‘காதலிக்க நேரமில்லை’ திரைப்பட விமர்சனம்

நித்யா மேனன், ரவிமோகன் (ஜெயம் ரவி இனி ரவி மோகன்), யோகி பாபு, வினய் ராய், டிஜே பானு, ஜான் கொகேன், லால், லஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி, ரோஹான்சிங் நடித்துள்ளனர். கிருத்திகா உதயநிதி எழுதி இயக்கியிருக்கிறார்.  கேவ்மிக் ஏரி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ளது.

காதல், கமிட்மெண்ட், பொறுப்பு போன்றவற்றில் ஆர்வம் இல்லாதவர் ரவி மோகன்.சுதந்திரப் பறவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ரவி , திருமணம் செய்து கொண்டாலும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளக் கூடாது அந்தப் பொறுப்பில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் .நாயகி நித்யா மேனன் காதலித்துப் பிள்ளை பெற்று நல்ல குடும்பம் நடத்த வேண்டும் என்று விரும்புபவர்  . நித்யா மேனன், ரவிமோகன் இருவருமே காதலைச் சந்திக்கிறார்கள் ஆனால் விளைவு ஏமாற்றமாக இருக்கிறது .அப்படி தனித்தனியாகத் தங்கள் வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட இருவரும் சந்திக்கிறார்கள். ஏற்கெனவே உள்ள கசப்பான அனுபவங்களை வைத்து எதையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார்கள் .அப்படிப்பட்ட இருவரும் ஒரு புள்ளியில் இணைய வேண்டி வருகிறது.அந்த நேரத்திலும் சிறு விலகல் வருகிறது.மீண்டும் நெருங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் மனதார விரும்புகிறார்கள்.அவர்கள் வாழ்க்கையில் இணைகிறார்களா இல்லையா? இந்த இரு வேறு கதாபாத்திரங்கள் ஒரு புள்ளியில் இணையும்படியான சந்தர்ப்பங்களின் சதிராட்டம் தான் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தின் கதாநாயகன் நடிகர் ரவிமோகன் (ஜெயம் ரவி) தான் என்றாலும் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நித்யா மேனன் வருகிறார். இப்படி ஒரு கதாநாயக நடிகர் ,கதையை முன்னிட்டு கதாநாயகிக்கு இடம் கொடுத்திருக்கும் தாராளக்குணத்திற்காகவே ஜெயம் ரவியை முதலில் பாராட்டவேண்டும்.அவரது கதாபாத்திரம் ஒரு மீட்டருக்குள் ஒடுங்கி இருக்கிறது.அதுதான் அந்த பாத்திரத்தின் இயல்பு என்பதை உணர்ந்து அவரும் அதில் பளிச்சிட்டு உள்ளார்.தனது காதலி, புதிய உறவு, அந்தச் சிறுவனுடன் நட்புறவு போன்ற காட்சிகளில் அவரது பாத்திர மனதை நடிப்பில் காட்டியுள்ளார்.அவர் அடக்கி வாசித்தே தனது திரையிருப்பை ஆழப்படுத்தி உள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் நித்யா மேனன், தனி ஆளுமை கொண்ட அந்தக் குணச்சத்திரத்தில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளார்.தன் காதலன் மூலம்ஏமாற்றப்பட்டு துரோகத்தை சந்தித்து அந்த திருமணம் நின்று போனாலும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என் ஆசைப்படுகிறார் . அதன் விளைவாக செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்.அந்த சிங்கிள் மதர் பாத்திரம் அவருக்கு ஏகப் பொருத்தம்.

ரவி மோகன் – நித்யா மேனன் இருவருக்குமான இணக்கமும் நெருக்கமும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.சிறுவன் உடனான ரவி மோகனின் நட்பு ஆகியவை திரைக்கதையை எந்தவித தொய்வின்றி நகர்த்திச் செல்வதோடு, வசனக் காட்சிகளையும் ரசிக்க வைத்துவிடுகிறது.

யோகி பாபு வரும் காட்சிகள் கலகலப்பூட்டும் ரகம். சிரிக்க வித்தியாசமான வேடத்தில் வந்து வினய் மனதில் பதிகிறார்.டிஜே பானு, லால், பாடகர் மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி என பிற துணைக் கதாபாத்திரங்களுக்கான நடிப்புக் கலைஞர்களும் தங்கள் பணியில் குறை வைக்கவில்லை.

நாயகன் பொழுது போக்காக உயிரணு தானம் செய்வதும்,என் குழந்தைக்கு அப்பா யார் என்று நாயகி கேட்பதும் ,குழந்தை தன் தந்தை யார் என்று  கேட்பதும் மாறிவரும்  கலாச்சார அதிர்வு தரும் காட்சிகள்.

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் காலத்துக்கு ஏற்றபடி ஒலிக்கின்றன.பின்னணி இசை, கதையின் போக்கிற்குப் பலம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரி, தனது வண்ணமயமான காட்சிப்படுத்தல் மூலம் திரையில் மாயாஜாலம் நிகழ்த்தியுள்ளார்.

பிசிறு தட்டாமல் நெருடல் இல்லாமல் படத்தை த தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் .

எழுதி இயக்கியிருக்கும் கிருத்திகா உதயநிதி,உலகமயமாக்கல் மூலம் மாறி வரும் கலாச்சாரத்தை அதன் அதிர்வுகளை ஆங்காங்கே தொட்டுக்காட்டி பெண்ணியம் பேசாத பெண்களுக்கான ஒரு படத்தை ஆண்களும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.