தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் அபிமன்யு சிங். இவர் வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கே இவரை பார்த்து நடுங்கியது என்பது தான் உண்மை.
இதோ மிரட்டல் வில்லன் அபிமன்யு சிங் பேட்டி :- இயக்குநர் வினோத் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் கதையை என்னிடம் சொல்லும் போது இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது என்ற விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த கதையில் அவ்வளவு அறிவுபூர்வமான விஷயங்கள் இருந்தன. என் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் வரலாறும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நடிகர் கார்த்தியை பற்றி பேசும் போது , கார்த்தி மிகசிறந்த மனிதர். அவர் எப்போதும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக தெளிவாகவும் , முழு கவனத்தோடும் செய்யக்கூடியவர். காட்சிக்கு காட்சி தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றிக்கொண்டே இருப்பார். அது சரியாக வரும் வரை தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பார்.
தன்னுடைய பங்களிப்பால் ஒட்டுமொத்த காட்சியும் சிறப்பாக வரவேண்டும் என்று சிரத்தை எடுத்து வேலை செய்வார். கார்த்தி கண்ணியமானவர் , கடின உழைப்பாளி அதே சமயம் அனைவரிடமும் எளிமையாக பழகுபவர்.
இயக்குநர் வினோத் பற்றி பேசும்போது , இயக்குநர் வினோத் தன்னுடைய நடிகர்களை அதிகம் நேசிப்பார். எப்போதும் எதையும் அமைதியாக கையாளுவார். இயக்குநர் வினோத் எப்போதும் மிக சிறந்த வேலையை எதிர்பார்ப்பார். காட்சிகள் சிறப்பாக வரும் வரை கடுமையாக உழைப்பார். அதிக கவனம் , தூய்மையான மனம் போன்றவை எனக்கு வினோத்திடம் மிகவும் பிடித்தவை.”
படபிடிப்பு தளத்தில் நடந்த மறக்கமுடியாத கடினமான நிமிடங்களை பற்றி நினைவுகூர்கிறார் அபிமன்யு சிங் , ”நாங்கள் வெயில் மற்றும் குளிர் அதிகமாக இருக்கும் கால நிலையில் படபிடிப்பு நடத்தவேண்டி இருந்தது. நான் படபிடிப்பு முடிந்து ஒரு நாளைக்கு 15 முறை என் முகத்தை கழுவ வேண்டும். அங்கே அவ்வளவு தூசி படலம் இருக்கும். இப்போது படத்தின் வெற்றி எல்லா கஷ்டங்களையும் மறக்கடித்துள்ளது ” என்றார் அபிமன்யு சிங்.