ரிஷப் ஷெட்டி ,ருக்மிணி வசந்த் ,ஜெயராம், -குல்ஷன் தேவய்யா ,மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ரிஷப் ஷெட்டி இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு – அரவிந்த் எஸ் காஷ்யப்,இசை – பி .அஜனிஷ் லோக்நாத்,கலை இயக்கம் -தரணி கங்கே புத்திரா ,படத்தொகுப்பு – சுரேஷ்.ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார்.
தொன்மத்தையும் வரலாற்றையும் இணைத்து நவீன தொழில்நுட்பத்தையும் கலந்து மாய எதார்த்தக் கதையாக உருவாகி வெற்றி பெற்ற திரைப்படம் காந்தாரா. அதன் தொடர்ச்சியாக காந்தாரா அத்தியாயம் 1 என்கிற பெயரில் அதே சேர்மானத்தில் பெரிய பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது .
அதிகார வர்க்கத்திற்கும் நாட்டார் தெய்வபக்தியுடன் வாழும் ஆதி பழங்குடிகளுக்கும் நடக்கும் மோதலைப் பற்றி பேசிய காந்தாரா திரைப்படம் போல அதன் நீட்சியாகவே இந்தப் படத்தின் கதையும் உருவாக்கப்பட்டுள்ளது.கதை நிகழும் காலம் என்று ஐரோப்பியர், அரேபியர் வணிகம் செய்ய வந்த காலத்தை உணர வைக்கிறார்கள்.
அதிகார சக்தி,எளிய மக்கள் சக்தி இவர்களுக்கு இடையேயான யுத்தத்தில் நாட்டார் தெய்வங்களின் பக்தி பற்றியும் பேசப்படுகிறது.
இந்தப் படத்தை ஒவ்வொரு பிரேமிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தோன்றும் துணை நடிகர்கள், காடா மலையா? நாடா நகரமா ? சந்தைகளா சாலைகளா? பள்ளத்தாக்குகளா சிகரங்களா? என்று கண்களை விரியவைக்கும் படி திரையை நிறைக்கும் பின்புலக் காட்சிகளும், ஒவ்வொரு ஃபிரேமிலும் விஎஃப் எஸ் தொழில் நுட்பம் நிகழ்த்தும் மாயங்களும் கொண்டதாகப் படம் விரிகிறது.
நடிப்புக் கலைஞர்கள், நடிப்பு வெளிப்பாடுகள், குணச்சித்திர உணர்ச்சிகள்,
கதை திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, சண்டைக் காட்சிகள் என்று ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு படத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
வணிக ரீதியான படமாகவும் பெரிய கேன்வாஸ் கொண்ட பின்புலமாகவும் வித்தியாசமான திரைக்கதையாகவும் அமைத்து படத்தை தனித்து தெரிய வைக்கிறார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி.படத்தின் நாயகன் ஆகவும் அவர் நடிப்பிலும் மேலோங்குகிறார்.
வி எஃப் எக்ஸ் காட்சிகளில் வரும் புலி ,தேவாங்கு, மான் போன்ற மிருகங்கள் துல்லியமாகத் தெரிகின்றன. இதில் தோன்றும் புலி மிரட்டல் ரகம்.ஒவ்வொரு சண்டைக்காட்சியும் இருக்கை நுனிக்கு ரசிகர்களை ஆழ்த்தும் வகையில் சாகச உணர்வூட்டும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் உள்ள குறை என்றால் நகைச்சுவைக் காட்சிகளில் வருபவர்களை மலிவான தமிழில் பேச வைத்திருப்பது தான்.படத்தில் வரும்
மிரளவைக்கு நீளமான இரண்டு சண்டைக் காட்சிகளிலும் வி.எஃப்.எக்ஸ் தரத்தில் வியக்கவைக்கின்றன.
நாயகனாக நடித்து படத்தைத் தூக்கி நிறுத்தும் ரிஷப் ஷெட்டி தனது பாத்திரத்தில் நவரசங்களை வெளிப்படுத்தி சாகசம் செய்கிறார்.
நாயகி ருக்மினி வசந்த், அந்தக் கனகவதி பாத்திரத்தின் தோற்றத்தினால் திரையை நிறைக்கிறார்.அழகும் அதே அளவிற்கு சாதுரியமும் கொண்ட அப்பாத்திரத்தில் ஸ்கோர் செய்துள்ளார்.
அரசராக வரும் ஜெயராமின் திரையிருப்பு படத்திற்குப் பலம்.ஜெயராமின் மகனாக புதிய அரசனாகப் பதவியேற்கும் குலசேகரன் பாத்திரத்தில் வரும் குல்ஷன் தேவய்யா, முட்டாள் தனத்திற்கும் பிடிவாதத்திற்கும் பெயர் போன பாத்திரத்தில் நடித்துள்ளார்.பிரதான பாத்திரங்களைச் சுற்றி செயல்படும் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்களும் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
கண்ணை மூடிக்கொண்டு எந்த காட்சியில் இருந்து பார்த்தாலும் ,கதையே தெரியாவிட்டாலும் கூட அந்தக் காட்சி மனதைக் கவரும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
பெரிய பெரிய நட்சத்திர நடிகர்களை வைத்து இருநூறு முன்னூறு கோடிகளில் உருவாக்கப்படும் படங்களில் கூட கமர்சியல் என்கிற பெயரில் வெட்டு,குத்து ,ரத்தம், போதை மருந்து,பாலியல் பலாத்காரம் என்று குப்பையான கதைகளையே படமாக எடுக்கிறார்கள். சற்றும் விலகி நின்று சிந்திக்காத அம்மாதிரி வணிக இயக்குநர்கள் காந்தாரா போன்ற படங்களைப் பார்த்து வெட்கப்பட வேண்டும்.
மொத்தத்தில் இந்த ‘காந்தாரா அத்தியாயம் 1 ‘மறக்க முடியாத திரையனுபவத்தை வழங்குகிறது.


