’காந்தி கண்ணாடி’ திரைப்பட விமர்சனம்

கேபி ஓய் பாலா,நமீதா கிருஷ்ணமூர்த்தி ,பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியன், ஆராத்யா ரித்து சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு, மதன் நடித்துள்ளனர்.ஷெரீஃப் எழுதி இயக்கியுள்ளார். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.ஆதிமூலம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய்கிரன் தயாரித்துள்ளார்.

சென்னையில் ஒரு செக்யூரிட்டியாக பாலாஜி சக்திவேல் வேலை பார்க்கிறார். அவரும் அர்ச்சனாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் . சமூக அழுத்தத்துக்குப் பயந்து சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்து தனியாக குடும்பம் நடத்துகிறார்கள்.இப்படிப் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. அறுபதாம் கல்யாணம் நடக்க வேண்டிய அளவிற்கு வயதாகிவிட்டது. ஆனால் அவர்களுக்குள் வறுமையும் அன்பும் உண்டே தவிர குழந்தைகள் இல்லை.வயது கூடிய போதும் காதல் குறையவில்லை.

திருமணத்தை சரியாக நடத்தவில்லை என்பதால் தனது 60வது திருமண விழாவையாவது பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்ற தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற விருப்பப்படுகிறார் பாலாஜி சக்திவேல்.இதற்கு விழா ஏற்பாடு செய்யும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தும் பாலா குழுவினரை அணுகிக் கேட்கிறார்.செலவு 50 லட்சம் போல ஆகும் என்கிறார்கள்.செக்யூரிட்டி வேலை புளிசாதம் , தயிர்சாதம் என்று வாழ்க்கையை ஓட்டும் அவரிடம் ஏது பணம்?இப்படித்தான் பாலா குழுவினர் நினைக்கிறார்கள். ஆனால் பாலாஜி சக்திவேல் தனது ஊருக்கு அழைத்துச் செல்கிறார். அப்போது தான் தெரிகிறது அவர் ஒரு ஜமீன் மகனாக இருந்தவர் என்று.அதன் பிறகு பாலாவின் எண்ணம் மாறுகிறது.

பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா தம்பதியின் 60 வது கல்யாணத்தை லாபம் தரும் ஒரு நிகழ்வாக மட்டுமே பார்க்கிறார்.அகப்பட்ட வரை கைப்பற்றிக் கொள்ள நினைக்கிறார். இத்தனைக்கும் நடுவே பாலாஜி சக்திவேல் தனது காதல் மனைவியின் ஆசை நிறைவேறும் வகையில் அறுபதாவது திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று மட்டும் நினைக்கிறார்.சொத்தை விற்ற வகையில் பல லட்சரூபாய் பணம் பாலாஜி சக்திவேலுக்கு கிடைக்கிறது. பணம் கிடைத்த மகிழ்ச்சியில் பாலாவும்,திருமணம் நல்லபடி நடக்கும் என்று பாலாஜி சக்திவேலும் நினைக்கிறார்கள். ஆனால் விதி விளையாடுகிறது.அரசின்  கொடூர பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நிலைகுலைந்து போகிறார்கள்.
பணத்தை எப்படியாவது மாற்றி திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று பாலாஜி சக்திவேல் நினைக்கிறார் – அதையும் லாப நோக்கத்துடன் பார்க்கிறார் நாயகன் பாலா.
தனது ஆசை மனைவிக்காக பாலாஜி சக்திவேல் நினைத்தது போல், 60 வது கல்யாணத்தை நடத்தினாரா ? இல்லையா ? என்பதை நகைச்சுவையாகவும், நெகிழ்ச்சிகரமாகவும் சொல்ல முயன்றுள்ளதுதான் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம்.

சின்னத்திரையில் முகம் தெரிந்தவராக இருக்கும் பாலாவுக்கு  பெரிய திரையின் கதாநாயகனாக இதுதான் முதல் படம். அறிமுக நாயகன் ,வெள்ளித்திரையில் அனுபவம் இல்லா நாயகன் என்பது அவரது காட்சிகளில் தெரிகிறது.நடிப்பில் இன்னும் அவர் பலபடிகள் ஏற வேண்டும்.இப்போதே முதலமைச்சர் கனவு காணக் கூடாது.நடனக் காட்சிகளில் நன்றாக ஆடி ரசிகர்களைக் கவர்கிறார். டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைக்க முயன்று இருக்கிறார்.செண்டிமெண்ட் காட்சிகளில் பார்வையாளர்களை கண்கலங்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அனைத்தும் முயற்சி நிலையில் உள்ளன. பயிற்சி மேலும் தேவை.இதைப் புரிந்து கொண்டு அவர் தன்னை வளர்த்துக் கொண்டு வெற்றி பெறுவார் என்று நம்புவோம்.

படத்தின் கதையின் பிரதான நாயகனாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், யதார்த்தமான , உணர்வுப்பூர்வமான நடிகராக கவனம் ஈர்க்கிறார். தன் காதல் மனைவி மீது அவர் காட்டும் அளவுக்கு அதிகமான அன்பை போலவே, நடிப்பும் சில இடங்களில் பொங்கி வழிகிறது.அவர் தனது உடல் மொழியைப் பாத்திரங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.

நாயகியாக நடித்திருக்கும் நமிதா கிருஷ்ணமூர்த்தி,முகம் தோற்றம் நடிப்பு என்று அனைத்திலும் குறை சொல்ல ஒன்றும் இல்லை.
பாலாஜி சக்திவேலின் மனைவியாக நடித்திருக்கும் அர்ச்சனா தேசிய விருது பெற்ற நடிகை.அவரது அனுபவ நடிப்பு படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் மதன், நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியம், ரித்து சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு என மற்ற துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்கள் சந்தித்த அல்லாட்டங்கள் படத்தில் காட்டப்படுகிறபோது மீண்டும் கண்ணீர் வருகிறது.ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா, பெரும்பாலும் வெளிப்புறங்களிலேயே படம் ஆக்கி உள்ளார்.பாத்திரங்களின் இயல்பைக் காட்டும் வகையில் அவரது ஒளிப்பதிவு உள்ளது.விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் ஜீவன்.

எழுதி இயக்கியிருக்கும் ஷெரீப், பிரேக்கப் புகழ்பெற்று விளங்கும் இந்த காலத்தில் ஒரு உண்மையான அன்பையும் காதலை வெளிப்படுத்தும் ஒரு கதையை எடுத்துக்கொண்டு படமாக்கி உள்ளது பாராட்டுக்குரியது.

சில இடங்களில் திரைக்கதையில் சுவாரசியம் மட்டுப்பட்டுள்ளது.அதனால் காட்சிகள் தொய்வு உணர்வைக் கொடுக்கின்றன.
பாத்திரங்களின் இயல்பு சரியாகச் சித்தரிக்கப்படாத ஒரு குறை.

இளம்பருவத்தில் வருவது மட்டுமல்ல முதுமையிலும் தொடர்வதே ,எந்த நிபந்தனைகளுக்கும் உட்படாததே உண்மையான காதல் என்பதை சொல்லமுயன்றிருக்கிறார்.அந்த நோக்கத்தின் பாதையில் தடைகள் தொய்வு ஏற்பட்டிருந்தாலும் நோக்கம் பாராட்டுக்குரியது