தமிழ் சினிமாவில் இப்போது ஜோடனை, வணிகச் சார்பு ,வெகுஜன ரசனை பெயரிலான மலினம் போன்றவற்றிலிருந்து விலகி ரத்தமும் சதையுமாக உண்மை பேசும் படைப்புகள் மலரத் தொடங்கியுள்ளன. அப்படி உண்மையும் யதார்த்தமும் பின்னிப் பிணைந்து வெளிப்பட்டுள்ள படங்களின் வரிசையில் வந்துள்ள படம் கள்ளன். படத்தில் வாழ்வியல் அழகியலோடு சில அதிர்ச்சிகளும் கலந்தே வந்துள்ளன.
மனிதன் முதலில் வேட்டைக்காரனாகத்தான் இருந்தான். அவனது சமூகம் வேட்டைச் சமூகமாகவே இருந்தது.அதை நினைவூட்டும் கதை.
தேனி அருகே இருக்கும் ஊரில் வசிக்கும் கரு பழனியப்பன், காட்டுக்குள் இருக்கும் மிருகங்களை வேட்டையாடி பிழைப்பு நடத்தி வருகிறார். அரசாங்கம் காட்டு விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்று தடை போட்டதால், என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் கரு பழனியப்பன், கள்ளத் துப்பாக்கிகளைத் தயார் செய்து விற்று வருகிறார்.
ஒருகட்டத்தில் அது பிரச்சினையாக மாறுகிறது. பிறகு, திருட ஆரம்பிக்கிறார். திருட்டில் ஈடுபடும் போது, எதிர்பாராதவிதமாக கொலைகள் விழுகின்றன. போலீசிடம் இருந்து தப்பிக்கும் நிலையில், நாயகி நிகிதாவைச் சந்திக்கிறார் . இவர்களுக்குள் காதல் மலர்கிறது.
ஒரு கட்டத்தில் பொலீஸ் தேடிக்கொண்டிருக்கும் குற்றவாளியாக உள்ள கரு பழனியப்பனை போலீஸ் கைது செய்கிறது. தூக்கு தண்டனை விதிக்கப்படும் நிலை வருகிறது.கரு பழனியப்பன் ஜெயிலில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் இருந்து தப்பித்தாரா? இல்லையா ?காதலி நிகிதாவுடன் இணைந்து வாழ்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன், அந்தப் அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற முகபாவனைகளைக் காட்ட முயன்றுள்ளார் .ஆனால் முழுதாக முடியவில்லை என்பதுதான் நிஜம். நாயகியாக வரும் நிகிதா கொடுத்த வேலையைச் சிறப்பாக செய்திருக்கிறார். நமோ நாராயணின் நடிப்பு நினைவில் நிற்கிறது.
வேலராமமூர்த்தி,செளந்தரராஜா,முருகன் உட்பட பலரும் கொடுக்கப்பட்ட வேடங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
மற்றொரு நாயகியாக வரும் மாயாவின் நடிப்பு யாரும் எதிர்பாராத அளவுக்கு மிரட்சியை ஏற்படுகிறது.
நாற்காலியில் ஆர்ப்பாட்டமாக அமர்ந்துகொண்டு,ஒரு பங்கு ஒரேபங்கு எனும்போதும் இறந்த கணவனின் மார்பில் அமர்ந்து ஆவேசமாக அறையும் காட்சி அதற்கு ஒரு சிறு சாட்சி.
எண்பதுகளின் இறுதிக் காலகட்டத்தில் நடக்கிற மாதிரியான கதையை திரைக்கதையாக்கி இயக்கி இருக்கிறார் சந்திரா தங்கராஜ். கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள நடிகர்களிடம் நன்றாக வேலை வாங்கி இருக்கிறார். சில இடங்களில் லாஜிக் மீறல்களைத் தவிர்த்து இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். இரண்டாம் பாதியில் வரும் திருப்பம் திரைக்கதையைச் சுவாரஸ்யமாக்கி இருக்கிறது.
ஒரு சரியான தொடக்கம் அடுத்தடுத்து ஒன்றையொன்று பின்னிப்பின்னி நகரும் திரைக்கதை படத்தை வேகமாக்கியிருக்கிறது.
கே இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். படத்தின் இரண்டாம் பாதியில் பின்னனி இசையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்..
எம்.எஸ்.பிரபு மற்றும் கோபிஜெகதீஸ்வரன் ஆகியோரின் கேமராக்கள் கதைக்களத்தை விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றன.படத்தொகுப்பை ரசனைக்கு ஏற்றவாறு கொடுத்திருக்கிறார் எஸ் பி அகமது.
வேலராமமூர்த்தி பேசும் வசனங்கள் மூலம் தன் சமுதாயச் சிந்தனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சந்திரா.
ஒரு மிகப்பெரிய சமுதாயச் சிக்கலில் தொடங்கி ஒரு குழு ஒரு குடும்பம் எனத் தொடர்ந்திருக்கிறது திரைக்கதை.
கதைக்களம், வாழ்வியல், எடுக்கப்பட்ட விதம், என பலவற்றில் இயக்குநரின் கடுமையான உழைப்பிற்கு வெற்றி .ஒரு வாழ்க்கையை அதன் அசல் தன்மையோடு பூச்சுகள் இல்லாமல் அச்சுஅசலாகப் பதிவு செய்துள்ள வகையில் முதல் படத்திலேயே தனித்துவமான இயக்குநர் என்று பெயர் பெற்று இருக்கிறார் சந்திரா தங்கராஜ்.
மொத்தத்தில் ‘கள்ளன்’ ரசிக்கலாம்.