புதுமைப் பித்தன் பார்த்திபன் இயக்கியுள்ள படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. இது ஒரு கதை இல்லாத படம் என்று சொன்னது ஒரு கவர்ச்சிக்குத்தான். கதையில்லாது எப்படி இரண்டரை மணி நேரம் ஓட்டுகிறார் என்று பார்ப்போமே என்கிற எதிர்பார்ப்பை ஆவலைக் கிளப்பிவிட்டு விட்டார்.
நிஜத்தில் இதில் கதையில்லாமல் இல்லை. இதை சினிமா உதவி இயக்குநர் ஒருவரின் கதை எனலாம். படத்தின் கதை விவாதமே முக்கிய களம். எ பிலிம் வித்தவுட் ஸ்டோரி. என்பது அவர்களின் படக்குழு கதையில்லாமல் படமெடுக்க படுகிறபாட்டையே சொல்கிறார் எனலாம்.
சந்தோஷ் ஓர் உதவி இயக்குநர்.காதல் திருமணம் செய்து கொண்டவர் மனைவிஅகிலாகிஷோர் வேலைக்குப் போகிறவர்.
இட வசதி இல்லாமல் வீட்டிலேயே கதை விவாதம் நடக்கிறது. பல அசௌகர்யங்களைப் பொறுத்துக் கொள்கிற காதல் மனைவி ஒரு கட்டத்தில் நீ நல்ல கதை கிடைத்து படம் செய்தி ஜெயித்து விட்டுவா.நான் வருகிறேன் என்று பிரிந்து போகிறாள். அவன் கதை கிடைத்து ஜெயித்தானா என்பதே முடிவு.
சினிமா ஸ்டோரி டிஸ்கஷன் என்பதை கதைக்களமாக்கி ஒரு படமாக எடுக்க முயன்ற பார்த்திபனின் துணிச்சலான புதிய முயற்சிக்கு முதலில் பாராட்டுக்கள்.
கதை விவாதத்தின் போக்கையும் அங்கு நடக்கும் கூத்துகளையும் அழகாகக் காட்டியுள்ளார், அந்த விவாதமே பலவித ரசவாத மாற்றங்களை நிகழ்த்திக் காட்டுகிறது. பல பார்முலாக்களை உடைக்கிறது.
அதுவும் இன்றைய சினிமாவின் போக்கையும் திடீர் இயக்குநர், திடீர் டுபாக்கூர் தயாரிப்பாளர்களையும் கண்முன் நிறுத்தியிருக்கிறார் .பல இடங்களில் மிஸ்டர் பொதுஜனமாக சிலரை வைத்து தடாலடி கேள்விகளையும் கேட்டு சிந்திக்கவும் வைத்துள்ளார்.
அனுபவசாலிஉதவி இயக்குநராக வரும் தம்பி ராமையா, நவரச நடிப்பை வழங்கி படத்தை பாதி தூரம் தூக்கிச் செல்கிறார். யாரிந்த நாயகன் சந்தோஷ்? திறமைகளை கண்ணிலும் தாடியிலும் புதைத்த முகம். நாயகி அகிலா கிஷோர் இன்னொரு நயன்தாரா போலத் தோன்றுகிறார்.நயன்தாராவைவிட நன்றாக நடிக்கிறார்.
சந்தோஷ், அகிலா கிஷோர் இருவருமே நம்பிக்கை வரவுகள்தான்.
விஷால், டாப்சி, பிரகாஷ்ராஜ், விஜய் சேதுபதி, சேரன், கலைஞானம்,ஆகியோரை அளவாக அழகாகப் பயன்படுத்தி யிருக்கிறார்.சந்தோஷ் சொல்லும் கதைக்குள் வரும் ஆர்யா அமலா பால் காதல் கதையின் நீளம் மட்டும் வேகத்தடை. ஆனால் அந்த உதவி இயக்குநர் கூட்டம் கூட நடிகர்களாகத் தெரியவில்லையே. அட..!
உதவி இயக்குநரின் வாழ்க்கையையும் வலிகளையும் சொல்லி யிருக்கிற பார்த்திபன், தம்பி ராமையா பாத்திரத்தின் மூலம் சினிமா தின்ற மனிதர்களையும் காட்டியுள்ளார்.
ராஜரத்னத்தின் கேமரா கச்சிதம். பின்னணி இசையும் பொருத்தம்.
மொத்தத்தில் இது ஒரு புதிய அலைக்கான படம் எனலாம். தொடங்கி வைத்துள்ளார் பார்த்திபன்.