அனுமோல், லிங்கேஷ், காயத்ரி, ரமேஷ் திலக்,ஸ்வாகதா, ஐசக் நடித்துள்ளனர்.எழுதி இயக்கி உள்ளார் எழுத்தாளர் தமயந்தி.ஒளிப்பதிவு – கார்த்திக், இசை – ஜஸ்டின், படத்தொகுப்பு -பிரவீன்,தயாரிப்பு ஜெ ஸ்டுடியோ சார்பில் ஜேசு சுந்தரமாறன் .
வேறொரு ஜாதி இளைஞனைக் காதலிக்கும் மகள், அதை ஆமோதித்து ஆதரவு தரும் தந்தை, அதற்குத் தனது பிடிவாத குணத்தால் தடை போடும் தாய்,தாயாரின் அழுத்தத்திற்காக உறவுக்காரனுக்குக் கழுத்தை நீட்டும் மகள், பிடிக்காத வாழ்க்கை வாழ விரும்பாமல் தற்கொலை செய்து கொள்ளும் மகள்,குற்ற உணர்ச்சியால் தவிக்கும் பெற்றோர் என்று ஆங்காங்கே விழும் கண்ணிகளை இணைத்து சங்கிலியாக்கி உருவாகி உள்ள படம் தான் ‘காயல்’. காதலியைப் பிரிந்த நாயகன் வாழ்க்கை என்ன ஆனது? மகளைப் பலி கொடுத்த தாய் மனம் திருந்தினாரா, இல்லையா? போன்ற கேள்விகளுக்கு விடை அளிப்பதே படத்தின் கதை செல்லும் பாதை.
படத்தில் மகள் தேன் மொழியாக நடிகை காயத்ரியும் அம்மாவாக அனுமோலும் தந்தையாக ஐசக்கும் நாயகன் தமிழ் ஆதியாக லிங்கேஷும் பிரதான வேடமற்றுள்ளனர்.
நெய்தல் நிலப் பின்னணியில் அழகான இயற்கை காட்சிகள் சூழ காட்சிப் படுத்தப்பட்டு இருக்கும் கதை இளையராஜாவின் பாடலுடன் இதமாகத் தொடங்குகிறது.
கதையில் தற்கொலை செய்து கொள்ளும் தேன் மொழியின் அதாவது நடிகை காயத்ரியின் இறப்பு பரபரப்பைப் பற்றிக்கொள்ள வைக்கிறது. அந்த இறப்புக்கு முன்னும் பின்னும் நடந்த சம்பவங்களை நான் லீனியராக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தமயந்தி.
துடிப்பான இளைஞராக வரும் லிங்கேஷ், கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்துள்ளார். காதல் தோல்வியை மறைக்க எதையும் தவிர்க்கிற மனோபாவத்துடன் சிடுசிடுவென இருக்கும் காட்சிகளிலும் காதல் போயின் இன்னொரு காதல் என்பதை ஏற்க மறுக்கும் காட்சிகளிலும், தன் பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்.
யமுனா என்ற கதாபாத்திரத்தில் அனுமோல் அற்புதமாக நடித்துள்ளார்.படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பேசுகிறவர் பிற்பாதியில் பேசாமலேயே தனது உணர்வுகளைக் கடத்தி உள்ளார்.
துறு துறுப்புடன் தோன்றுகிற ஸ்வாகதா இறுதி வரை அதையே துடிப்புடன் நடித்துள்ளார்.
மனநல ஆலோசகராக வரும் ரமேஷ் திலக், அனுமோல் மகளாக நடித்திருக்கும் காயத்ரி ஆகியோரும் கதாபாத்திரத்துக்கு அளவு.அனுமோல் கணவராக வரும் ஐசக் கதாபாத்திரம் மட்டும் கதைக்கு ஒட்டவில்லை.அந்த போலீஸ் பாத்திரத்தின் மிடுக்கு குறைந்தது ஏன்?
ஆண் இயக்குநர்கள் இயக்கும் படங்களில் மது அருந்தும் காட்சிகளைக் கண்டிக்கும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் இயக்குநரே படத்தில் ஏகப்பட்ட மது அருந்தும் காட்சிகளை வைத்திருப்பது உறுத்தல்.
‘எத்தனையோ பொண்ணுங்க செத்து வாழ்றாங்க’, செத்துப் போறதும்.. காணாம போறதும் ஒண்ணுதான்… இதனால யாருக்கும் எந்த ப்ரயோசனமும் இல்ல’ என்பது போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
படத்தின் பெரிய பலமே ஒளிப்பதிவும், இசையும்தான். ஒளிப்பதிவாளர் கார்த்தி காட்சிகளை அழகுணர்வுடன் வெளிப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளார்.ஜஸ்டினின் பாடல்கள் கேட்க வைக்கும் ரகம் –
காதல், சாதி, பயணம் போன்ற அம்சங்கள் அடங்கிய கதையை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். நான் லீனியர் முறை கதை சொல்லல் சில நேரம் காட்சிகள் நகர்வது நிகழ்காலமா கடந்த காலமா என்று குழம்ப வைக்கிறது. இன்றைய சமூகத்துக்குத் தேவையான கதை.
‘காயல்’ தூறலாக நம்மை ஈரப்படுத்தி நனைக்கிறது.


