மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.எல் .விஜய் இயக்கியுள்ளார் .கதை ஏ. மகாதேவ் மற்றும் விஜய்.ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.ஒளிப்பதிவு : அரவிந்த் கிருஷ்ணா, படத்தொகுப்பு: ஆண்டனி கலை இயக்கம் :சரவணன் வசந்த்.
டி ஸ்டுடியோ உடன் இணைந்து மாலிஅண்ட் மான்வி சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்துள்ளார்.
ஸ்காட்லாந்தில் படம் தொடங்குகிறது.முதல் காட்சியிலேயே கதாநாயகி அழுது கொண்டிருக்கிறார்.கண்ணீரும் கம்பலையுமாக இருப்பவர் தந்தைக்குத் தொலைபேசுகிறார்.உலகம் வெறுத்துப் போகிறது.கையில் உள்ள பணம் நகை மொபைல் போன் போன்ற உடைமைகளைத் தெருவில் பாடிக் கொண்டிருக்கும் ஒரு பாடகரின் முன் போட்டு விட்டுத் தற்கொலை முயற்சி செய்கிறார்.பலத்த காயங்களுடன் காப்பாற்றப்பட்ட பிறகு அவருக்கு
ஆன்டோகிரட் அம்னீசியா (Anterograde amnesia) என்கிற பிரச்சினை இருப்பது தெரிகிறது.அது என்னவென்றால் மூளையில் ஏற்படும் காயம் அல்லது பாதிப்பிற்குப் பிறகு, புதிய நினைவுகளை உருவாக்கவோ அல்லது தகவல்களைத் தக்கவைக்கவோ முடியாத ஒரு நரம்பியல் கோளாறு .எனவே அதிதிக்கு நேற்று நடந்தது இன்று நினைவுக்கு வராது .இதனால் பாதிக்கப்படும் அவருக்கு ஒவ்வொரு நாளும் புதிய நாளாக இருக்கிறது. முந்தைய நாள் நினைவுக்கு வராது.
யார் அந்த அதிதி ? கோத்தகிரியைச் சேர்ந்த தேயிலை எஸ்டேட் அதிபரின் மகள்தான் இந்த அதிதி. சிறு வயதில் தாயை இழந்தவர்.தந்தையிடம் பாசத்துடன் வளர்ந்து வருகிறார். சித்தி உண்டு. அவர்களுக்குள் ஒரு பிடிப்பில்லை. ஸ்காட்லாந்தில் நடக்கும் ஒரு இசைப் போட்டிக்கு வந்தவர், இப்படி ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கிறார். அவரை அழைத்து வந்தவர் சித்தார்த் என்பவர் .ஆனால் ஹரி என்கிற ஹரிச்சந்திரன் என்பவரும் காதலன் என்கிறார். இப்படிப்பட்ட சூழலில் யார் உண்மையான காதலன் என்று அறிய முடியாமல் தவிக்கிறார் அதிதி.
இப்படிப்பட்ட கதையில் அதிதி என்ன செய்கிறார்? அவருக்குள்ள பிரச்சினை என்ன? உண்மையான காதலனை எப்படி அறிகிறார்? என்பதைப் பற்றிச் சொல்வதுதான் இந்த 137.00 நிமிடங்கள் கொண்ட ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் மீதிக் கதை.
பொழுது விடிந்ததுமே ஒவ்வொரு நாளும் “நான் எங்கே இருக்கிறேன்? நீங்க எல்லாம் யாரு? ”என்று உடன் இருப்பவர்களிடம் கேட்கிறார் அதிதி. நேற்றைய விஷயம் இன்றைக்கு மறந்துவிடும் ஒவ்வொரு நாளும் புதிதாக பிறக்கிறது.இப்படித்தான் ஒவ்வொரு நாளும் அதிதிக்குப் புதிதாகத் தொடங்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சிக்கலான ஒரு கதாபாத்திரத்தின் உணர்வை எடுத்துக்கொண்டு ஒரு காதல் கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.
சிறுவயதில் இருந்து அதிதியை உடன் இருந்து கவனித்து பிரியத்துக்குரியவராகப் பழகி வந்த சித்தார்த் ஒரு பக்கம், அதிதியின் இசைத்திறமையை ஊக்கப்படுத்தி முன்னேற்றிச் சர்வதேச இசைப்போட்டிக்குத் தயார் செய்து உலகப் போட்டி வரை கொண்டு செல்ல விரும்புகிற ஆரி இன்னொரு பக்கம் என்று அவர் கண் முன்னே நிற்கிறார்கள். யாருடைய காதல் உண்மையானது என்று தனது உடல்நிலை ஞாபக மறதி பிரச்சினை இருக்கும் நிலையில் கூட முடிவெடுக்கிறார். உண்மையான காதலுக்கு ஜே போடுகிறோம் .ஆனால் அத்துடன் படம் முடியாமல் வேறு ஒரு சிக்கலில் கொண்டு முட்டி நிற்கிறது. அதன் முடிவு என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இதில் சித்தார்த்தாக மதும்கேஷ் நடித்துள்ளார்.இயல்பான தோற்றத்திலும் மிகைதோன்றாத அலட்டிக் கொள்ளாத அளவான நடிப்பிலும் கவர்கிறார்.
ஆரியாக வரும் அர்ஜுன் அசோகன் சற்று மிகை நடிப்பு காட்டி உள்ளார் .வசன உச்சரிப்பில் மலையாள வாடை வீசுகிறது.
அதிதியாக வரும் ஜியா சங்கர் இளமையான தோற்றம் துறுதுறுப்பான வசீகரமான முகம்,குறை சொல்ல முடியாத நடிப்பு என்று சகல விதத்திலும் கவருகிறார். அவர் தனக்குள்ள பிரச்சினையைப் பார்வையாளர்களுக்கு உணர வைக்கிறார்.படம் முழுக்க அவரது பாத்திரம் வியாபித்து நிற்கிறது.
அதிதியின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ் வழக்கம் போல பாசமுள்ள அப்பாவாக முத்திரை பதிக்கிறார்.
ஸ்காட்லாந்தில் இவர்களுக்கு உதவும் டாக்டர் பால் மாணிக்கம் என்ற பெயரில் டாக்டரைப் போல நடித்து பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் பாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர் சரியாகவே வெளிப்பட்டுள்ளார்.
மேலும் வெளிநாட்டு நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் கதை ஸ்காட்லாந்தில் நடக்கிறது என்கிற அந்த ஒரு பின்னணி – புது கேன்வாஸாக அமைந்து நம்மை வேறொரு புவியியல் பிரதேசத்துக்குக் கொண்டு சேர்க்கிறது.
கதாபாத்திரத்தின் உணர்வுகள் தான் முக்கியம் என்பதால் அவர்களின் பின்னணியில் பெரும் கூட்டமும் வேறு ஆரவாரங்களும் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.
செண்டிமெண்டல் கதைகளை ஏ.எல். விஜய் சிறப்பாக இயக்குவார். முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கொண்ட காதல் கதையாக வளர வேண்டிய இதில் ஆள்கடத்தல் செய்யும் சில காட்சிகள் நம்பகத்தன்மை இன்றி உள்ளன. அவை அவரது முத்திரையிலிருந்து விலகி நிற்கின்றன. மற்றபடி ஒரு வெளிநாட்டு பின்புலத்தில் வித்தியாசமான கதையை படமாக உருவாக்கி பார்ப்பவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்தப் படைப்பு உருவாகி இருக்கிறது .உண்மையான காதல் அறியும் ஒரு பெண்ணின் கதையாக அரிதான ஒரு மனப்பிரச்சினை கொண்ட ஒரு கதாபாத்திரத்தின் கதையாக இப்படம் அமைந்து இருக்கிறது .தலைப்பை மாற்றி யோசித்து இருக்கலாம்.
இரண்டாவது பாதியில் படத்தில் கிளைமாக்ஸ்சை நோக்கிச் செல்லும் கதையில் உருவாகும் மலை சார்ந்த விபத்துக்காட்சி பரபரப்பில் நம்மை இருக்கை நுனிக்கு அழைத்துச் சென்று மிரள வைக்கும் .இயக்குநரின் பார்வையில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா பின்புலக் காட்சிகளை அழகாகக் காட்டியதுடன் கதாபாத்திரங்களின் தோற்றத்தையும் உணர்வையும் காட்சிப் படுத்தியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பழைய சாயலில் பாடல்கள் உள்ளன. இந்தப் படத்தை தொய்வில்லாமல் படத்தொகுப்பு செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆண்டனி.
எப்போதும் மசாலாப் படம் எடுப்பதை விரும்பாதவர் ஏ எல் விஜய்.அவருக்கென்று ஒரு பாணி இருக்கும். அந்த வரிசையில் வருமாறு மாறுபட்ட ஒரு கதையின் பயணமாக இந்தப் படமும் அமைந்துள்ளது .


