விக்ரம் பிரபு-ரன்யா ராவ் ஜோடி நடித்து, ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், பால விஸ்வநாதன் தயாரித்துள்ள படம், ‘வாகா.’ இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடைபெற்று முடிவடைந்து இருக்கிறது. இதுபற்றி விக்ரம் பிரபு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“வாகா, ஒரு காதல் கதை. அதில், நான் எல்லை பாதுகாப்பு படை வீரராக நடித்து இருக்கிறேன். எனக்கு ஜோடியாக-காஷ்மீரை சேர்ந்த பெண்ணாக ரன்யா ராவ் நடித்துள்ளார். ‘ஹரிதாஸ்’ படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கி இருக்கிறார். இந்திய ராணுவத்தின் அனுமதி பெற்று காஷ்மீரில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 69 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
தமிழ்நாட்டின் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த விஜயகுமார், டெல்லியில் இப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அவர் பல உதவிகளை செய்தார். 25 ராணுவ வீரர்கள் எங்களுக்கு பாதுகாப்பு அளித்தார்கள். படப்பிடிப்பு நடைபெறும்போது கூடவே இருந்தார்கள். காலையில் ஓட்டலில் இருந்து புறப்படுவதில் இருந்து படப்பிடிப்பு நடத்தி முடித்து விட்டு மாலையில் ஓட்டலுக்கு திரும்புவது வரை, ராணுவ வாகனங்கள் பாதுகாப்பாக எங்களை பின் தொடர்ந்தன.
ஒருநாள் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது, தூரத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் தொடர்ந்து கேட்டது. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டு ஓட்டலுக்கு திரும்பும்படி, ராணுவ வீரர்கள் எங்களை கேட்டுக்கொண்டார்கள். அதன் பிறகுதான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்த விவரம் எங்களுக்கு தெரியவந்தது.அதை இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது.
காஷ்மீர் மிக அழகான இடம். அங்கு தொடர்ந்து 69 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தது, ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ராணுவ வீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் நம் தமிழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
கடைசி நாள் படப்பிடிப்பு நடைபெற்றபோது, பாச மிகுதியால் அவர்கள் எங்களை கட்டிப்பிடித்து அழுதார்கள். அவர்களை பிரிவதற்கு எங்களுக்கும் கஷ்டமாக இருந்தது.”
இவ்வாறு விக்ரம் பிரபு கூறினார். காஷ்மீரில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன், ‘வாகா’ படத்தின் படப்பிடிப்பு 69 நாட்கள் நடந்தது” என்று நடிகர் விக்ரம் பிரபு கூறியுள்ளார். இந்த நிகழ்வில் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் , நடிகர் பிரபு, நாயகி ரன்யாராவ்,தயாரிப்பாளர் பால விஸ்வநாதன்,விநியோகஸ்தர் காஸ்மோ சிவா ஆகியோரும் கலந்து கொண்டனர்.