ரஜினி ஒரு வியாபார மதிப்புள்ள பிம்பம். இயக்குநர் ரஞ்சித் யதார்த்த தேடலுள்ளவர். இவர்கள் கூட்டணி எப்படி இருக்கும் ? இந்தக் கூட்டணியே ஒரு சவால்தான் என்கிற எதிர்பார்ப்பைக் கிளப்பிய படம்தான் ‘கபாலி’
சரி ‘கபாலி’யின் கதை என்ன?
ஒருகாலத்தில் அதாவது தன்னுடைய தாத்தா காலத்திலேயே திண்டிவனம் பக்கத்தில் இருந்து மலேசியாவுக்கு வேலை தேடி போனது ரஜினியின் குடும்பம். அங்கே பிழைப்பு தேடிச் சென்று தோட்டங்களில் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்க்கும் தமிழர்களுக்கு ரஜினி உதவியாக இருக்கிறார். அவர்களை வேலை வாங்கும் தோட்ட நிர்வாகத்தினருக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்; ஜெயிக்கிறார். சம்பள உயர்வு பெற்று தருகிறார். . இதனால் இவரது புகழ் மெல்ல பரவுகிறது. மலேசிய தமிழர்கள் தலைவரான நாசருக்கு ரஜினிகாந்தின் கொடுமை கண்டு பொங்கும் இந்த நியாயமான போக்கு பிடித்துப் போய் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார்.
தமிழர்கள் சிலர் அங்குள்ள சீனர்களுடன் கூட்டு வைத்து போதை மருந்து கடத்துதல் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதைத் தட்டிக்கேட்ட நாசரைக் கொன்று விடுகின்றனர். அந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினி தமிழர்கள் தலைவராகிறார். இதைப் பொறுக்காத கடத்தல் கும்பல் அவரையும் தீர்த்துக்கட்ட வருகிறது. இந்த மோதலில் தாதாவின் கூட்டத்தை ரஜினி போட்டுத்தள்ளுகிறார்.
அப்போது கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவியை ரவுடிகள் சுடுகின்றனர். இதில் அவர் இறந்து போனதாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகிறார். ரஜினி மீது ஒரு கொலைப்பழி விழுகிறது.சிறை செல்ல நேரிடுகிறது.. 25 வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு விடுதலையாகி வெளியே வரும் ரஜினி போதை கடத்தல் கும்பல், சமூகத்தில் வியாபித்துப் பரவி இளைஞர்கள், மாணவர்கள் வாழ்க்கையை சீரழித்துக்கொண்டு இருப்பதை கண்டுக் குமுறிச் சீறுகிறார். ஒரு கட்டத்தில் அவரது மனைவியும் குழந்தையும் உயிருடன் இருக்கும் தகவலும் அவருக்கு தெரிகிறது. போதை கும்பலை ஒழித்தாரா? குடும்பத்தினருடன் அவர் சேர்ந்தாரா என்பதே மீதிக் கதை.
ரஜினி சிறையில் 25 வருடங்கள் இருந்து விட்டு வெளியே வருவது போன்று படம் தொடங்குகிறது. அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போதே அந்த 25 வருடங்களின் மலேசியாவின் தலைகீழ் மாற்றங்கள் அவருக்குள் புரிய வைக்கப்படுகிறது.
கைதி சீருடையை கழற்றி வீசி நரைத்த ரஜினிகாந்த் தொழிலாளர்கள் தலைவனாக, மக்களுக்கு நல்லது செய்யும் தாதாவாக என்று படம் முழுக்க வலம் வருகிறார்.தாடியுடன் கண்ணாடி கோட் அணிந்து தனக்கு அறிவுரை சொல்லும் போலீசிடம் மகிழ்ச்சி என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி விட்டு ஸ்டைலாக நடந்து வரும் அறிமுகக் காட்சி அமர்க்களம். அக்காட்சி அவரது ரசிகர்களுக்கானது எனலாம்.
கடத்தல் கும்பல் தலைவனின் அடியாளை ஒரே அடியில் வீழ்த்தி’ நான் வந்துட்டேன்னு சொல்லு ‘என்று கர்ஜிப்பதில் கம்பீரம், “நான் கபாலிடா…” என்று எச்சரித்துவிட்டு வருகிற வீரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் காட்சிகள். சென்னையில் மனைவியை தேடி வந்த இடத்தில் கொலைவெறியுடன் பாயும் ரவுடிகளுடன் மோதுவதில் ஆவேசம். மனைவி உயிருடன் இருக்கும் தகவல் தெரிந்ததும் மகிழ்ச்சியில் பரபரப்பது, அவரை நேரில் பார்த்து உருகுவது காதலான பாசமான பரவச கட்டங்கள். பிளாஷ்பேக்கில் இளம் ரஜினியாக துறுதுறுப்பு காட்டியுள்ளார்.
ரஜினியை ஒரு போராளியாக மாற்றிடும் மனைவியாக ராதிகா ஆப்தே,ஒரு நடிகையாக வித்தியாச தேர்வுதான். கணவரை நீண்ட இடைவெளிக்கு பிறகுப் பார்த்து உருகிக் கண்ணீர் விடும் இடத்தில் நெகிழ வைக்கிறார். ரஜினிகாந்த் மகளாக தன்ஷிகா. அவர் தன் அப்பாவையே கொல்ல நினைப்பது திரைக்கதை திருப்பம். ரஜினியின் முரட்டு பாதுகாவலராக வருகிறார் தினேஷ். அவரது முடிவு அனுதாபத்தை அள்ளும். போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக வரும் வின்ஸ்டன் சா, தாதாவாக வரும் கிஷோர் இருவரின் வில்லத்தனங்களும் மிரட்டல் ரகம்.
நாசர், ஜான் விஜய், கலையரசன், ரித்விகா, மைம்கோபி நடித்த கதாபாத்திரங்களும் மனதில் பதிபவை. படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாகவே நகர்கின்றன. ரஜினி தன் மனைவியைத் தேடி அலையும் காட்சிகள் சாரி கொஞ்சம் நீளம்தான். குறைத்து இருக்கலாம். ரஜினியை குடும்பத்தோடு கொல்ல அடியாட்கள் வந்த பிறகு காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குநர் பா.இரஞ்சித். மகள் தன்ஷிகா தன் அப்பா ரஜினி யையே கொல்ல நினைப்பது திரைக்கதை முடிச்சு. வயதான ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களை விட பின்னணியே ஈர்க்கிறது. நெருப்புடா பாடலில் மட்டும் சூடு பறக்கிறது. முரளியின் கேமரா, மலேசிய அழகை லாகவமாக அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது.
வழக்கமான குத்துப்பாட்டுகள் இல்லை செயற்கையான வசனங்கள் இல்லை. நம்ப முடியாத கனவுக்காட்சிகள் இல்லை. வெறுப்பேற்றும் வணிக நகைச்சுவைகள் இல்லை.நாகரிகமாக ரஜினியை அணுகி உள்ளார் இயக்குநர்.கதை புதிதல்ல என்றாலும் ரஜினி என்கிற யானையைக் கவனமாகக் கட்டி மேய்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.படம் பார்த்து முடிந்ததும் எல்லாருக்கும் எழும் கேள்வி , இது ரஜினி படமா? ரஞ்சித் படமா?
எத்தனை நாட்களுக்குத்தான் ரஜினியை ஒரு கேளிக்கை மன்னனாகவே பார்ப்பது? ஒரு மாற்றம் வேண்டாமா?
பிரம்மாண்ட வணிக மதிப்புள்ள நட்சத்திர நடிகரான ரஜினி, தன் வயதுக்கும் தோற்றத்துக்கும் ஏற்ப ஒரு வளர்சிதை மாற்றத்துக்குத் தன்னை உட்படுத்தி மாற்றிக் கொண்டுள்ள படம் இது எனலாம்.