‘குமார சம்பவம்’ திரைப்பட விமர்சனம்

குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, குமாரவேல்,ஜி எம் குமார், பாலசரவணன், வினோத்சாகர், லிவிங்ஸ்டன், வினோத் முன்னா, சிவா அரவிந்த், கெளதம் சுந்தர்ராஜன் நடித்துள்ளனர்.

பாலாஜி வேணுகோபால் எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, இசை அச்சு ராஜாமணி, எடிட்டிங் ஜி. மதன், கலை கே.வாசுதேவன்.தயாரிப்பு வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் கே.ஜே.கணேஷ்.

சினிமாவில் இயக்குநராக வேண்டுமென்ற கனவுடன் இருப்பவர் நாயகன் குமரன்.அவர் வீட்டு மாடியில் குடியிருப்பவர் குமாரவேல். சமூக சேவகரான அவர் திடீரென்று ஒரு நாள் இறந்து விடுகிறார்.
அது கொலையாக இருக்கலாமோ என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. குமரன் மீதும் அந்தச் சந்தேகப் பார்வை படர்கிறது .அதற்குக் காரணமானவர்களை குமரன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். குமரனின் தாத்தாவான ஜி. எம். குமார் எழுதி வைத்திருக்கும் உயிலில் ஒரு பிரச்சினை வருகிறது. அதனால் குமரனின் இயக்குநர் ஆசை தள்ளிப் போகிறது .குமரன் இயக்குநர் ஆனாரா? குமாரவேல் இறந்தது எப்படி? என்பதே ‘குமாரசம்பவம்’ படத்தின் மீதிக்கதை.

தொலைக்காட்சியின் பிரபலமான’ பாண்டியன் ஸ்டோர் ‘கதாநாயகன் குமரன் சினிமா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம் இது .சினிமா கனவு நிறைவேறாத சிக்கல், குமாரவேல் கொலைக்குக் காரணமானவர்கள் பற்றிய தேடல் ,காதலியுடன் காதல் ,பக்கமேளமாக இருக்கும் நண்பன் என்று அவரது உலகம் இருக்கிறது.இந்த கதையில் அவரது பாத்திரத்தில் சில இடங்களில் நாடகத்தனம் தோன்றினாலும் பெரும்பாலும் அவர் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கி இருக்கிறார். பால சரவணன் உடன் அடிக்கும் லூட்டிகள் ஜாலி ரகளை .மூன்று வில்லன்களைத் தேடிப் போகும் சந்தர்ப்பங்கள் தரமான சம்பவம்.

குமாரவேல், டிராபிக் ராமசாமி போல் ஒரு சமூக சேவகராக வருகிறார் .கதை அவரை மையம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது . குமாரவேலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும் வினோத் சாகர் படத்தை கலகலவென நகர்த்த உதவுகிறார் .மாறுவேடத்தில் வில்லன்களை அவர் விசாரிப்பது புதுவிதம்.

நாயகி பாயல் அவ்வப்போது வருகிறார்,பேசுகிறார், வருகைப் பதிவிட்டு விட்டுக் காணாமல் போய்விடுகிறார்.

தாத்தாவாக வரும் ஜி.எம்.குமார் சற்று மிகைநடிப்பு காட்டுகிறார். படத்தில் வரும் மற்ற துணைப் பாத்திரங்களிலும் தொலைக்காட்சி தொடர்களின் பாதிப்பு தென்படுகிறது. 

அச்சுராஜா மணியின் இசையில் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பார்க்கும்படி மாறி உள்ளன.

சமூகப் போராளி பாத்திரம், கதை சொல்லும் பாணி போன்றவற்றில் ஏனோ பழைய வாசனை.
இடைவேளைக்கு பின்னர் தான் படம் வேகமெடுக்கிறது. குறிப்பாக வில்லன் மீது சந்தேகப்பட்டு அவரை சிபிஐ அதிகாரி போர்வையில் விசாரிக்கும் காட்சிகள் சுவாரசியம். அப்போது வெளிப்படும் காமெடி நிகழ்ச்சிகள் சிரிப்பூட்டுவன. படம் முழுக்க இப்படி நகைச்சுவை வைத்து இருந்தால் கலகலப்பாக மாறியிருந்திருக்கும்.

நாடகபாணி காட்சிகள், பழைய பாணி கதை சொல்லல் போன்றவற்றால் தரமான சம்பவமாக மாறி இருக்க வேண்டிய படம் சுமாரான சம்பவமாகத் தோன்றுகிறது. எனவே ஒரு பொழுதுபோக்குப் படமாக முடிகிறது.