ஜிவி பிரகாஷ் குமார்,திவ்யபாரதி ,சேத்தன், அழகம்பெருமாள், இ. குமாரவேல், சாபுமோன் அப்துல் சமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன் ப , பிரவீன், பயர் கார்த்திக் நடித்துள்ளனர் .கமல் பிரகாஷ் இயக்கி உள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார் .எஸ் எஸ் மூர்த்தி கலை இயக்கம், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சி என அமைத்துள்ளனர். ஜீ ஸ்டுடியோஸ் வழங்க பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. தயாரிப்பு ஜிவி பிரகாஷ் குமார், உமேஷ் கே ஆர் பன்சல்,பவானி ஸ்ரீ. கலர் பிரேம்ஸ் அழகப்பன் III வெளியீடு.
ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் 25வது திரைப்படமான ‘கிங்ஸ்டன்’ ,திகில் கலந்த பேண்டஸி கதைக் களத்தில் உருவாகியுள்ளது.
அது தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கடற்கரைக் கிராமம். மீன் பிடித் தொழிலை நம்பி உள்ள அந்த ஊரைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றால் உயிருடன் திரும்பி வருவதில்லை பிணமாகவே திரும்பி வருகிறார்கள். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதனால் கடலுக்குள் செல்லவே அச்சம் அடைகிறார்கள். எண்பதுகளில் இருந்து இந்த துர் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.ஆபத்துகளைக் கருதி அரசாங்கமும் அங்கே போகக்கூடாது என்று தடை செய்துள்ளது.இதற்கெல்லாம் காரணம் கடலில் அடக்கம் செய்யப்பட்டு ஒருவனின் ஆவி தான் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள்.
எப்படியாவது பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்கிற வேகத்தோடு இருக்கிற ஜி வி பிரகாஷ் குமார்,தனக்கென ஒரு படகு வாங்கி மீன் பிடிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். அதற்காக தாமஸ் என்பவரிடம் வேலை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் முதலாளியின் சட்டவிரோத செயல்கள் தெரிந்து அவரிடமிருந்து விலகுகிறார்.கடலுக்குள் சென்றால் உயிருடன் திரும்பவே முடியாது என்கிற நிலையில் துணிந்து கடலுக்குள் செல்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.நாற்பதாண்டு காலம் தங்கள் மக்களை பயமுறுத்தி வந்த அந்த பிரச்சினையிலிருந்து மீட்க விரும்புகிறார் ஜி.வி பிரகாஷ்.தனது நண்பர்களுடன் கடலுக்குள் செல்ல, அவர் உயிருடன் திரும்பினாரா ? அல்லது ஊர் நம்புவது போல் பிணமாக திரும்பினாரா ? யாரும் செல்லாத நிலையில் கடலுக்குள் சென்ற அவருக்கு என்ன நேர்ந்தது? ? கடல் பின்னணியில் நடக்கும் சட்ட விரோத செயல்கள் என்னென்ன?போன்ற கேள்விகளுக்குப் பதில் ஃபேண்டஸியாக சொல்ல முயற்சித்திருப்பது தான் இந்த ‘கிங்ஸ்டன்’
ஜிவி பிரகாஷ் இந்தப் படத்தில் மீனவ கிராமத்து இளைஞராக நடித்திருக்கிறார்.,தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் மிதமான மாற்றமே தவிர பெரிதாக மாற்றமில்லை. அந்த பாத்திரத்தை அவருக்கு ஏற்ற மாதிரி சட்டையாகத் தைத்து கொடுத்துள்ளார்கள்.எனவே சிரமப்படாமல் இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதிக்கு பெரிய வேலை இல்லை .இருந்தாலும் அவரைக் கதைக்குள் கொண்டு வருவதற்கான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
குணச்சித்திரங்களில் பளிச்சிடும் அழகம்பெருமாள், சேத்தன், இ. குமரவேல் ஆகியோரும் உள்ளனர்.இவர்கள் மட்டுமல்ல வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.ப, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் தங்களது வேலையைச் சரியாகவே செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், கடல் சூழ்ந்த உலகைக் கண் முன் நிறுத்துகிறார்.கடலின் அழகு, ஆபத்து மற்றும் பிரமாண்டம் என அனைத்தையும் திரையில் கொண்டு வர முயன்றுள்ளர்.எனவே காட்சிகளில் குறையில்லை.
எப்போதும் தன் படங்களில் தன் இசையைப் பெரிய பலமாகக் காட்டும் ஜி.வி. பிரகாஷ் இதில் அதைத் தவற விட்டிருக்கிறார்.அவரது தயாரிப்பில் வந்த படத்திலேயே இப்படிச் செய்திருப்பது அவரது பணி அழுத்தத்தையே காட்டுகிறது.
படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கதையில் இருக்கும் திகிலையும் அதன் திருப்பங்களையும் முடிந்தவரை தொகுத்துள்ளார்.
எழுதி இயக்கியிருக்கும் கமல் பிரகாஷ், கடலில் நடக்கும் திகில் கதையை ஃபேண்டஸியாக சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால்,ஒரு நல்ல திரை அனுபவமாக மாற வேண்டிய இக்கதை, அழுத்தமான கதையும் பலமான திரைக்கதையும் இல்லாததால், அவரது ஃபேண்டஸி மற்றும் திகில் யோசனைகள் கேள்வி கேட்க வைக்கின்றன.
கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் அமானுஷ்ய உருவம், கடலில் நடக்கும் ஆவிகளுடனான மோதல் ஆகியவை படக்குழுவினரின் உழைப்பைப் பறைசாற்றும்.
மொத்தத்தில், ‘கிங்ஸ்டன்’பேண்டஸி கதைப் பின்னணியில் ஒரு கமர்சியல் படம்.அதீத கற்பனைக் கதைகள் ரசிப்போருக்குப் பிடிக்கும்.