சினிமாவில் விவசாயம் ,விவசாயிகள் பற்றி பேசுவது என்பது ஒரு கவர்ச்சியான கச்சாப் பொருளாக அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் விவசாயிகளைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் அதன் அசல் அடையாளத்தோடு சொல்ல முயன்றிருக்கும் படம்தான் கடைசி விவசாயி.
காக்கா முட்டை படம் மூலம் அழுத்தமான முத்திரை பதித்த மணிகண்டன்தான் இயக்கி இருக்கிறார்.ஒளிப்பதிவு தயாரிப்பு எல்லாம் அவரே.
ஒரு 80 வயது முதியவர் தான் படத்தின் கதைநாயகன் மட்டுமல்ல கதாநாயகனாகவும் வருகிறார்.
மாயாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டி. உசிலம்பட்டியில் ஒரு விவசாயியாக வருகிறார் இவர். சுற்றுப்புறமே
வறட்சியில் தவிக்க , நல்லாண்டியின் கேணியில் மட்டும் தண்ணீர் இருக்கிறது. அந்தத் தண்ணீரை வைத்து எவ்வித செயற்கை உரத்தையும் நாடாமல் இயற்கை முறையிலேயே விவசாயம் செய்பவர்.
வறட்சியால் பல விவசாயிகள் தங்களது நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்று வரும் சூழலில், நல்லாண்டியின் நிலத்தையும் பல லட்சம் கொடுத்து வாங்க முயல்கின்றனர் ரியல் எஸ்டேட்காரர்கள். ஆனால் இவர் விற்க மறுக்கிறார்.
ஊரில் திருவிழா வருகிறது. அப்பகுதியின் பல்வேறு சமூகத்தினரும் அந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில் திருவிழாவிற்கு ஏற்பாடு நடைபெறுகிறது.
திருவிழாவிற்கு நெல்மணியை படையலாக வைக்கிறார்.
பிராணிகள் மீதும் அன்பு செலுத்தி வரும் நல்லாண்டியின் விவசாய நிலம் அருகே மூன்று மயில்கள் இறந்து கிடக்கின்றன. இறந்த மயில்களை அறியாமையால் தனது நிலத்திலேயே புதைத்தும் விடுகிறார். பாதி விவசாயம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்தச் செய்தி காவல்துறைக்குச் செல்ல சிறையில் அடைக்கப்படுகிறார் நல்லாண்டி.
நல்லாண்டி வழக்கில் இருந்து மீண்டாரா ? அவர் பாதியில் விட்டுச் சென்ற சாகுபடி என்னவானது?
திருவிழா நடந்ததா என்பதே படத்தின் மீதிக் கதை
நாயகனாக தோன்றியுள்ள நல்லாண்டி இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இவர் வாழ்ந்ததைத் தான் இயக்குநர் மணிகண்டன் கேமரா கொண்டு படமாக்கியிருக்கிறார் என்பது போல் அப்படி ஓர் அச்சு அசலாக இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
நெற்பயிரும் உயிரும் ஒன்று தான் என்று அவர் கூறும் போது ஒரு விவசாயியின் வேதனையை உணரவைக்கிறது.
பயிர்கள் செழித்து வளரும்போது மகிழும் இடங்களிலும் வாடிய பயிரைக் கண்டபோது தானும் வாடும் இடங்களிலும் நல்லாண்டி நடிப்பில் மிளிர்கிறார்.
சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் இருவர்களின் கூட்டணியில் உருவான பின்னணி இசை மேலும் பலமாக அமைந்திருக்க முடியும்.
ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வரும் கதாபாத்திரம் தான் விஜய் சேதுபதிக்கு.இறந்து போன பெண்ணை நினைத்து வாழும் முருக பக்தனாக வரும் அவர் தன் கதாபாத்திரத்தைக் கச்சிதமாக செய்து முடித்துள்ளார்.கதையில் பெரிதாக ஆதிக்கம் செலுத்தாதது ஒரு சிறு குறை.
அதேபோல் யானையை வைத்துப்பிழைக்கும் யோகிபாபுவின் கதாபாத்திரமும் பெரிதான ஈர்ப்பைக் கொடுக்கவில்லை .
மற்றபடி, நீதிபதியாக வந்த ரெய்ச்சல் ரெபேகா, போலீஸ் ஏட்டாக வந்த காளைப் பாண்டியன் ,கிராமவாசிகளாக வந்த முனீஸ்வரன், காளிமுத்து உள்ளிட்ட கதாபாத்திரங்கள் மிகவும் பொருத்தமான தேர்வுகள்.
படத்திற்கு மிகப்பெரும் ஒரு பலமாக இருப்பது ஒளிப்பதிவு. அனைத்தையும் தனது கேமராவில் நடிக்க வைத்த மணிகண்டனை பாராட்டியே ஆக வேண்டும்.
தொழில்நுட்ப ஆதிக்கங்கள் எட்டாத ஒரு கிராமத்தில் வாழும் இந்த நல்லாண்டியின் பாத்திரத்திற்கு அருகே நம்மை அழைத்துச் சென்று கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
படத்தில் நல்லாண்டியின் கதாபாத்திரம் இறந்து போனாலும் பார்க்கிறவர் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்.
மொத்தத்தில் இப்படம் அனைவர்க்கும் பிடித்த படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .
கடைசி விவசாயி – கடைக் கோடி மக்கள் வரை பார்க்க வேண்டிய படம்.