ஒரு சிங்கம் தன் குட்டியைக் காப்பாற்ற ஒரு மான் குட்டியை வேட்டையாடத் துடிக்கிறது. சிங்கத்திடம் இருந்து மான் எப்படி தன் குட்டியைக் காப்பாற்றுகிறது என்பதுதான் ‘காட் ஃபாதர் ‘கதை. இறுதியில் சிங்கத்தின் பசி ஜெயித்ததா ?மானின் பயம் ஜெயித்ததா என்பது தான் கதைப்போக்கு.
ஒரு தாதாவான லாலிடமிருந்து தன் மகனைக் காப்பாற்றப் போராடும் சாதாரண தந்தை நட்டியின் போராட்டமே கதை.
கேங்ஸ்டர் மருதுசிங்கத்தின் (லால்) மகன் கொஞ்சம், கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறான். அவனைக் காப்பாற்ற அதே வயதுடைய பையனின் உடல் உறுப்புகள் தேவை. விரைவில் அவற்றைப் பொருத்த வேண்டும். அப்பொழுது அதியமானின்(நட்டி) மகனான அஸ்வந்தை கண்டுபிடிக்கிறார்கள். அஸ்வந்தைக் கடத்தி அவன் உடல் பாகங்களை எடுக்க முடிவு செய்கிறார்கள் அடாவடியாக.
மருதுசிங்கத்தின் ஆட்கள் அஸ்வந்தை தேடி அலைகிறார்கள்.அவர்களின் எண்ணத்தை புரிந்து கொள்கிறார் அதியமான். அதியமான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைகிறது அடியாட்கள் குழு அங்கருந்து யாரையும் உள்ளேயும் செல்லவிடாமலும், வெளியேயும் செல்லவிடாமலும் அராஜகம் செய்கிறார்கள். அந்த ரவுடிகளிடம் இருந்து தன் மகனைக் சாப்பாட்டு தவியாய் தவிக்கிறார் துடியாய் துடிக்கிறார் நட்டி அதியமான். பாவம் எத்தனை நாட்கள் தான் காப்பாற்ற முடியும்?
ஒருஅடுக்குமாடி குடியிருப்பில் அபார்ட்மென்ட்டில் நடக்கும் த்ரில்லர் தான் படம். மகனைக் காக்க எதையும் செய்யத் தயாராக இருக்கும் இரண்டு தந்தைகள். சரியான அளவில் ஆக்ஷன், சென்ட்மெண்ட் என்று காட்சிகளை வைத்து நம்மை இருக்கையின் நுனிக்கு வந்து படம் பார்க்க வைக்கிறார் இயக்குநர் ஜெகன் ராஜசேகர்.
காட் ஃபாதர் ஏமாற்றம் அளிக்கவில்லை என்றாலும் நம்ப முடியாத ஒரு உச்ச கட்ட காட்சியால் முழு திருப்தியும் அளிக்கவில்லை. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் பாதியில் வந்த சில காட்சிகள் பரபரக்கும் கதைக்கு ஸ்பீட் பிரேக் போடுவதாக உள்ளது.
நட்டி பாசமுள்ள தந்தையாகவும் அனன்யா பாசக்கார தாயாகவும் நடிப்பில் அசத்தியுள்ளார்கள்.
அதியமானுக்கு அழகான குடும்பம் இருக்கிறது என்பதை காட்ட ஒரு பாட்டு, மருதுசிங்கம் மோசமானவன் என்பதை காட்ட கொலைகள் செய்ய வைத்துக் காட்டியது தேவையில்லாதது. நாம் யூகிக்கும்படியான சில காட்சிகள் இருந்தது சற்றே பலவீனம் எனலாம்.