மாஸ் ரவி, லட்சுமி பிரியா, மஞ்சு, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், பாஸ்கர், தங்கதுரை, பவர் ஸ்டார், மேனாக்ஷா ,மிப்பு, மொசக்குட்டி நடித்துள்ளனர்.
எழுதி கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ளார் மாஸ் ரவி. இசை ஜி கே வி – மிக்கின் அருள் தேவ் .ஒளிப்பதிவு ராஜதுரை – சுபாஷ் மணியன், படத்தொகுப்பு கம்பம் மூர்த்தி – ராஜ்குமார், சண்டைப் பயிற்சி சூப்பர் சுப்பராயன்.சென்னை புரொடக்சன் நிறுவனத்தின் சார்பில் எழில் இனியன் தயாரித்துள்ளார்.
வன்முறை கொடி கட்டிப் பறக்கும் வடசென்னைப் பகுதியில் ஜீவா வன்முறைக்கு எதிரான மனநிலையில் வாழ்ந்து வருகிறார் .அந்தப் பாதையில் செல்லும் இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறார்.அவருக்கு ஒரு காதல் உண்டு. இழைய இழைய மேகாவைக் காதலிக்கிறார். இருவருமே இந்த உலகத்தை மறந்து தங்கள் காதலில் லயிக்கிறார்கள்.
அந்தப் பகுதியின் வன்முறையை .மொத்த குத்தகை எடுத்துள்ள தாதா ரத்னா, அப்பகுதி இளைஞர்களை கொம்பு சீவி விட்டு வன்முறை வழிக்குக் கொண்டு செல்கிறார். இதனால் நாயகன் ஜீவா அவரை எதிர்க்கிறார். எதிர்ப்புகளுக்கு இடையே அவர் காதல் வளர்கிறது. ரத்னாவின் வன்முறை வெறியாட்டம் ஜீவாவின் காதலுக்குள்ளும் நுழைகிறது. இப்படிப்பட்ட நிலையில் நன்முறைப் பாதையில் செல்லும் நாயகன் வன்முறை விஷமிகளை எதிர்த்து அதில் வெற்றி பெற்றாரா? அவரது காதல் வெற்றி பெற்றதா? என்பதே ‘காத்து வாக்குல ஒரு ஒரு காதல்’ படத்தின் மீதிக் கதை.
காத்து வாக்குல ஒரு காதல் என்று சொல்லிவிட்டு படம் ஆரம்பித்ததிலிருந்து வரிசையாக விதவிதமாக கொலைகள் நடைபெறுகின்றன. கொடூரமான கொலைகள்.துரோகத்தாலும் சந்தேகத்தாலும் ஆணவத்தாலும் போட்டியாலும் வன்முறை திமிரினாலும் என்று ஏகப்பட்ட கொலைகள்.வயிற்றில் கத்தியால் குத்தி, முதுகில் கத்தியால் குத்தி, பிளேடால் கழுத்து அறுத்து, தலையை சீவி , மோத விட்டு ரத்தம் கக்க வைத்து .கழுத்தை அறுத்து இப்படி நடக்கிற கொலைகள் 10க்கு மேல் இருக்கும் போலிருக்கிறது அதற்கு மேல் எண்ண முடியவில்லை.
இப்படி ரத்த வெள்ளத்தில் செல்லும் கதைக்குள் இடையே காதல் காட்சிகள் வருகின்றன. பிறகுதான் அந்த காதலுக்கும் வன்முறைக்கும் என்ன தொடர்பு என்று காட்சிகள் வருகின்றன.
நாயகன் ரத்த வெள்ளத்தில் இறப்பது போது போல் ஆரம்பத்தில் காட்சிகள் வந்து பிறகு காட்சிகள் முன் கதை போல் விரிகின்றன. பிறகு எதிர்பாராத திருப்பமாக சில காட்சிகள்.அந்தத் திருப்பத்திற்குக் காரணங்களைச் சரியாகச் சொல்லியிருக்கலாம்.
நாயகன் ஜீவா ஆகவும் மாசாகவும் நடித்துள்ள மாஸ்ரவி இயல்பாக நடித்திருக்கிறார். அந்த மண்ணின் மைந்தனாக தோற்றத்திலும் நடிப்பிலும் தோன்றி காதலிக்கும் போதும் வன்முறையால் பாதிக்கப்படும் போதும் அனுதாபங்களை அள்ளுகிறார் .அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா தோற்றத்திலும் பாந்தமாக வந்து நடிப்பிலும் கவர்கிறார்.உருகிக் காதலிக்கும் காதலியாக அந்தப் பாத்திரத்தைச் சரியாகச் செய்துள்ளார் .ஆதித்யா கதிர் தங்கதுரை இருவரும் சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளார்கள். கொடூரமான வில்லனாக சாய் தீனாவும் சூப்பர் சுப்பராயனும் வந்து கலங்க வைக்கிறார்கள்.

படப்பிடிப்பிடங்கள் சொற்பமாக இருந்தாலும் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது என்றாலும் அதை தெரியாத அளவிற்கு ஒளிப்பதில் நிறைவு செய்துள்ளார்கள் ராஜதுரை -சுபாஷ் மணியன் இருவரும் .பாடல்களிலும் பின்னணி இசையில் ஜி கே வி -மிக்கின் அருள் தேவ் படத்திற்குப் பக்க பலமாக செயல்பட்டுள்ளனர். சூப்பர் சூப்பர் சுப்பராயன் சண்டைக்காட்சிகளில் வன்முறை ரத்தம் வழிகிறது.
நிபந்தனையற்ற காதலர்களின் அன்பு உள்ளத்தை படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அதன் பின்னணியில் இவ்வளவு வன்முறைக் காட்சிகள் தேவையா என்று யோசிக்க வைக்கிறது.
மற்றபடி ஒரு பட்ஜெட் படத்துக்குள் முடிந்த அளவு நிறைவு கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். சில குழப்பங்களைத் தவிர்த்து இருந்தால் இந்தப் படம் கச்சிதமான பட்ஜெட் படமாக அமைந்திருக்கும்.


