உலகில் பல மொழிகளில் அதிகப் பாடல்களைப் பாடியவர் என்கிற வகையில் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு இப்போது கின்னஸ் புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது.அவருடைய சாதனைக்கு இது உலக அங்கீகாரம் ஆகும்.
பி.சுசீலா 1960 முதல் இன்றுவரை பி.சுசீலா 17,695 பாடல்களைப் பாடியுள்ளார். இது ஓர் உலக சாதனையாகும்.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர் பி.சுசீலா. பள்ளியில் படிக்கும்போதே இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ முடித்தார்.
பதினைந்து வயதில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் தனது படத்தில் இவரை முதன் முதலாக பின்னணி பாட வைத்தார். 1955ல் இவர் பாடிய ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்..’, ‘உன்னை கண் தேடுதே…’ பாடல்களால் பிரபலமடைந்தார்.
பி.லீலா, எம்.எல்.வசந்தகுமாரி, ஜிக்கி போன்ற பிரபலங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த பின்னணி உலகில் இந்த இளம் பாடகியின் பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. தனித்தன்மை வாய்ந்த தன் குரல் இனிமையால் தொடர்ந்து பல மொழிகளில் ஹிட் பாடல்களை அளித்த இந்த இசையரசியின் ஆட்சி, அரை நூற்றாண்டுகள் தொடர்ந்தது.
1955 முதல் 1985 வரை வெளிவந்த கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் இவர் பின்னணி பாடியுள்ளார். தெலுங்கில் கண்டசாலா, தமிழில் டி.எம்.சௌந்தர்ராஜன், கன்னடத்தில் பி.பி.ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் தென்னிந்திய திரையிசை உலகில் சரித்திரம் படைத்தன. குறிப்பாக, டி.எம்..சௌந்தர்ராஜனுடன் தமிழில் நூற்றுக்கணக்கான டூயட் பாடல்களைப் பாடியுள்ளார்.
தாய் மொழி தெலுங்கு என்றாலும் இவரது தமிழ் உச்சரிப்பு தனித்தன்மையுடன் விளங்கியது. நாகேஸ்வரராவ், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இருவரும் பிரிந்த பின் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் தொடங்கி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் வரை ஏராளமான இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
5 முறை தேசிய விருதுகள், பத்மபூஷன் விருது, 10க்கும் மேற்பட்ட மாநில விருதுகள், கலைமாமணி பட்டம், ஆந்திர மாநில அரசு விருது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கருடன் இவருக்கு நெருங்கிய நட்பு உண்டு. 2005 வரை ஹிட் பாடல்களை அளித்து வந்தார். தற்போது பக்திப் பாடல்கள், மெல்லிசை பாடல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.
பல்வேறு ஆடியோ நிறுவனங்களுக்காக 1000க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.
பி.சுசீலா இசைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். அவரின் இத்தகைய நீண்ட இசைப் பயணத்தையும், சாதனையையும் பாராட்டும் விதமாக அவருக்கு கின்னஸ் கவுரவம் கிடைத்துள்ளது.
அதிகப் பாடல்களைப் பாடியவர் என்கிற அவருடைய சாதனைக்கு கின்னஸ் அங்கீகாரம் அளித்துள்ளது. 1960 முதல் இன்றுவரை பி.சுசீலா 17,695 பாடல்களைப் பாடியுள்ளார்.