அஜித் குமார், த்ரிஷா, பிரபு,சுனில், அர்ஜுன் தாஸ்,ஜாக்கி ஷெராஃப், பிரசன்னா, சிம்ரன்,டினு ஆனந்த், கார்த்திகேயன், சாயாஜி ஷிண்டே, உஷா உதூப், யோகி பாபு,ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அஜித்தின் முந்தைய படமான விடாமுயற்சியில் மிகை உணர்ச்சி காட்டாத யதார்த்தமான பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதையும் அப்படி இயல்புக்கு நெருக்கமாக இருந்தது. ஆனால் அது ரசிகர்களால் சற்றுத் தள்ளி வைத்துப் பார்க்கப்பட்டதால் ரசிகர்களின் முழுதிருப்தியைக் கவனத்தில் கொண்டு அவர்களைக் குறிவைத்து முழு நீள ரசிகர்கள் படமாக இந்த139.52 நிமிட ‘குட் பேட் அக்லி’ உருவாகியுள்ளது.
அஜித் நிழல் உலக சாம்ராஜ்யத்தில் கொடி கட்டிப் பறப்பவராக இருக்கிறார்.அவரது மனைவி த்ரிஷா.பிறந்த குழந்தையை விட்டுப் பிரிந்து அஜித் பல ஆண்டுகள் சிறை செல்ல நேர்கிறது. தனது குழந்தையைத் தொடக்கூடாது குழந்தையைச் சந்திக்க வர வேண்டும் என்றால் களங்கமான நிழல் உலக நடவடிக்கைகள் அனைத்தையும் துறந்து விட்டுத் தான் வர வேண்டும்என்று உறுதியாகக் கூறுகிறார் த்ரிஷா.
தனது குழந்தையிடம் நீ தவழ்கிற, வளர்கிற, விளையாகிற காலத்தில் நான் உன்னுடன் இருக்கப்போவதில்லை. 17 வயதில் திரும்ப வருவேன் என்று உறுதி அளித்துவிட்டுச் செல்கிறார்.குழந்தையும் வளர்ந்து அப்பா எப்போது வருவார் வருவார் என்று சொல்லி 17 ஆண்டுகள் கடந்து விடுகின்றன.அப்படி எல்லாவற்றையும் கைவிட்டு விட்டுச் சிறையில் இருந்து வரும் போது அவருக்கு அவரது பழைய கால முன்வினைப் பயன்கள், அதாவது பகைகள் துரத்துகின்றன. அவரது மகனைக் கடத்திக் கொண்டு சென்று போதை மருந்து பயன்படுத்தியதாகவும் கடத்தியதாகவும் பழிபோட்டு சிறையில் தள்ளுகிறார்கள். அப்பா சிறையிலிருந்து வந்தால், மகன் சிறைக்குச் செல்கிறார். சூழல் இப்படி இருக்கும் போது விதைத்து முளைத்து விருட்சமாக எழுந்து நிற்கும் பழைய பகையை வேரறுத்துவிட்டுத் தனது குடும்பத்துடன் சேர்ந்தாரா இல்லையா என்பது தான் குட் பேட் அக்லி படத்தின் கதை.
இதில் ஏ கே என்கிற பாத்திரத்தில்,தாதா உலகில் ரெட் டிராகன் ஆகவும் அஜித் வருகிறார். ஒரு முழு நீள ஆக்சன் ஹீரோவாக டானாக அவர் வெளுத்து வாங்கியுள்ளார்.
கதை நடக்கும் ஸ்பெயின் பின்னணியில் அதன் காட்சிப் பின்புலமும் பார்வையாளருக்குப் புதிய அனுபவத்தைத் தருகிறது.பழைய முந்தைய பட வசனங்களை அவர் பேசினாலும் ரசிகர்களுக்கும் அது கிளர்ச்சியூட்டும் தருணங்களாக மாறிவிடுகிறது. குடும்பத்திற்காக பாசமுள்ள அப்பாவாக ஒரு மனிதன் எந்த எல்லைக்கும் செல்வான் என்று அந்தப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அஜித் அலட்டிக் கொள்ளாமலே அதகளம் செய்கிறார்.
ரம்யா என்கிற பாத்திரத்தில் அஜித்தின் காதல் மனைவியாக வருகிறார் த்ரிஷா. அதே அழகு அதே இளமை.அவர் திரையில் தோன்றினாலே போதும் நடிக்க வேண்டாம் என்று தோன்றுகிறது தோற்றம்.
அஜித்துடன் அணுக்கத்தில் இருப்பவராக சுனில் வருகிறார். அதிக அங்க சேஷ்டைகள் செய்யாமலேயே அடக்கமாக வந்து போகிறார்.ஜானி, ஜாமி என்கிற இரட்டைப் பாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் வருகிறார் .அவர் தனது பாத்திரத்தைத் தோற்றத்திலும் உடல் மொழியிலும் நடிப்பிலும் பாவனைகளிலும் என குறை இல்லாமல் நடித்துள்ளார். படத்தின் இரண்டாவது பாதியில் அவருக்கான களம் அமைத்துத் தரப்பட்டுள்ளது அவரும் அடித்து ஆடியுள்ளார் .இப்படி அவருக்கு இடம் அமைத்துக் கொடுத்த பெருந்தன்மைக்காக அஜித்தையும் பாராட்டலாம்.
அர்ஜுன் தாஸின் பாஸ் போல சிறிது நேரம் வந்தாலும் மனதில் பதிக்கிறார் ஜாக்கி ஷெராஃப்.எதிர்பாராத ஒரு பாத்திரத்தில் சிம்ரன் வந்து பளீர் கவனம் பெறுகிறார்.அவருக்கும் த்ரிஷாவுக்குமான சிறு உரையாடல்கள் திரையரங்கில் கலகலப்பூட்டும் ரகம் .
அஜித்தின் மகன் விஹானாக நடித்திருக்கும் கார்த்திகேயன் தனது துறு துறு தோற்றத்தால் ரசிகர்களின் கவனம் பெறுகிறார்.
த்ரிஷாவின் சகோதரராகவும் அஜித்திற்கு உதவி செய்பவராகவும் பிரசன்னா வருகிறார்.சிறை அதிகாரியாக சாயாஜி ஷிண்டே வருகிறார்.
டினு ஆனந்த், உஷா உதூப், யோகி பாபு,ரெடின் கிங்ஸ்லிஆகியோரும் இருக்கிறார்கள்.
படத்தில் ஏராளமான அதிரடி சண்டைக்காட்சிகளும் துரத்தல் காட்சிகளும் உள்ளன. அதைப் பற்றி விரிவாகப் பேசி படத்தின் சுவாரஸ்யத்தைக் குறைக்க விரும்பவில்லை.
படத்தில் ஒளிப்பதிவும் இசையும் இணைந்து அதகளம் செய்துள்ளன.அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்தைக் கூட்டி உள்ளது.
அதேபோல் வழக்கமாக மெலடி பாதையில் பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது பின்னணி இசையில் , பாடல்களில் அதிரடி ஆட்டம் ஆடியுள்ளார்.குறிப்பாக அந்த ஒத்த ரூபா தாரேன் பாட்டையே நவீனப்படுத்தி அவர் ஒலிக்க விட்டிருக்கும் புதுமை ரசனையான ரகளை.
கதைக்காகப் பெரிதாக மெனக்கெடாமல் காட்சிகளுக்காக மெனக்கெட்டுள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். முழுக்க முழுக்க ரசிகர்களை மனதில் வைத்து இந்த ‘குட் பேட் அக்லி’ படம் அவர்களுக்கு விசுவாசமாக உருவாக்கப்பட்டுள்ளது
அதற்கு ஏற்ற மாதிரி அஜித்தின் ஒவ்வொரு அசைவும் அவர்கள் ரசிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
நிச்சயம் இந்த ‘குட் பேட் அக்லி’அஜித் ரசிகர்களைத் திருப்தி அளிக்கும் ஃபுல் மீல்ஸ் என்று கூறலாம்.