‘காதல் என்பது பொதுவுடைமை’ திரைப்பட விமர்சனம்

லிஜோமோல் ஜோஸ், வினித்,ரோகிணி, கலேஷ்,தீபா ,அனுஷா நடித்துள்ளனர். எழுதி இயக்கி உள்ளார் இயக்குநர்- ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
ஒளிப்பதிவு -ஸ்ரீசரவணன்,இசை -கண்ணன் நாராயணன்,எடிட்டிங் டேனி சார்லஸ்,கலை ஆறுசாமி,பாடல் உமாதேவி.

தயாரிப்பு ஜியோ பேபி மேன் கைண்ட் சினிமாஸ், சிமெட்ரி சினிமாஸ், நித் ப்ரொடக்ஷன். BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.

காதல் என்பது எதிரெதிர் பாலினங்களுக்குள் வருவது மட்டுமல்ல தன் பாலினங்களுக்குள்ளும் வரும் .அது ஒரு பொதுவுடமை என்று பேசுகிற படம்.

லட்சுமி என்ற பெயர் கொண்ட ரோகிணி தன் சுதந்திரமான கருத்துக்களால் புகழ்பெற்ற யூடியூபராக விளங்குகிறார்.அவருடைய மகள் ஷாம் என்கிற பாத்திரப் பெயர் கொண்ட லிஜோ மோல்தான் காதலில் விழுந்தது பற்றியும் தனது காதல் பற்றியும் தன் அம்மாவிடம் ஒரு வித தயக்கத்தோடு கூறுகிறார்.காதல் சகஜம் தானே என்று உடனடியாக ஏற்கிறார் அம்மா.மகளின் காதலன் பற்றி ஒரு குறுகுறுப்பான ஆர்வத்தோடு இருக்கிறார்.காதலனை வீட்டுக்கு அழைத்து வரும்படி கூறுகிறார். வந்ததும்தான் தெரிகிறது ஷாமின் காதலர் ஓர் ஆண் அல்ல; பெண் என்பது.

என்னதான் ஒரு சமூக சிந்தனை உள்ள, பெண்ணியம் பேசும் ஒரு கருத்தாளராக இருந்தாலும் ஒரு தாயாக மகளின் தேர்வை அறிந்துகொண்டு அதிர்கிறார்.அக்காதலை ஏற்க மறுக்கிறார். அங்கிருந்து விரியும் கதையில் ஷாமின் தன்பாலினக் காதல் உணர்வு எந்த வகையில் இயல்பானது அது ஷாமின் கோணத்தில் எவ்வளவு நேர்மையானது என்பதை நோக்கிச் செல்கிறது கதை. இறுதியில் எது வென்றது, காதலா, குடும்பமா என்பதை நோக்கிக் கதை நகர்கிறது.

ஆண் – பெண் இடையில் உருவாவது மட்டும்தான் காதல் என்கிற பொது உளப்பதிவுக்கு அமைதியாகச் சில அறிவியல் உண்மைகளைக் கூறி போகிற போக்கில் அதை எடுத்துச் சொல்கிறது படம். மாற்றுப் பாலினத்தவர், எதிர்கொண்டுவரும் சமூக ஏற்புச் சிக்கல்களைத் திறந்த உரையாடலுக்கு அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

முதல் காட்சியிலிருந்தே கதையின் சிக்கலைத் தொடங்கிவிடும் இயக்குநர், ஷாமின் காதல் வீட்டில் புயலைக் கிளப்பிய பின் அது சென்றடையும் இடத்தை அற்புதமான காதல் திரைப்படமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார். எந்த இடத்திலும் ஆபாசமோ அருவருப்போ இல்லை என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு. தன்பாலின ஈர்ப்புள்ள ஒரு பெண்ணுக்கு ஆணுடனான திருமணம் எப்படிப்பட்டதாக அமையும் என்கிற பிளாஷ் பேக் மனதை கலங்க வைக்கும்.

ரோகிணியின் வீட்டுப் பணிப்பெண்ணான மேரிக்கும் (தீபா) இடையிலான தோழமையும் அக்கதாபாத்திரம் முக்கியப் பிரச்சினையில் வெள்ளந்தியாக உரையாடல் செய்யும் விதமும் திரைக்கதையில் அழுத்தமாகப் பதிந்துள்ளன.

கண்ணன் நாராயணின் இசை, ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு, டேனி சார்லஸின் படத்தொகுப்பு, ஆறுசாமியின் கலை, உமாதேவியின் பாடல் வரிகள் அனைத்தும் கதைக்களத்தில் இருந்து சிறிதும் விலகாமல் பயணித்திருக்கிறது.

சமூக மனநிலையில் தோய்ந்து போயுள்ள பெற்றோர்கள், தன் பாலினக் காதலை எப்படி பார்க்கிறார்கள் அதை ஏற்றுக் கொள்வதில் என்னென்ன சிக்கல்கள் என்பதை அவரது தரப்பில் நின்றும் பார்க்கிறது படம்.அந்த இடத்தில் படம் சமநிலையைப் பராமரித்திருக்கிறது.

லட்சுமியாக ரோகிணி, ஷாம் ஆக லிஜோ மோல், அவரது காதலியாக வரும் அனுஷா பிரபு, ஷாமின் தந்தையாக வரும் வினித், ரவீந்த்ராவாக வரும் இளைஞர் என அனைவரும் மிகை நடிப்பு காட்டாமல் அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.பாத்திரங்களின் உணர்வுகளை மிகை உணர்ச்சி வெளிப்படாத வகையில் மிக இயல்பாக வெளிப்படுத்தி வேலை வாங்கி இருக்கும் இயக்குநர் திறமை பாராட்டக் கூடியது.

தன்பாலினக் காதலில் இருக்கும் நியாயங்களை இயல்பு கெடாமல் ஒரு காதல் கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.காலமாற்றத்தின் விளைவுகளாக இப்படிப்பட்ட படத்தைப் பார்க்க வேண்டும்.சற்று பிசகி இருந்தாலும் ஆபாசப் படமாக மாறி இருக்கும் ஒரு கதையை இவ்வளவு நேர்மையாக அணுகி இருக்கும் இயக்குநரின் நேர்மை பாராட்டுதலுக்குரியது