‘கடுக்கா’ திரைப்பட விமர்சனம்

விஜய் கௌரிஷ், ஸ்மேகா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன் ,மணிமேகலை, சுதா நடித்துள்ளனர்.
.இயக்கம் எஸ் எஸ் முருகராசுஒளிப்பதிவு- சதிஷ் குமார் துரைகண்ணு,இசை -கெவின் டி காஸ்ட்.தயாரிப்பு விஜய் கௌரிஷ் ப்ரொடக்ஷன்ஸ்.

மக்களிடம் பரவலாக பேசப்படும்  வாக்கியம் ‘கடுக்கா கொடுத்துவிட்டான்’ என்பது. அப்படி என்றால் ஏமாற்றி விட்டான் என்று பொருள்.கடுக்காய் என்பது ஒரு மூலிகைத் தன்மை கொண்ட காய் .அதனை உலர வைத்து நாட்டு மருந்துக் கடையில் விற்பார்கள். கடுக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் விலகி பேதியாகும்.ஏமாற்றப்பட்டாலும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நிகழ்ந்தாலும் பயந்து மனிதர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். எனவேதான் ‘கடுக்கா கொடுத்து விட்டான்’ என்ற பொருள் பிரபலமாகி இருக்கிறது. யப்ப்பா ஒரு தலைப்புக்கு இவ்வளவு விளக்க வேண்டி உள்ளது.

அந்த தலைப்பில் வந்திருக்கிற இந்தப் படம் எப்படி இருக்கிறது? சரி ‘கடுக்கா’ படத்தின் கதை என்ன? தமிழ் சினிமாவில் வழக்கமாக பெரும்பாலான கதாநாயகர்கள் வேலை வெட்டி இல்லாமல் தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குப்  பொழுதுபோக்காக ஏதாவது ஒரு பெண்ணைக் காதலிக்க முயற்சி செய்வார்கள்.அல்லது காதலிப்பார்கள்.

அப்படித்தான் கடுக்கா நாயகன் விஜய் கெளரிஷ்,வேலை செய்யாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். அம்மா தான் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். தினசரி வேலைக்குச் செல்வது போல் உடை அணிந்து கொண்டு பெண்களைப் பார்க்கச் செல்வார் .யாரும் அவரை ஏறெடுத்துப் பார்க்காதது மட்டும் அல்ல ஏளனமும் செய்கிறார்கள். இப்படி மனம் காய்ந்து கிடக்கிற அவர் வீட்டுக்கு எதிரே புதிதாக ஸ்மேஹா குடி வருகிறார் . அப்புறம் என்ன? எதிர்வீட்டு ஜன்னலை நோக்கி மன்மதன் பானமிட ஆரம்பிக்கிறான்.காதல் என்கிற பெயரில் தொடர்ந்து  தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் விஜய் கெளரிஷின் நண்பர் ஆதர்ஷும் ஸ்மேஹாவை விரும்புகிறார்.ஸ்மேஹாவின் தந்தை வழியாக ’குடிசினேகம்’பிடித்து அந்தக் குடும்பத்திற்குள் எளிதாக நுழைழ்ந்து விடுகிறார். தனது விருப்பத்தை நாயகியிடம் கூறுகிறார். விஜய் கெளரிஷின் காதலை ஏற்றுக் கொள்ளும் ஸ்மேஹா,அதை மறைத்துக் கொண்டு ஆதர்ஷையும் காதலிப்பதாகச் சொல்கிறார்.

நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணைக்  காதலிக்கிறார்கள்,அதுவும் ஒருவருக்கொருவர் தெரியாமல்.ஒரு கட்டத்தில் அந்த உண்மை தெரிய வருகிறது.இந்தப் பிரச்சினைக்கு முடிவு என்ன? ஸ்மேஹாவிடம் கேட்பது என்று முடிவு செய்கிறார்கள். அவரோ ஆதர்ஷைக் காதலிப்பதாக கூறுகிறார்.அப்போது ஏற்றுக் கொண்டாலும் கௌரிஷ் தனக்குள் உடைந்து போகிறார்.ஒரு கட்டத்தில் அந்தப் பெண் இருவரையும் ஏமாற்றியது தெரிகிறது.தங்களை இருவரையும் ஏமாற்றியதற்காகப் பழிவாங்கலாம் என்று முடிவு செய்கிறார்கள். அவர் யாரைத்தான் காதலிக்கிறார்? உண்மை என்ன? என்பதை இயல்பாகவும், நகைச்சுவையாகவும் சொல்வதே ‘கடுக்கா’. 

நாயகனாக நடித்திருக்கும் விஜய் கெளரிஷ் அவரது நண்பராக நடித்திருக்கும் ஆதர்ஷ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் ஸ்மேஹா அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், அவர்கள் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரங்களை பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.அந்த மூன்று பிரதான பாத்திரங்களே படத்தின் கதையை இறுதிவரை சுமந்து செல்கின்றன.

சைட் அடிப்பது 24 மணி நேர வேலையாகப் பார்க்கும் விஜய் கெளரிஷ், அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு,ஊர் சுற்றுவது ,  பொழுதுபோக்குக்குத் தாயம் விளையாடுவது, வெட்டிப் பேச்சு பேசுவது என்று மிக இயல்பாக நடித்திருக்கிறார். எவ்வளவு அவமானங்களைச் சந்தித்தாலும் துடைத்து விட்டுச் செல்லும் இக்காலத்து இளைஞர் பாத்திரமாக வருகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்மேஹா, பக்கத்து வீட்டுப் பெண் போல் எளிமை.இந்த காலத்துப் படிக்கும் பெண்களின் விருப்பங்களை மட்டுமல்ல மனக் குமுறல்களையும் தனது பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.

விளம்பர பேனர்கள் எழுதும்சைன் போர்டு ஆர்டிஸ்ட்டாக வரும் மற்றொரு நாயகனான ஆதர்ஷ் தனது இயல்பான நடிப்பால் கவனம் பெறுகிறார்.நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் மஞ்சுநாதன் பேச்சு, உடல் மொழி ,அந்த கொங்குத் தமிழ் என்று பின்னிப் பெடல் எடுக்கிறார்.குணச்சித்திரமாகவும் நகைச்சுவையாகவும் அவரது பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.படத்தில் வரும் மணிமேகலை, சுதா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கெவின் டி,காஸ்ட் இசையில் பாடல்கள் கேட்க வைக்கும் ரகம் .பின்னணி இசையும் குறையில்லை.ஒளிப்பதிவாளர் சதிஷ் குமார் துரைகண்ணு, கொங்கு மண்ணில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையும் கதை மாந்தர்களையும்,கதையின் பின்புலத்தையும் இயல்பாகப் படப் பதிவு செய்துள்ளார்.கதை நிகழ்விடங்கள் அனைத்துமே நாம் நேரில் சென்று பார்க்கிற உணர்வு தருகின்றன. படத்தில்  கொங்கு தமிழில் பேசப்படும்  இயல்பான வசனங்கள் அது ஒரு பாத்திரம் போல் படத்திற்குத் துணை செய்கிறது.

படத்தொகுப்பாளர் எம்.ஜான்சன் நோயல்,குறையின்றி படத்தொகுப்பு செய்துள்ளார்.

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.எஸ்.முருகராசு,கொங்கு மண்ணின் பின்னணியில் ஒரு போட்டிக் காதல் கதையைக் கூறினாலும் சமூகத்துக்கு தேவையான ஒரு கருத்தையும் பதிவு செய்துள்ளார் .படிக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் இக்கால இளைஞர்களின் பிற்போக்குத்தனமான  காதல் என்று பார்க்கிற பெண்கள் பின்னால் காதல் என்று சுற்றும் பொறுப்பின்மையையும் கண்டித்துப் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்.’காதல் ஜாக்கிரதை!’ என்று கூறித்தான் இந்தப் படத்தை விளம்பரம் செய்கிறார்கள்.
காதல் என்கிற பெயரில் ஏமாற்றும் பல படங்களுக்கு மத்தியில் உலக யதார்த்தத்தைக் கூறி எச்சரிக்கும் இந்தப் படம் நிச்சயமாக வரவேற்கத்தக்கது. இந்தப் படம் ஒரு புதிய திரை அனுபவமாக ரசிக்க வைப்பதுடன் நல்ல கருத்து சொல்லும் படமாகவும்  உள்ளது.

பட்ஜெட் படம் என்ற பெயரில் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவிற்கு மலிவான படங்கள் வரும் இக்காலத்தில் ,சற்றும் குறை இல்லாத ஒரு நிறைவான அத்தனை அம்சங்களும் நிறைந்து ஒரு பட்ஜெட் படம் உருவாக்க முடியும் என நிரூபித்துள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.முருகராசு.

மொத்தத்தில், ‘கடுக்கா’ காதல் தொல்லையைக் கூறும் படம்.அதே சமயத்தில் 100% நகைச்சுவைக்கும் கலகலப்புக்கும் உத்திரவாதம் தரும் படம்