‘கும்கி- 2’ திரைப்பட விமர்சனம்

மதி ,ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பெராடி, ஸ்ரீநாத் நடித்துள்ளனர்.பிரபுசாலமன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு எம். சுகுமார், இசை – நிவாஸ் கே. பிரசன்னா, தயாரிப்பு – ஜெயந்திலால் காடா, தவல் காடா.

மலைப்பகுதியில் வாழும் பூமிக்குத் தந்தை இல்லை.தாய் இன்னொருவருடன் வாழ்கிறாள். அவர்கள் குடியும் குடித்தனமாக இருக்கிறார்கள்.எனவே தான் புறக்கணிக்கப்பட்டதாக, தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறான் பூமி.பள்ளியிலும் அவன் தாழ்வுணர்ச்சியில் ஒடுங்கி இருக்கிறான். இந்நிலையில் ஆசிரியர் நல்ல நண்பர்கள் என்று இயற்கையை ரசிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறார் .அதன்படி காடு மலை மரம் விலங்குகள் பறவைகள் என்று நேசிக்க ஆரம்பிக்கிறான். அப்போது குழிக்குள் விழுந்த ஒரு குட்டியானையைக் காப்பாற்ற முயலும் போது அந்தக் குட்டி யானைக்கும் அவனுக்கும் பழக்கம் ஏற்படுகிறது.அதுவே பந்தமாக மாறுகிறது. இருவரும் அன்பைப் பகிர்ந்து கொள்ள அவனைப் போலவே யானையும் வளர்கிறது. இதனை அறிந்து கொண்ட அவனது தாய் அந்த யானையை பெரிய விலைக்கு விற்க ஏற்பாடு செய்கிறாள்.பூமிக்குத் தெரியாமல் ஒரு நாள் விற்றும் விடுகிறாள். பூமி யானையைத் தேடி அலைகிறான்.அந்த யானையைப் பெரிய பூஜைக்காக பலி கொடுக்க வாங்கிச் சென்றிருக்கிறார்கள் என்று அறிந்து பதறுகிறான். அதைத் தேடி அலைந்து கண்டுபிடிக்கிறான். அவர்களிடமிருந்து அந்த யானையை ஓட்டிக் கொண்டு காட்டுக்குள் செல்கிறான். அவர்கள் அவனைத் துரத்துகிறார்கள். இந்த நிலையில் அவனையும் யானையையும் பாரி என்பவன் தந்திரமாகப் பேசி குறுக்கு வழியில் யானையை வாங்கியவர்களிடமே கொண்டு சேர்க்கிறான்.பலிபீடத்தில் யானை நிற்கிறது . பூமி பரிதவிக்கிறான். முடிவு என்ன என்பதுதான் ‘கும்கி 2’ படத்தின் மீதிக்கதை.காடு மலை அருவி என்று ஆரம்பக் காட்சியிலேயே நம்மை அந்த இயற்கை சூழ் வனாந்தரத்தில் அழைத்துக் கொண்டு செல்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

பூமிக்கு வீட்டுச் சூழல் பிடிக்கவில்லை. உலகத்தையே வீடாக்கிக் கொண்டு வெளியே திரிகிறான்.யானை மீது பாசம் காட்டுவது குடும்பத்திலிருந்து விலகி இருப்பதும் ஆசிரியர் சொல்லுக்கு மதிப்பளிப்பது என்று நல்ல மனிதனாகவே அவன் வடிவெடுக்கிறான்.இப்படிப்பட்ட கதையின் நாயகனாக மதி நடித்திருக்கிறார்.
வெளி உலகத்தை அதிகம் நேசிக்கும் அவர்,எப்போதும் யானையுடன் வாழ்கிறார்.நிலா நிலா என்று அதற்கு பெயர் வைத்து மதி அதைச் சுற்றி வருகிறார். நன்றாகப் பழகுகிறார்.யானைக்கு ஒரு ஆபத்து என்றதும் தவிக்கிறார். அதைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் தயாராக இருக்கிறார். இந்தப் பாத்திரத்தில் மதி அந்தப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் .

இந்தப் படம் வழக்கமான கதாநாயகன் கதாநாயகி வில்லன் என்ற சட்டகத்தில் அமையாமல் ஒரு யானைக்கும் ஒரு இளைஞனுக்குமான பந்தம் வெளிப்படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது.

படத்தில் ஜூனியர் மதியாத நடித்துள்ள அந்தச் சிறுவனும் தனது தோற்றத்தாலும் துறுதுறுப்பான நடிப்பாலும் கவர்கிறான்.மதியின் ஆசிரியராக வந்து அவனை ஆற்றுப்படுத்தும் பாத்திரத்தில் கோலங்கள் தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் திருச்செல்வம் நடித்திருக்கிறார். அளவான பங்கேற்பு அழகான நடிப்பு.மதியின் தாயாக எதிர்மறை சாயல் கொண்ட பாத்திரத்தில் சூசன் நடித்திருக்கிறார். ‘மைனா’வில் வில்லத்தனம் காட்டிய அதே சூசன் தான். இதிலும் அதே வில்லத்தனம்.யானையை தேடிப் பிடிக்கும் போலீஸ் படையின் தலைவராக ஹரிஷ் பெராடி வருகிறார். எதிர்மறை பார்த்திரம்தான். வழக்கம் போலவே பளிச்சிடுகிறார். மதியுடன் பயணிக்கும் பாத்திரத்தில் ஆண்ட்ரூஸ் நடித்திருக்கிறார். தம்பி ராமையா போல் அதிகமாக பேசி காமெடி செய்ய முயன்று இருக்கிறார் .சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.பறவைகளின் ஒலியைப் பதிவு செய்யும் இயற்கை ஆர்வலராக அந்தப் பாத்திரத்தில் வரும் ஷ்ரிதா ராவ் தனது பாத்திரத்திற்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. உடன் உதவிக்கு வரும் அந்த சிறுவன் உள்பட.

படத்தின் பிரதான நாயகனாக பெரிய யானை நடித்துள்ளது.பார்த்துப் பார்த்து அதுவும் ஒரு பாத்திரமாக நம் மனதில் தங்கி விடுகிறது. அதுவே படத்திற்குப் பெரும்பலமாக அமைகின்றது மேலும் பலரும்நடித்திருக்கிறார்கள் .எம் சுகுமார் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்கு குளுமையாக உள்ளன.நிவாஸ் கே பிரசன்னா இசையில் ஒரு போதாமை நிலவுகிறது.இயற்கைப் பின்னணி கொண்ட இந்தக் கதையில் அவர் மேலும் , மெனக்கட்டு இருக்கலாம்.

குழந்தைகளைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வழக்கமான மசாலாத்தனமின்றி உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் யானை செய்யும் சண்டைக் காட்சிகள் கண்களை மிரள வைக்கின்றன.அதற்கான விஎஃப் எக்ஸ் தொழில்நுட்பம் மிகத் துல்லியமாக உள்ளது.

மொத்தத்தில் இந்த ‘கும்கி 2’ திரைப்படம் யானைப் பாசத்தை மனிதர்களிடம் கடத்துகிறது.