கவின்,ப்ரீத்தி அஸ்ரானி,பிரபு, ராவ்ரமேஷ்,தேவயானி,கௌசல்யா, வீ.டி வி. கணேஷ், ஆர்.ஜே விஜய், நடித்துள்ளனர்.சதீஷ் கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார்.இசை – ஜென் மார்ட்டின்,ஒளிப்பதிவு – ஹரிஷ் கண்ணன், தயாரிப்பு- ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்.
படம் தொடங்கியதும் விஜய் சேதுபதியின் குரலில் ஆலாலகண்டன் ராஜாவின் கதை சொல்லப்படுகிறது. அவனுக்குக் காதல் பிடிக்காது காதலிப்பவர்களை அவன் துன்பப்படுத்துகிறான். அப்படி தீயில் இறங்கிய காதல் ஜோடியின் சாபம் அவனைத் துரத்துகிறது. நீயும் ஒரு காதலால் கஷ்டப்படுவாய் என்று சாபம் அவனுக்கு வருகிறது.
அந்த ராஜாவே சமகால இளைஞனாக கவின் பாத்திரமாக வருகிறது.கவினுக்கும் காதல் என்றால் பிடிக்காது. தன்னைக் காதலிக்க நெருங்கி வருபவர்களையும் புறம் தள்ளுகிறார்.நாயகி ப்ரீத்தி மூலமாக ஒரு பழங்காலப் புத்தகம் கிடைக்கிறது. அந்தப் புத்தகம் வந்த பிறகு சில காதல் இணைகளைப் பார்க்கும் போது அவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்காலத்தில் நடக்கும் பிரச்சினைகள் கவினுக்கு உள்ளுணர்வாகத் தெரிகிறது.இந்த சிக்கலில் இருந்து மீள கவின் விரும்புகிறார்.இதை எப்படிச் சரி செய்வது என்று திணறியவர், தஞ்சையில் உளவியல் நிபுணராக இருக்கும் பிரபுவை அணுகுகிறார்.இந்த காலகட்டத்தில் ப்ரீத்தி தன் காதலைக் கவினிடம் வெளிப்படுத்துகிறார்.ஒரு முத்தத்தையும் கொடுத்து விடுகிறார். மனதுக்குள் கவினுக்கு ப்ரீத்தி மீது ஆசையும் காதலும் இருந்தாலும் ஆழ்மனதில் மண்டிக் கிடக்கும் உள்ளுணர்வின் தயக்கத்தால் நிராகரித்து விடுகிறார். ப்ரீத்தியின் காதலை ஏற்க மறுக்கிறார். கவினின் பிரச்சினை என்ன? அது தீர்ந்ததா? கவின் ப்ரீத்தியின் காதலை ஏற்றுக்கொண்டாரா? என்பதையே 144.41 நிமிடங்கள் கொண்ட கிஸ் திரைப்படம் சொல்கிறது.
பேன்டசி காட்சிகளுடன் தொடங்கும் இப்படம் சமகாலத்துக் காதல் கதையை நோக்கி நகர்கிறது.பேண்டஸி காட்சிகளை விட சம காலக் காட்சிகள் நன்றாக உள்ளன.
படத்தின் முதல் பாதி சாதாரணமாக இருந்தாலும் இரண்டாம் பாதி சுவாரஸ்யம் விறுவிறுப்பு என்று கலந்து கவர்கிறது.
நிஜமான காதலர்கள் போல் கவின், ப்ரீத்தி இருவரின் சேர்மானம் நம்ப வைக்கிறது.அந்த அளவிற்கு அந்தப் பாத்திரங்கள் இயல்பாக உள்ளன.மனதில் காதலை வைத்துக் கொண்டு ஏற்க மறுக்கும் இடத்தில் கவின் நடிப்பு நன்றாக இருக்கிறது.கவின் பல்வேறு வகையான நடிப்பு வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும்
ப்ரீத்தி நடனத்தையும் நடிப்பையும் உணர்ந்து தந்திருக்கிறார். அம்மாவாக தேவயானி ஸ்கோர் செய்கிறார்.நீண்ட இடைவெளிக்குப் பின் கௌசல்யா நடித்துள்ளார், அதுவும் அனுதாபத்தை அள்ளும் பாத்திரத்தில்.பேராசிரியர் நச்சினார்க்கினியனாக பிரபு வருகிறார். ராவ் ரமேஷ், தேவயானி, பிரபு நடித்துள்ள காட்சிகள் மூலம் படத்திற்கு எடை கூட்டி உள்ளார்கள்.
ஜென் மார்ட்டினின் இசை காதல் உணர்வுகளைச் சரியாக கடத்தியுள்ளது. ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாக இருப்பதோடு கதாபாத்திரங்களின் இளமையை அழகாகப் பிரதிபலித்துள்ளார்.
பாடல் வரிகள் இல்லாமல் ஒரு நடனக் காட்சியை காட்சிப்படுத்திய விதமும், இதற்கான பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது. படத்தின் ஒளிப்பதிவில் ஹரிஷ் கண்ணன்,செய்துள்ள ஒளி அமைப்பும் அழகுணர்ச்சி ததும்பும் காட்சிகளும் பார்க்க வைக்கின்றன.
படத்தின் கதை வேகம் குறையும்போது வீ டிவி கணேஷ் தனது நகைச்சுவையால் கலகலப்பூட்டுகிறார்.குறிப்பாக காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் ஒருவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சரியான கலகலப்பு.
சின்ன பட்ஜெட் ஆக இருந்தாலும் சரியான கதை அம்சம் உள்ள படங்கள் இப்போது வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் கவினுக்கு ‘டாடா’ படம் அமைந்தது.அந்த வரிசையில் இந்தப் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.நடனக் கலைஞரை சதீஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ள படம் இது.இயக்குநராகவும் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
கத்தி வெட்டு குத்து ரத்தம் போதை வன்முறை என்று நிழல் உலகத்தின் இருட்டான பக்கங்களையே காட்டி வரும் படங்களுக்கு மத்தியில் ஒரு அழகான காதல் கவிதையாக ‘கிஸ்’ படம் அமைந்திருக்கிறது. காதல் பட ரசிகர்களுக்கு ‘கிஸ்’ நிச்சயம் பிடிக்கும்.


