விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம்.
இதுவும் ஒரு இரட்டைவால் குருவி ரகத்திலான கதைதான்.ஆனாலும் காலத்திற்கு ஏற்ப விக்னேஷ் சிவன் தனக்கே உரித்தான குறும்பு நகைச்சுவை நிறத்தில் எடுத்துள்ளார்.
வாழ்க்கையில் எதுவுமே சரியாக அமைந்திடாத ஒருவனுக்கு, இரண்டு பெண்கள் வருகிறார்கள். பசியேப்பக் காரனுக்கு இரட்டை பிளேட் பிரியாணி கிடைத்தால்? எல்லாம் மாறிவிடுகிறது. அவன் அந்த இருவரையும் இணையாகவும் சமமாகவும் காதல் செய்கிறான்.அப்படி ஒரு கதையே இந்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.
கால் டாக்சி டிரைவர், பப்பில் பவுன்சர் என்று மாறி மாறி உழைக்கிறார் விஜய் சேதுபதி.அந்தப் பணிகளின் மூலம் கண்மணியும், கதிஜாவும் அறிமுகமாகிறார்கள். சட்டென ராம்போவின் வாழ்வில் தொட்டதெல்லாம் துலங்குகிறது. எல்லாமே நல்லதாய் நடக்க, இருவரையுமே காதலிக்கத் தொடங்குகிறார். யார், யாருடன் இணைந்தார்கள், இறுதியில் மூவரும் எடுக்கும் முடிவு என்ன என்பதை குறும்புகள் ,நகைச்சுவைகள் சற்று மிகையாகவே கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
அவரை காதலிக்கும்போது இவரையும், இவரை காதலிக்கும்போது அவரையும் தெரியாது எனவும் அது ஒரு மனக்கோளாறு என்றும் சொல்லப்படுகிறது.ஆனால், உண்மையான காரணம் என்ன?
வழக்கமான முக்கோணக் காதல் கதையில் ராம்போவாக விஜய் சேதுபதி.
ஒரே நேரத்தில் நயன்தாரா, சமந்தா என இரண்டு தேவதைகள் கிடைத்தால் எப்படி இருக்கும்?
தனக்குரிய நக்கல் நையாண்டிகள், துள்ளலான உடல்மொழியுடன் ஜாலி ரகளை செய்து ரசிக்க வைக்கிறார்.
தனது வாழ்க்கையையே மாற்றிய இரண்டு தேவதைகளையும் விட்டுக்கொடுக்காமல் பேசும் வசனங்கள், காஃபியை டீயையும் மிக்ஸ் பண்ணி குடிக்கும் காட்சி, இருவரையும் சமாளிக்கமுடியாமல் திணறும் காட்சி என கலகலப்பூட்டுகிறார்.
நயன்தாரா தனது இலகுவான முகபாவனைகளால் கவர்கிறார்.நம் கண்களுக்கு பேரழகுடன் கதீஜாவாக மறுபிரவேசம் செய்திருக்கிறார் சமந்தா.சமந்தாவின் முகபாவனைகள் , உடல் மொழிகள், முடி அலங்காரம் எல்லாம் இளமைப் புதுமை.
நயன்தாரா சமந்தா இருவருக்கும் சம, செம நடிப்பு வாய்ப்புகளைக் கொடுத்து சமன் செய்துள்ளார் இயக்குநர்.
இவர்களுடன் பிரபு, கலா மாஸ்டர், கராத்தே ஹுசைனி, மாறன், கிங்ஸ்லி, பிரபு, சித்ரா லட்சுமணன் கூட்டணியும் காத்து வாக்கில் பல நகைச்சுவைகளைத் தூவுகிறது.கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளார்.
அனிருத்தின் பாடல்கள் இசையும் ,எஸ்.ஆர் கதிரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலம்.
லாஜிக் பார்க்காமல் ஜாலியாக ரசிக்கலாம்.தர்க்கம் செய்ய ஆரம்பித்தால் பல கேள்விகள் எழும்.
பிரபு நடத்தும் ரியாலிட்டி ஷோவில் விஜய்சேதுபதி தெளிவாக இருப்பதாக வெளிப்படுத்திவிடுகிறார். அப்படியிருக்க, அதற்குப்பிறகும், விஜய் சேதுபதியை இரண்டு தேவதைகள் நம்பிக்கொண்டிருப்பது முரண்பாடுஇல்லையா? இப்படிப் பல.
முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில்குறைவு என்பது குறைதான்.
தீவிரமான விவாதம் ஏற்படுத்த வேண்டிய ஒரு கதையை நகைச்சுவையுடன் முடித்துவிட்டார் இயக்குநர்.