நந்தா,ரிச்சர்ட்,இளவரசு,ஷாரிகா,உஷாஸ்ரீ நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் ரமேஷ் ஜி.
நடுத்தர வர்க்கத்து கணவன் ரிச்சர்ட். நல்ல வேலை தேடிக்கொண்டிருக்கிறார்.மனைவி ஷாரிகா வேலைக்குப்போக, வீட்டில் இருக்கிறார் ரிச்சர்ட்.
தன் மகளை பள்ளியில் கொண்டு போய்விடச் செல்கிறார். போகிற வழியில் பைக்கில் வந்த இருவர் இடித்து விட்டு ஓட.. குழந்தைக்கு அடிபடுகிறது. மருத்துவனை கொண்டு சென்றால் 20 லட்சம் செலவாகும் என்று குண்டைப் போட, பதறுகிறது குடும்பம்.
நகை,சொத்தெல்லாம் அடமானம் வைத்து 20 லட்சரூபாய் எடுத்துக் கொண்டு போகும் போது. ஒரு விபத்து .ஆட்டோவில் பைக் மோதி கசமுசா ஆக, திரும்பிப் பார்த்தால் பணம் பறிபோய் விடுகிறது. போலீஸ் விசாரணை தொடங்குகிறது. இந்த வழிப்பறி கும்பலை நதிமூலம் ரிஷிமூலம் தேடினால் போய்க் கொண்டே இருக்கிறது. இறுதியில் கயவர்கள் பாணியில்போலீசே ஒரு ‘கள்ளாட்டம்’ ஆடி அவர்களின் ஆணிவேரை பிடித்து எப்படி அழிக்கிறார்கள் என்பதே மீதிக் கதை.
மபடம் 97 நிமிடம்தான்.
ரிச்சர்ட் நடுத்தர வர்க்கத்துக் கணவனாக அழகாகப் பொருந்துகிறார். மனைவி சாரிகாவும் அப்படியே. சீருடையில்லாமலேயே போலீஸ் என நம்ப வைக்கிறார் நந்தா. உடல் மொழியில் அப்படி ஒரு மிடுக்கு.சபாஷ்! அவருக்குத் துணை நிற்கும் போலீசாக இளவரசு.
வழிப்பறி செயின்பறிப்பு நெட் ஒர்க் நடத்தும் ஏழுமலையாக வரும் நடிகர் ஏழுமலை பெரிய ஆர்பாட்டம் இல்லாமலேயே வில்லனாக மிரட்டுகிறார்.
கதை மாந்தர்களை விட கதையின் போக்கு கவர்கிறது.. கதை விரைவாக ஓடுவதால் நடிக்கும் தனியொருவர் தெரியவில்லை.ஒரு ‘கள்ளாட்டம்’ ஆட வில்லனின் குழந்தை யைக் கடத்துவது ஓகே. வில்லனின் குழந்தை இறந்து விட்டதாக நாடகம் ஆடுவதும் அதற்கு டாக்டர்கள் ஒத்துழைப்பதாகக் காட்டுவதும் சற்று மிகை. இருப்பினும் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் பராமரித்திருப்பது இயக்குநரின் திறமை
ஒளிப்பதிவாளரே இயக்குநராக இருந்ததால் நிறைய துரத்தல் காட்சிகளில் வெளிப்புறக் காட்சிகளில் தன்னைக் காட்ட முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
சிறிய பட்ஜெட் படம் என்றாலும் நம்பி வந்தவர்களை ஏமாற்றாது.