MGK மூவி மேக்கர் சார்பாக s.ரவிசங்கர் தயாரித்துள்ள திரைப்படம் ‘களவுத் தொழிற்சாலை’.
இந்தப் படத்தை வெங்கி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் வெங்கடேஸ்ராஜாவுடன் S2 என்ற நிறுவனமும் இணைந்து வெளியிடுகிறது.
இந்தப் படத்தில் கதிர், வம்சி கிருஷ்ணா, மு.களஞ்சியம், குஷி, ரேணுகா. செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – V.தியாகராஜன், இசை – ஷியாம் பெஞ்சமின், படத் தொகுப்பு – யோக பாஸ்கர், கலை – முரளி ராம், நடனம் – சங்கர், பாடல்கள் – அண்ணாமலை, நந்தலாலா, டிசைன்ஸ் – சசி & சசி, அஞ்சலை முருகன், மக்கள் தொடர்பு – நிகில், எழுத்து, இயக்கம் -T.கிருஷ்ண ஷாமி.
உலகில் போதை மருத்து கடத்தல் மற்றும் வைரம் கடத்தலுக்கு அடுத்தபடியாக பணம் புரளும் தொழிலாக கருதப்படுவது சிலை கடத்தல் தொழில். இத்தொழிலில் ஆண்டு வருமானம் நாற்பது ஆயிரம் கோடிகள் என்று சொல்லப்படுகிறது.
இந்தக் ‘களவுத் தொழிற்சாலை’ திரைப்படம் இந்த சர்வதேச சிலை கடத்தல் பின்னணியில்தான் உருவாகியுள்ளது.
ஒரு சர்வதேச நிழல் உலக மனிதனின் மர்மம் நிறைந்த பயணத்தை கதைக் களமாக எடுத்துக் கொண்டு, அதில் சஸ்பென்ஸ்… காதல்… மற்றும் விறுவிறுப்பு கலந்து உருவாக்கப்பட்ட ஒரு படைப்புதான் இந்த ‘களவுத் தொழிற்சாலை’ திரைப்படம்.
இந்த கதைக் களம் இந்திய சினிமாவுக்கு புதியது என்பதால் இதை படமாக்குவதில் படத்தில் பங்கு கொண்ட தொழில் நுட்ப கலைஞர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்ததாம்.
குறிப்பாக ஒரு நெகட்டிவ் கதைக் களத்தில் படத்தில் விறுவிறுப்பான காட்சிகளும், பல அதிரடி திருப்பங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். ‘களவுத் தொழிற்சாலை’ திரைப்படத்தில் பல எதிர்மறை பாத்திரங்களாக இருந்தாலும், செயல்பாட்டில் ஒரு பாஸிட்டிவ் தன்மை இருக்கும். இது பரபரப்பான திரைக்கதை யுக்தியில் இருந்து மாறுபட்டு இருக்கிறதாம்.
வயலன்சை விரும்பாத சர்வதேச கடத்தல்காரன். அவனுக்கு துணை போகும் அப்பாவி திருடன். அவனை நேசித்தாலும் அவன் செயலை கண்டிக்கும் காதலி. திரைக்கதையில் அதிரடியாக நுழையும் ஒரு இஸ்லாமிய காவல்துறை அதிகாரி என்று இதன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதே சமயம் இந்த ‘களவுத் தொழிற்சாலை’ திரைப்படம் தொடர்பாக சில கேள்விகளும் எழுந்துள்ளன. இந்தப் படம் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் செய்த சிலை கடத்தல்களை பற்றியதா… அல்லது, தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய தீனதயாளன் என்ற சிலை கடத்தல் நபரை பற்றியதா… அல்லது, சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் வந்த சிலை கடத்தல் பிரிவின் காவல்துறை உயரதிகாரியான பொன்.மாணிக்கவேலின் கதையா என்றும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
வரும் செப்டம்பர் 22-ம் தேதி வெளியாகவிருக்கும் இத்திரைப்படம் இந்தச் சந்தேகங்கள் அனைத்துக்கும் பதிலளிக்கும் என்கிறது படக் குழு..!