தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்திலேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜோக்கர்’ படம் ஆகஸ்ட் 12-ல் வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
படத்தில் நடித்துள்ள காயத்திரி கிருஷ்ணன் பேசியதாவது, ”எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என் கேரக்டர் ரொம்ப போல்டான கிராமத்து பெண் கேரக்டர். பொதுவா கிராமத்து பெண்கள் என்றால் போராட்டம் தைரியம் இல்லாமல் தான் காண்பிப்பார்கள். ஆனால் என்னுடைய கதாப்பாத்திரம் அதை பிரேக் பண்ணி உள்ளது. இந்த படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என கூறிமுடித்தார்.
ஆர்ட் டைரக்டர் சதீஷ் பேசியதாவது,
”ஊருபக்கம் நடக்குற கதை. நம்ம ஊரு பக்கம் நடக்குறதால வொர்க் செய்வதற்கு சிரமம் இல்லாமல் இருந்தது. அரசு அலுவலகங்கள் சம்பந்தமான செட் நிறைய உள்ளது. ஒரு ஒயின்ஷாப் செட் ஒன்னு போட்டோம். ஒயின்ஷாப் செட் போட்டதும், உடனே ஒருத்தர் வந்து குவாட்டர் கேட்டார். இது படப்பிடிப்பிற்காக போடப்பட்ட செட் விற்பனைக்கு இல்லைன்னு சொன்னோம். உடனே, இருந்துட்டு போகட்டும்; அவங்களுக்கு மட்டும் தான் குடுப்பியா, நான் மட்டும் என்ன ஒசிலையா கேக்குறேன். குடு என கடைசி வரை சொல்ல வந்ததை புரிந்து கொள்ளாமல் சென்றார். இது போல் நிறைய சுவாரஸ்யமான விசயங்கள் நடந்தது.
எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசியதாவது,
“இந்தப்படம் மட்டுமே தருமபுரி மண் சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை டெல்டா ஏரியாவை காட்டியுள்ளனர். ஆனால் தர்மபுரியை யாரும் காட்ட முயலவில்லை. ஆனால் இந்த படத்தில் காட்டியுள்ளனர். ஒரு பெண்ணின் தலையில் வரும் வேப்பெண்ணை வாடையைக் கூட மிகவும் இயற்கையாக காட்டி உள்ளனர். பற்களில் உள்ள மஞ்சள் கறையை கூட இயக்குநர் விட்டுவைக்கவில்லை. இது உண்மையிலேயே ஒரு உலகத்தரம் வாய்ந்த படம்” எனக்கூறினார்.
படத்தில் நடித்துள்ள ரம்யா பாண்டியன் பேசியதாவது, ”இயக்குநர் எனக்கு ரொம்ப பிரீடம் குடுத்தார். அதனாலேயே எனக்கு நடிப்பதற்கு இயல்பாக இருந்தது. இப்டி நடி, அப்டி நடி என எதுவுமே கூறவில்லை. நீங்களே நடியுங்கள் எனக்கூறிவிட்டார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் நன்றி” எனக்கூறினார்.
மு.ராமசாமி மிகவும் கண்கலங்கி உணர்ச்சியுடன் பேசினார். ”1990-களில் இருந்து நான் நடிக்கிறேன் இதுவரை நான் எந்த படத்தையும் பார்த்து பெருமிதம் கொண்டதில்லை. இந்த படத்தை என் படமாக பார்க்கிறேன். நான் என்ன எல்லாம் வெளியில் பேச நினைத்தேனோ, அந்த பிரச்சனை எல்லாம் இந்தப்படத்தின் மூலம் பேசியுள்ளேன். இது என்னுடைய படம் போல் உணரவைத்த ராஜு முருகனுக்கு நன்றி.”
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது,
”படத்துல லைவ் மியூசிக் தான் போட்டுள்ளோம் சவுண்ட் மிக்சிங் செய்யவில்லை. இந்த மாதிரி ரியல் கேரக்டர்கள் நடிச்ச படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும்” என பேசினார்.
இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது,
”சமூக வலைதளங்களில் அரசியல் தைரியமாக பேசும் அளவிற்கு மக்கள் முன்னேறி உள்ளனர். ஆனால் சினிமாவில் அது இன்னும் வரவில்லை. ஏன் இங்கு மட்டும் நுழையவில்லை. படத்தை மிகத் தைரியமாக எடுக்க வேண்டும் என இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டை தயார் செய்தேன். கலைஞர்களை ஜாதி, அரசியல் ரீதியாக அணுகக்கூடாது. அவர்களை கலைஞர்களாக தான் பார்க்க வேண்டும்” என பேசினார். மேலும் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கும் பதிலளித்தார்.
”படத்துக்கு நாங்க நினைச்ச மாதிரி எந்த பிரச்சனையும் இல்லை. சென்சார் கிடைக்காதுன்னு தான் நினைச்சோம். ஆனால் யு சர்டிபிகேட் கிடைச்சது. அரசியல் கட்சிகள் எதுவும் எங்களை மிரட்ட வில்லை. சென்சார் அதிகாரிகள் கெட்ட வார்த்தைகள் மற்றும் வன்முறை காட்சிக்கு மட்டும் கட் கொடுத்தனர். எல்லோருமே அரசியல் பேசணும் என்கிற கருத்தை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது தேர்தல் சமயத்தில் வருவதை விட சுதந்திர தினத்தில் வருவது இன்னும் நல்லது ”எனப் பதிலளித்தார்