ஆர். கே. சுரேஷ் ,சங்கீர்த்தனா ,விஷ்மியா ,சுப்ரமணியசிவா ,ராஜமாணிக்கம்,ஆடுகளம் முருகதாஸ்,ஆதிரா,சுப்பிரமணியன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சோலை ஆறுமுகம்.
இசை – ஸ்ரீகாந்த் தேவா,பாடல்கள் இசை – வணக்கம் தமிழா சாதிக்,ஒளிப்பதிவு – M. புகழேந்தி,
பாடல்கள் – மணிகண்டன் ப்ரியா, பா. இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல்.கலை இயக்கம் – வீரசமர்,எடிட்டிங் – ஜான் ஆப்ரகாம்,ஸ்டண்ட் – கனல் கண்ணன்,நடனம் – தினேஷ் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.
மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ளனர்.
இது ஒரு காதல் கதைதான். இருவேறுபட்ட காலகட்டத்தில்,இரு வேறுபட்ட வாழ்வியல் சூழலில் ஒரு காதல் எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதைச் சொல்ல முயன்றுள்ளார் இயக்குநர் சோலை அறுமுகம் .முதலில் முன்னேறிய சமூகத்தில் நிலவும் காதலை காதலர்களின் சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் இலகுவாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைக் கூறி, அதே காதல் கல்வியறிவில்லாத கிராமப் பகுதியில் எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை விரிவாகச் சொல்கிற கதை இது.நிஜமான காதல் நாடகக் காதலாக மாற்ற நினைக்கும் போது என்ன ஆகிறது? என்பதையும் படம் சொல்கிறது.
உழைக்கும் மக்கள் நிறைந்த காடுவெட்டி பகுதியில் ஆர்.கே.சுரேஷ் ஒரு அரசியல் இயக்கத்தின் தளபதி ஸ்தானத்தில் பெரும்புள்ளியாக இருக்கிறார்.அவரது தங்கையைக் காதல் என்கிற பெயரில் ஒருவன் ஏமாற்றி சரியாகக் குடும்பம் நடத்தாமல் கொடுமைப்படுத்துகிறான்.அதைத் தட்டி கேட்டு, தங்கையைத் தன்னோடு வீட்டுக்கு அழைத்து வருகிறார்.
அதே போல இப்படிப் படிக்கும் பெண்களைக் காதல் என்கிற பெயரில் பொறுப்பற்ற ஒரு கூட்டம் திட்டமிட்டு எப்படி வசப்படுத்தி பெண்களை வீணடிக்கிறது ,அதை எப்படி ஒரு அரசியல் இயக்கம் தவறாகப் பயன்படுத்திப் பலன் அடைகிறது என்பதையும் காட்சிகளாகப் படத்தில் காட்டப்பட்டுள்ளன.
நாடகக் காதலின் பின்னணியில் உள்ள அரசியல் இயக்கம் பற்றி அறிந்த ஆர் கே சுரேஷ் அவர்களை எப்படி வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து பழிதீர்க்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
இப்படத்தில் காடுவெட்டி குருவாக ஆர்.கே.சுரேஷ் நடு நாட்டான் என்று மார்தட்டிக் கொண்டு வரும் ஒரு மிடுக்கான தோற்றத்தில் வருகிறார் .ஒரு கட்சியின் தளபதி போல் காட்டப்படுகிறார் .அந்த அரசியல் கட்சித் தலைவரின் விசுவாசியாக வருகிறார்.போலீஸ் தடையை எதிர்த்து கூட்டம் போடுவதிலும் தம் கட்சி தொண்டர்களை உசுப்பி விட்டு அவர்களுக்கு உணர்வு ஊட்டுவதிலும் சண்டைக் காட்சிகளில் மோதும் போதும் எதிர் கேள்வி கேட்கும் போதும் துடிப்பான தனது நடிப்பைக் காட்டியுள்ளார்.அவரது தோற்றமும் உடல் மொழியும் அந்தக் காடுவெட்டி குரு என்கிற பாத்திரத்துக்கு அசலாகப் பொருந்துகிறது.
ஆர்கே சுரேஷின் மனைவியாக வரும் நடிகை விஷ்மியா குடும்பப் பாங்கான தோற்றத்தில் அழகாக இருக்கிறார். அவரது அளவான நடிப்பும் அழகு.நாடகக் காதலில் பயன்படுத்தப்படும் காதலனாக வரும் அகிலன் சுமாரான தோற்றம் இயல்பான நடிப்பு என்று வருகிறார்.
வசப்படுத்தப்படும் நாயகியாக சங்கீர்த்தனா வருகிறார். அவரும் நடித்த தாட்சாயிணி பாத்திரத்தில் பளிச்சிடுகிறார். அவருக்கு நடிப்பதற்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது .அதைச் சரியாக பயன்படுத்தியுள்ளார்.ஏ எல் அழகப்பன் அரசியல் கட்சித் தலைவராக வருகிறார் அச்சு அசலாக ஒரு கட்சியின் தலைவரை நினைவூட்டுகிறார்.
ராஜமாணிக்கம் பாத்திரத்தில் வரும் சுப்பிரமணிய சிவா ஒரு பாசமுள்ள தந்தையாக கண்கலங்க வைக்கிறார். அவர் நடிப்பில் பல படிகள் முன்னேறி இருக்கிறார்.அவர் சிறந்த குணசித்திர நடிகராக மிளிர்வார். இந்தப் பாதையில் பயணித்தால் அவருக்குத் தேசிய விருது நிச்சயம். ஆடுகளம் முருகதாஸ் ,ஆதிரா, சுப்பிரமணியன் போன்று மேலும் பலர் நடித்துள்ளார்கள்.அனைவருமே பாத்திரத்திற்கு ஏற்றபடி வருகிறார்கள்.
கிராமப் பகுதியின் அழகையும் பண்பாட்டையும் கதைக்கேற்ற வகையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் எம்.புகழேந்தி.இப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று, பாடல்கள் அனைத்துமே சிறப்பாக உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் புரியும் வரிகளில் உள்ளன. இப்படிப் படங்களில் பாடல் அமைந்து நீண்ட நாள்கள் ஆயிற்று.பாடல்கள் இசை – வணக்கம் தமிழா சாதிக் .வெல்டன் சாதிக்.இத்தனை நாள் எங்கிருந்தார் என்று கேட்கத் தோன்றுகிறது.ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் குறையில்லை.
படத்தின் சிறப்பைக் கெடுக்கும் வகையில் சில நீளமான காட்சிகள் அமைந்துள்ளன.156.55நிமிடங்கள் கொண்ட இந்தப் படத்தில் சில நிமிடங்களைக் கத்தரி போட்டு இருந்தால் படம் மேலும் விறுவிறுப்பாக அமைந்திருக்கும்.உதாரணமாக ஊர்ப் பஞ்சாயத்துக்குக் கூடும் காட்சிகள் நீளமானவை; சலிப்பூட்டுபவை. அது போல,அந்தக் கிராமத்தில் போட்டி போட்டுக் கொண்டு பெண்கள் சண்டை போட்டுக் கொள்ளும் அந்த நீளமான காட்சி கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.
படத்தில் ஆங்காங்கே வசனங்கள் மௌனிக்கின்றன. மாவீரன் என்ற வார்த்தை கூட தடை செய்யப்பட்டுள்ளது ஏனோ ?காதலைப் புனிதப்படுத்தாமல் காதல் என்கிற பெயரில் நடக்கும் நாடகங்களை,அதன் பின்னே உள்ள அரசியல் இயக்கங்களைத் துணிச்சலாகப் படத்தில் கூறியுள்ளார் இயக்குநர்.கிராமத்தின் அசல் தன்மையைப் பிரதிபலிக்கும் காட்சிகள் படத்திற்கு அழகு சேர்க்கின்றன.
பெண்கள் பாதுகாப்பு குறித்தும் குடிக்கு எதிராகவும் தைரியமாகக் கருத்துகள் படத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதை வீரியமான காட்சிகள் மூலம் வெளிப்படுத்தி உள்ள இயக்குநரின் நோக்கத்தைப் பாராட்டத் தோன்றுகிறது.