கமல் – மணிரத்னம் மீண்டும் இணைந்த ‘தக் லைஃப்’ கவுண்ட் டவுன் ஆரம்பம்!

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில், முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் பாடலான, ‘ஜிங்குச்சா’ கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டபோது சென்னை மாநகரமே இசையும் கொண்டாட்டமுமாக முழங்கியது. திரையுலக ஜாம்பவான்கள் கமல் ஹாசன், மணிரத்னம், மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் வெளியிட, முன்னணி நட்சத்திரங்கள் சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் அசோக் செல்வன் பங்கேற்ற இந்நிகழ்வு, இந்திய சினிமாவின் துணிச்சலான புதியதோர் அத்தியாயத்தின் தொடக்கமாகத் திகழ்ந்தது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ஆர். மகேந்திரன், மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் சிவா ஆனந்த் இணைந்து தயாரிக்க, ‘தக் லைஃப்’ திரையிலும் திரைக்குப் பின்னும் புதிய, வலுவான கூட்டணியுடன் உருவாகி வருகிறது.

கல்யாணக் கொண்டாட்டம் என்னும் விறுவிறுப்பான பின்னணியில், கமல் ஹாசனும், சிலம்பரசன் டி.ஆரும், இணைந்து ஆடியிருக்கும் இந்தப் பாடல், ரஹ்மானுக்கே உரித்தான பாணியில் நாட்டுப்புறத் தாளக்கட்டும், தற்கால இசையும் இணைந்து அமைந்திருக்கிறது. கமல் ஹாசனின் வரிகளுடன், ஈர்க்கும் குறும்பும், துள்ளலுமான இந்தப் பாடல், பல அடுக்குகளைக் கொண்ட தக் லைஃப் உலகத்துக்கான வண்ணமயமான முதல் வாசலாக அமைந்துள்ளது.

உலகளாவிய வினியோகஸ்தர்கள் பட்டியல்

தக் லைஃப் திரைப்படத்தின் வினியோகஸ்தர்கள் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது:

* தமிழ்நாடு – ரெட் ஜெயன்ட் மூவீஸ்
* சர்வதேச அளவில் – ஏபி இண்டர்நேஷனல், ஹோம் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட்டுடன் இணைந்து
* வட இந்தியா – பென் மருதர் சினி எண்டர்டெய்ன்மெண்ட்
* ஆந்திர பிரதேஷ் & தெலுங்கானா – ஸ்ரேஷ்த் மூவீஸ்
* கர்நாடகா – ஃபைவ் ஸ்டார் செந்தில்

தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ உரிமைகளை சரிகம நிறுவனம் பெற்றுள்ளது.

அதிகாரபூர்வமான ஓடிடி தளம் நெட்ஃப்ளிக்ஸ்.

வினியோகஸ்தர்கள் முடிவு செய்யப்பட்ட நிலையில், தயாரிப்பாளர்கள் உலகளாவிய திரையரங்க வெளியீட்டை ஜூன் 5, 2025 அன்று நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். உலகெங்கும், தலைமுறை வேறுபாடின்றி அத்தனை ரசிகர்களும் இதற்காகக் காத்திருக்கிறார்கள்.

மேலும், தக் லைஃப் படக்குழுவினர், ஜஸ்ட் க்ரோ தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து நிகழ்த்தும் தக் லைஃப் திருவிழா, ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மே மாதம் 23-ஆம் தேதி நிகழும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

தக் லைஃப் திரைப்படத்தில், ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் தோன்றுகிறார். சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, அஷோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாஸர், அலி ஃபஸல், சான்யா மல்ஹோத்ரா ஆகியோருடன் இந்திய அளவில் புகழ்பெற்ற மேலும் பல நட்சத்திரங்கள் இணையவிருப்பதால் பெரும் நட்சத்திரப் பங்கேற்பு கொண்ட படமாக தக் லைஃப் உருவாகி வருகிறது. திரையிலும் திரைக்குப் பின்னுமாக இத்தனை திறமையான கலைஞர்கள் ஒன்றிணைவதால் இது ஒரு மாபெரும் திரை அனுபவமாக இருக்கும். தக் லைஃப் திரைப்படத்தை மிகச் சிறந்த கலைஞர்கள், தலைமுறைகளைக் கடந்து நிற்கும்படி, பிரம்மாண்டமான, உணர்வுப்பூர்வமான காட்சி அனுபவமாக உருவாக்கி இருக்கிறார்கள். இதோ, முதல் பாடல் வெளியாகிவிட்டது. கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. தக் லைஃப் கவுண்ட் டவுன் ஆரம்பம்.