‘கல்கி 2898 கிபி’ திரைப்பட விமர்சனம்

பிரபாஸ் ,அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன்,திஷா பதானி, ஷோபனா, பசுபதி, பிரம்மானந்தம் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கோட்டகிரி வெங்கடேஸ்வரராவ் படத்தொகுப்பு செய்துள்ளார். தயாரிப்பு வைஜெயந்தி பிலிம்ஸ் .வெளியீடு என்வி பிரசாத் ஸ்ரீ லட்சுமி மூவிஸ்.

இது மகாபாரதக் கதையின் அடிப்படையில் உருவாகி இருக்கும் திரைப்படம்.இந்தியாவில் ராமாயணம் ,மகாபாரதக் கதைகள் பற்றிய அறிமுகம் இல்லாதவர்கள் கிடையாது. எனவே இந்தக் கதையுடன் எந்த ரசிகரும் எளிதாகத் தொடர்பு படுத்திப் பயணிக்க முடியும்.
அப்படி மகாபாரத புராணக் கதை அம்சங்களுடன் நவீன செயற்கை நுண்ணறிவு, ரோபோக்கள் போன்ற தொழில்நுட்ப அம்சங்களை இணைத்து எதிர்காலத்தில் நடப்பதாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு கற்பனைக் கதை தான் இந்த கல்கி படம்.

மகாபாரதத்தில் எண்ணற்ற கிளைக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. எதை இழை பிரித்து திரைக்கதை அமைத்தாலும் அதுவே முழுப் படமாக விரியும். அப்படி கி.பி. 2898-ல்நடப்பது போன்ற ஒரு கற்பனை இந்தப் படம்.ஆனால் இது மாதிரியான இதிகாசம் சார்ந்த
Mythological கதைகளைப் படமாகுவதற்கு,அதீதக் கற்பனைகளைப் படமாக்குவதற்கும் இயக்குநருக்கு ஒரு தெளிவு வேண்டும். பட உருவாக்கத்தில் தனிப் பாணியையும் பின்பற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் அப்படைப்பு சரியாக அமையாது .அதனைச் சரியாகச் செய்தால் மக்களிடம் பெரும் வரவேற்பு பெறும். வழக்கமான மசாலா டெம்ப்ளேட்டுகளில் இருந்து விலகி அந்தக் கதை தனித்து தெரியும். அப்படித்தான் பாகுபலி , காந்தாரா படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் கல்கி.

இப்படி ஒரு கற்பனை செய்யவும் ஒரு துணிச்சல் வேண்டுமென்றால் அந்த கற்பனைக்கு களம் அமைத்துக் கொடுத்துத் தயாரிப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அப்படி செய்யப்படும் பிரம்மாண்ட காரியங்கள் தான் உலகில் புகழை வாங்கித் தருகின்றன.  அந்த வகையில் இத் தயாரிப்பைச் செய்திருக்கும் பட நிறுவனம் பாராட்டுக்குரியது.

பல ஆண்டுகளின் பல கொடூரமான பேரழிவுகளுக்குப் பிறகு உலகின் கடைசி நகரமாக எஞ்சி நிற்கிறது காசி.’காம்ப்ளக்ஸ்’ என்ற பெயரில் அங்கு எஞ்சியுள்ள வளங்களை சுரண்டி தனது வாழ்விடத்தை சொகுசாக அமைத்துக் கொண்டு அப்பகுதி மக்களை அடிமையாக வைத்திருக்கிறான் யாஸ்கின்.அந்தக் கொடுங்கோன்மைக்கு எதிராக ஷம்பாலா நகர மக்கள் போராடுகிறார்கள்.அவர்கள் ரகசியமாக இயங்குகிறார்கள்.அந்த உலகத்தின் கரன்சி தேடும் வீரனாக பைரவா வருகிறான். எப்படியாவது அந்த காம்ப்ளக்ஸ் சென்று தங்கி விட முயற்சி செய்கிறான்.ஒரு கர்ப்பிணி, அவள்தான் SUM 80.அவளைப் பிடிக்க வலை விரிக்கிறார்கள் யாஸ்கினின் ஆட்கள்.அதற்கு பைரவாவும் உதவி செய்ய களத்தில் இறங்குகிறான். மகாபாரத குருச்சேத்திரப் போர் நடந்ததிலிருந்து உயிரோடு இருக்கும் அஸ்வத்தாமனும் ஷம்பாலா நகரத்து தலைவியும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற பெரிய போராட்டம் நடத்துகிறார்கள்.அதன் பின்னே அவளுக்கு என்ன நடந்தது? அவர்களுக்குள் உள்ள தொடர்பு என்ன? பைரவா என்பவன் யார்? போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் பயணம் தான் இந்த கல்கி படத்தின் கதை.

படத்தில் பைரவாவாக பிரபாஸ், அஸ்வத்தாமனாக அமிதாப்பச்சன் ,சுப்ரீம் யாஸ்கினாக கமல்ஹாசன், சுமதியாக தீபிகா படுகோன், ரக்சியாக திஷா பதானி, மரியமாக ஷோபனா, வீரனாக பசுபதி ,ராஜனாக பிரமானந்தம் நடித்துள்ளனர்.

மகாபாரதம் கதையின் தொடர்ச்சியாக இப்படி ஒரு கற்பனையை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ள இயக்குநரின் தைரியம் நிச்சயம் பாராட்டுக்குரியது. .அதில் தொழில்நுட்ப அம்சங்களை உரிய விகிதத்தில் கலந்து அவர் பட உருவாக்கத்தில் பிரம்மாண்டத்தையும் காட்டி திரைப்படமாக்கியுள்ள விதம் சபாஷ் போட வைக்கிறது.புராண இதிகாசங்களில் வரமும் சாபமும் உண்டு அப்படி இதிலும் உண்டு.

பாகுபலிக்குப் பிறகு பிரபாஸுக்கு சரியான படம் உருவாகவில்லை என்ற குறை இருந்தது. அதைத் தீர்த்துள்ளது இந்தப் படம்.ஆனால் மேலும் அவருக்கு நடிப்புக்கான தருணங்களைக் கொடுத்திருக்கலாம்.இந்தப் படத்தில் அமிதாப்பச்சன் வருவது படத்திற்கு நட்சத்திர அந்தஸ்தைக் கூட்டியுள்ளது. அசுவத்தாமன் ஆக வரும் அமிதாப்,உண்மையான கதாநாயகன் போல் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.தீபிகா படுகோனுக்கு ஒரு நடிகையாக பெரிய நடிப்பு வேலை இல்லை.ஒரு நட்சத்திரமாகப் படத்திற்கு உதவி உள்ளார்.சில காட்சிகளில் வந்தாலும் கமல் பதிகிறார். அவரது குரலே பெரிய கவனத்தைப் பெறுகிறது.

சஸ்வதா சட்டர்ஜி, ஷோபனா ,பசுபதி, அண்ணா பென், ஆகியோர் தேவையான அளவு பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். மிருணாள் தாக்கூர், திஷா பதானி, பிரம்மானந்தா ஆகியோர் மேலோட்டமாக வந்து போகிறார்கள். இவர்கள் மட்டுமல்ல துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, இயக்குநர்கள் ராஜமெளலி, ராம்கோபால் வர்மா, அனுதீப் என்று ஒரு பெரிய பட்டாளமே கௌரவத் தோற்றத்தில் தலை காட்டியுள்ளது.

ஆங்கிலப்படங்களுக்கு இணையான கிராபிக்ஸ் காட்சிகள், அதிலும் கமல் வாழ்ந்து வரும் பகுதி அது ஒரு தனி உலகம் போல் அத்தனை பிரமாண்டம், அதிலும் லிப்ட் போல் பயன்படுத்தும் பிரமாண்ட உருவம், இரண்டாம் பாதியில் வந்த சேஸிங் என அனைத்தும் அட்டகாசம்.

படத்தின் முதல் பாதி மிதவேகம்தான். பிறகு தான் வேகம் எடுக்கிறது. ஒரு கற்பனை உலகத்தை நம் கண்களுக்கு விருந்தாக்கி உள்ள ஒளிப்பதிவாளர் ஜோர்ட்ஜே ஸ்டோ ஜில் கோவிச் செய்துள்ள ஒளிப்பதிவு பிரம்மாண்ட பிரமாதம். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும், பின்னணி இசை பிரகாசம் .கலை இயக்கம் செய்துள்ள அனில் ஜாதவ், சந்தோஷ் ஷெட்டி, வேலு, ரெம்பன் ஆகியோர் கடும் உழைப்பைப் போட்டுள்ளார்கள்.

இதிகாசப் பின்னணியில் இந்த நூற்றாண்டு இளைஞர்களையும் கவரும் விதமாக உருவாகி இருக்கும் இப்படத்தை லாஜிக் மறந்து வியந்து ரசிக்கலாம்.