சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா, சிவதா, பிரிகிடா சாகா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர். வி. உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளனர்.
ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார் .ஒளிப்பதிவு ஆர்தர் ஏ வில்சன், இசை யுவன் சங்கர் ராஜா, படத்தொகுப்பு பிரதீப் ஈ. ராகவ், கிராஸ் ரூட் பிலிம்ஸ் மற்றும் லார்க்ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளன.
மதுரை மண்ணின் பின்னணியில் தோழமையுடைய நண்பர்கள் இருவரிடையே ஒருவன் நல்ல சக்தியாகவும் இன்னொருவன் தீய சக்தியாகவும் மாற, இருவரிடையே பகையுணர்வு நுழைய அவர்களிடையே நடக்கும் முட்டல் மோதல் முடிவு என்பதுதான் கதை.
இக்கதை மண், பெண், பொன் என்று மூன்று தளங்களில் பயணிக்கிறது.இந்தக் கதையில் பகைமை உணர்ச்சியைத் தூண்டவும் பகை வளரவும் மண் எவ்விதத்தில் இடம் பிடிக்கிறது? பெண் பாத்திரம் எந்த வகையில் இடம் பெறுகிறது? பொன் அதாவது தங்கம் எவ்வளவு இடம் பெறுகிறது ? என்று காட்சிகள்அமைக்கப்பட்டுள்ளன.
சசிக்குமாரும் உன்னி முகுந்தனும் நண்பர்கள் . ஆதரவற்ற சூரிக்கு உன்னி அடைக்கலம் கொடுக்கிறார். அவருக்கு சூரியும் விசுவாசமாக இருக்கிறார்.
சசிகுமாருக்கும் உன்னி முகுந்தனுக்கும் இடையே மண், பெண், பொன் என்ற மூன்று விஷயங்களிலும் பகை உணர்ச்சி வளர்கிறது.இதில் சசிகுமார் நியாயத்தின் பக்கமும் உன்னி முகுந்தன் அநியாயத்தின் பக்கமும் நிற்கிறார்கள்.உன்னி முகுந்தனின் முரட்டு விசுவாசியாக இருக்கும் சூரிக்கு உன்னியின் கறுப்புப் பக்கங்கள் தாமதமாகவே தெரிய வருகின்றன.
ஒரு கட்டத்தில் சூரி நியாயத்தின் பக்கம் நிற்பதா? விசுவாசத்தின் பக்கம் நிற்பதா ?என்று திரிசங்கு நிலையில் தவிக்கிறார். கடைசியில் அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதுதான் கதையை உச்சகட்டக் காட்சிக்கு அழைத்துச் செல்கிறது.
ஆதி பாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமார் வழக்கம் போல நட்பு நாயகனாக நட்புக்குத் தன்னை தியாகம் செய்யும் பாத்திரத்தில் வருகிறார்.அவர் அன்பு, நட்பு, பாசம், ஆவேசம் என்று அனைத்து விதஉணர்வுகளையும் காட்டி நடித்துள்ளார்.அவரது நண்பனாக கருணா பாத்திரத்தில் நடித்துள்ள உன்னி முருந்தன் , சசிகுமாரின் செல்வாக்கின் மீதும் அவரது நேர்நிலை எண்ணங்களின் வெற்றியின் மீதும் பொறாமை கொள்கிறார்.நட்பு பொறாமையாக மாறும் அந்த மன உணர்வுகளை நன்றாக நடிப்பில் காட்டியுள்ளார்.பொறாமை உணர்ச்சி முற்றுவதையும் அது பகையாக மாறுவதையும் காட்டி நடித்துள்ளார்.அப்படிப்பட்ட எதிர்மறை நிழல் படிந்த பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
தனது மனசாட்சி கழற்றி வைத்துவிட்டுப் போராடும் சொக்கன் பாத்திரத்தில் சூரி நடித்துள்ளார்.வாயைத் திறந்தால் உண்மை கொட்டி விடும் அவர், பேச முடியாமல் தவிக்கும் மன நெருக்கடியைத் தனது நடிப்பில் காட்டியுள்ளார். உணர்வு நெருக்கடியில் ஆவேசமாகும் காட்சிகளில் அவர் நகைச்சுவை நாயகன் பிம்பத்தினை உடைத்துக் கொண்டு வெளியே வருகிறார்.
படத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துவேலாக சமுத்திரக்கனி வருகிறார் .மனசாட்சிப்படி நடக்க முடியாத ‘ரைட்டர்’ படத்தின் சாயல் கொண்ட கதாபாத்திரம்.அநியாயத்துக்கு துணை போக வேண்டிய நிர்ப்பந்தங்களை மனதில் பூட்டி நெருக்கடியைச் சந்திக்கும் ஒரு பாத்திரம். அதில் சிறப்பாகவே நடித்துள்ளார்.தோற்றத்தில் முதுமை காட்டினாலும் வடிவுக்கரசி அவர் பாத்திரத்தில் சோபிக்கிறார்.
இவர்கள் மட்டுமல்ல குறுகுறு பார்வையுடன் துறுதுறுப்புடன் சூரியை வளைய வரும் பெண் விண்ணரசி பாத்திரத்தில் நடித்துள்ள ரேவதி ஷர்மாவும் கவனிக்க வைக்கிறார் என்றால், சசிகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வியாக வந்து தோற்றத்திலும் அழகிலும் நடிப்பிலும் மனதில் பதிகிறார் ஷிவதா.
பிரிகிடா, ரோஷினி பிரியதர்ஷன் என்று மற்ற நடிகைகளும் குறை சொல்லாத நடிப்பை வழங்கி உள்ளார்கள்.அரசியல்வாதியாக வரும் ஆர்.வி. உதயகுமாரும் தியேட்டர் காரர் நாகராஜாக வரும் மைம் கோபியும் அப்படியே கவனம் பெறுகிறார்கள்.
படத்தின் முதல் பாதி முழுக்க கலகலப்பாக நகர்கிறது. இடைவேளை நெருங்கும் போது கதையில் விறுவிறுப்பு பற்றிக் கொள்கிறது.
எனவே இரண்டாம் பாதியில் கொஞ்சமும் சலிப்பு இல்லாத வகையில் திரைக்கதை விரைவாக நகர்கிறது. அதிலும் கடைசி 30 நிமிடங்கள் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள், யூகத்திற்கு அப்பாற்பட்டவை.இவையே பார்ப்பவர்களிடம் கவன ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன.
படத்தில் கருடன் என்றால் அது எந்தக் கதாபாத்திரத்தை குறிக்கிறது ? என்று யோசித்தால் பெரும்பாலும் அனைத்து பிரதான கதாபாத்திரங்களும் தங்களுக்கான சந்தர்ப்பத்தை ஒரு கருடன் போல் குறி பார்த்துக் கொண்டுள்ளன என்று தான் சொல்ல வேண்டும்.
இது மதுரை மண் சார்ந்த கதை என்பதால் மக்கள் ,கூட்டம் ,கோயில்,திருவிழா, கொண்டாட்டம் என்று படம் ஒரு திருவிழா உணர்வைக் கொடுக்கிறது. அதற்குக் காரணம் ஆர்த்தர் ஏ வில்சனின் ஒளிப்பதிவு .கிராமத்தில் உள்ள அன்பு ,பாசம், பகைமை, பழிவாங்கல் போன்றவற்றையும் படம்பிடித்துக் காட்டியுள்ளது ஆர்தர் ஏ வில்சனின் கேமரா.
இந்தக் காட்சிகளுக்கு ஏற்ற பின்னணியைக் கொண்டு வந்து உணர்வுகளைச் சரியாகக் கடத்தி உள்ளது யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. மொத்தத்தில் இப்படம் மதுரை மண்ணின் மைந்தர்கள் இடையே நடக்கும் முரட்டு உணர்ச்சிகள் பற்றிய மண் சார்ந்த நல்லதொரு பொழுது போக்கு ஆக்சன் படம் என்று கூறலாம்.