
இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.
அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன .
படம் பற்றி இயக்குநர் பேசும்போது,
” அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது . நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில்
ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. மரகதக்காடு முழுக்க முழுக்க நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை.

படம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கருத்தைச் சொல்லும் . அதேபோல காடு எவ்வளவு அழகானது என்று ரசிக்கவும் நேசிக்கவும் வைக்கும்படி அழகுணர்வோடு எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமையும். ” என்கிறார்.
மேலும் கூறுகையில், தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நாம் விரைவில் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைவரும், சுவாசிக்கிற காற்று மாசுபடுதுனு கவலைபடுகிற நாம் காற்றே பாற்றாக்குறையாகப்போகுதுனு கவலை இல்லாம இருக்கோம்.. Save water ங்கிறது save air என மாறக்கூடாது என்பதைப் பற்றி மிக ஆழமாகக் கவலைப்பட்டிருக்கும் படம் ’மரகதக்காடு’ என்றார்.
நகரத்திலிருந்து கனிம வள ஆய்வுக்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்கிற நாயகன் அங்குள்ள ஒரு பெண்ணைச் சந்திக்கிறான் . காதலிக்கிறான். அந்தக் காதல் அவனைப் புரட்டிப் போடுகிறது . வெறும் இனக்கவர்ச்சியில் மூழ்கி ஆண் – பெண் சேரும் ஒற்றைக் குறிக்கோளை அடைவது மட்டும்தானா காதலின் முடிவாக இருக்க வேண்டும் ?
அவனை மாற்றி பல திருப்பங்களுக்கு அழைத்துச் சென்று லட்சியத்தை சுமக்க வைத்து முழு மனிதனாக்குகிறது அவனது காதல் .

காதலுடன் காடு , மக்கள் , அவர்களின் இயற்கை சார்ந்த நம்பிக்கைகள் , அவர்களது வாழ்வியல் , காட்டின் கனிம வளம் சுரண்டப்படுதல் போன்ற பலவும் கதையில் இருக்கும் .