காற்றே வராத குகைக்குள் தினமும் 14 மணி நேரம் ; ஜித்தன் ரமேஷின் ஜிலீர் அனுபவங்கள்!

நேனி எண்டர்டைன்மெண்ட்ஸ் சார்பில் டாக்டர் அமர் இராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற ‘தாய்நிலம் ‘ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடிக்க கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் இராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, காசி விசுவநாதன் மற்றும் எவர்க்ரீன் அற்புதானந்தம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசேபச்சன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்

நடிகர் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இன்னும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்றடைந்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெளியாகும் அவரது முதல் படம் இது என்பதால் பல ரிஸ்க்கான சாகச காட்சிகளில் கூட டூப் போடாமல் நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ்.

அந்தவகையில் இந்தப் படத்தில் பூமிக்கு அடியில் 5500 சதுர அடியில் மிகப் பிரமாண்டமான குகை செட் ஒன்றை தென்காசிக்கு அருகில் உள்ள காட்டிற்குள் அமைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்த பெரும்பாலான காட்சிகள் இந்தக் குகை செட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளன.

குகைக்குள் காற்று தாரளமாக வருவதற்கான வழி இல்லை என்றாலும் மின்விசிறியைப் பயன்படுத்தினால் படமாக்கப்படும் காட்சிகளின் எதார்த்தத்தை பாதிக்கும் என்பதால் அதைத் தவிர்த்து விட்டு 35 டிகிரி செல்சியஸ் அனல் பறக்கும் வெப்பத்தில் 22 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 14 மணி நேரத்திற்கு மேல் அந்த வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார் ஜித்தன் ரமேஷ்.

சில சமயங்களில் வெப்பத்தைத் தாங்கமுடியாமல் தண்ணீரைத் தன்மேல் இறைத்து சிறிதளவு வெப்பத்தைத் தணித்துக்கொண்டு அதன்பின்னரும் ஓய்வு கூட எடுக்காமல் தொடர்ந்து நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்துக்கான எதிர்பார்ப்பு திரை ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.