் புதிய கணவன் மனைவியுடன் பகிர்வதில்லை. அப்படிப் பகிராத தம்பதி இடையே அந்த முன்னாள் நபர் வந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு வரியை விவரித்தால் இந்தத் திரைப்படமாக விரியும்.

நிவேதிதா சதிஷ்,திருமணம் ஆனவர்.கொஞ்ச காலத்திலேயே கணவர் இழந்தவர். பெரும் மன அழுத்தத்தில் இருக்கிறார்.யாரையும் சந்திப்பதைத் தவிர்க்கிறார். எதிர்மறைச் சிந்தனைகளிலேயே அவரது மனம் உழல்கிறது.அவரது சகோதரி லட்சுமிப் பிரியா துறவி ஆகிவிட்டார். அவர் ஆறுதல் அளிக்க நினைக்கிறார். அவரிடம் நிவேதிதா தன் கதையைக் கூறுகிறார். தன் திருமண வாழ்க்கை,முந்தைய காதல் அனுபவங்கள் அனைத்தையும் கூறுகிறார்.தன் கணவரை, தான் கொலை செய்ததாகவும் கூறுகிறார். நிவேதிதா ஏன் அப்படிக் கூறுகிறார் ?
அவரது கணவர் இறப்பில் உண்மையில் நடந்தது என்ன? ,என்பதே’ ஓ பட்டர்ஃப்ளை’ படத்தின்மீதிக்கதை. 30 மணி நேரத்திற்கு முன் என்ன நடந்தது என்று கதை செல்கிறது. அதுவே பரபர காட்சிகளாக விரிகின்றன.

கதையின் நாயகி நிவேதிதா சதிஷ், படத்தின் பிரதான தூணாக தூக்கிச் சுமக்கும் படியான அடர்த்தியான அந்தப் பாத்திரத்தில் அநாயாசமாக நடித்துள்ளார்.ஏமாற்றிய முன்னாள் காதலன், பெரிய லட்சியம் இல்லாத கணவர் என்று இருவரிடம் சிக்கித் தவிக்கும் சூழலை, தனது நடிப்பின் மூலம் வெளிக்காட்டி உள்ளார்.அந்த இடங்களில் அவரிடமிருந்து மேலும் நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கலாம்.நிவேதிதாவின் முன்னாள் காதலனாக வரும் சிபி சந்திரன், கணவராக வரும் அதுல் இருவரும் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

கெஸ்ட் ஹவுசை பார்த்துக் கொள்ளும் பொறுப்பாளராக வண்ணத்துப்பூச்சிகளை வளர்க்கும் இயற்கைப் பிரியராக வருகிறார் நாசர்.அவரத திரையிருப்பு படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது.

துறவி சகோதரியாக வரும் லட்சுமி பிரியா சந்திரமெளலி அப்பாத்திரத்தில் பொருந்துகிறார்.
ஜோதிடம் சொல்லும் சோடாபுட்டி கிழவியாக வரும் கீதா கைலாசம் பாத்திரமும் மனதில் பதிகிறது. அவரது பேத்தியாக வருபவரும் கூட.

வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் எதுவும் நினைவில் நிற்கவில்லை என்றாலும்,குழப்பம் மிகுந்த பாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பின்னணி இசை அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன்,காட்சிகளில் பின்புலத்தை விடப் பாத்திரங்களின் உணர்வுகள் முக்கியம் என்று ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பாளர் புவனேஷ் மணிவண்ணன், ஆரம்பத்தில் குழப்பத்தோடு நகரும் திரைக்கதையை இறுதியில் புரியும் வகையில் தொகுத்துள்ளார்.

எழுதி இயக்கியிருக்கும் விஜய் ரங்கநாதன், உலகில் நடக்கும் செயல்கள் அனைத்தும் திட்டமிடப்படாதவையே தற்செயல் நிகழ்வுகளே என்பதைக் கூறும் வகையில் காட்சிகளாக்கி உள்ளார்.காதலை,காமத்தை எடுத்துக் கொண்டால் தேனின் ருசியைப் பார்க்க மலருக்கு மலர் தாவும் பட்டாம்பூச்சியின் குணம் கொண்டவன் மனிதன் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.பட்டாம்பூச்சியின் வளரும் பருவத்தையும் கூட்டுப் புழுவில் இருந்து உடைத்துச் சிறகடித்து பறக்கும் காட்சியைக் காட்டி மனித மனம் தளைகளில் இருந்து விடுதலை பெற்றுச் சுதந்திரத்தை நாடுவதைக் குறியீடாகக் கூறியிருக்கிறார் இயக்குநர்.இந்நாள் கணவரோடு முன்னாள் காதலனோடும் புகை மது கஞ்சா என்று பகிர்ந்து கொள்ளும் போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் கணவர் பாத்திரம் முன்னாள் காதலன் சார்ந்து சந்தேகப்படுவது நம்பும்படியாக இல்லை. கதாபாத்திர முரணாக இருக்கிறது.நீ உத்தமியா என்று கேட்பதும் மிகை.

ஒரு பெண்ணின் மன உளைச்சலையும் தவிப்பையும் சிக்கலையும் வெளிப்படுத்த எண்ணி உள்ள இயக்குநர் அதைப் பார்வையாளர்களுக்கு முழுதாகக் கடத்தத் தவறிவிட்டார்.

மொத்தத்தில், ‘ஓ பட்டர்ஃப்ளை’ மனதில் குறைந்த ஆயுளே தங்கும்.