ரிஷி ரித்விக் , ஆராத்யா, பருத்திவீரன் சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, சென்ராயன், ஜார்ஜ் விஜய், சாய்தீனா, மீசை ராஜேந்திரன், ராணுவ வீரர் காமராஜ், குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.கஜேந்திரா இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். எடிட்டிங் -ரஞ்சித்குமார். பாடல்களை கு.கார்த்திக் எழுதியுள்ளார்.
ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரித்துள்ளார்.
குற்றப் பத்திரிகை,குற்றம் குற்றமே,குற்றம் கடிதல், குற்றம் புரிந்தால், குற்றம் 23, குற்றமே தண்டனை, சட்டப்படி குற்றம்,குற்றம் புதிது வரிசையில் வெளிவந்துள்ள படம் ‘குற்றம் தவிர்’.
வாலிப முறுக்கோடு மிடுக்கோடு இருப்பவர் இளைஞன் ருத்ரா. தன் தம்பி ருத்ராவை போலீஸ் உடையில் பார்க்க வேண்டும் என்ற கனவில் இருக்கிறார் அக்கா கஸ்தூரி. அக்கா மகள் சிறுமி பூஜா,மாமாவுக்கு போலீஸ் வேலை கிடைக்க வேண்டும் என்று அன்றாடம் கோவிலில் பிரார்த்தனை செய்கிறவள்.
கஸ்தூரிக்கு இதய அறுவை சிகிச்சை என்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து விடுகிறார்கள். அது தோல்வியில் முடியவே இறந்து விடுகிறார்.
இந்த மருத்துவ மோசடி தெரிந்து அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்க நினைக்கிறார் ருத்ரா. அந்தத் தேடலில் மருத்துவக் காப்பீட்டு மோசடி இருப்பது தெரிகிறது. இதன் பின்னணியில் இருக்கும் பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றமும் இந்த வலைப்பின்னலில் அமைச்சர் வரை சம்பந்தப்பட்டிருப்பதை எல்லாம் அறிந்து கொள்கிறார். குற்றவாளிகளை எல்லாம் சட்டத்திற்கு முன்பு நிறுத்தப் போராடுகிறார் ருத்ரா.மருத்துவ மாஃபியாக்கள்,பண முதலைகள், அதிகார வர்க்கம் ஆகியவற்றின் தடைகளை எப்படி எதிர்கொண்டு இந்த முயற்சியில் வெற்றி பெறுகிறார் என்பதுதான் 147.06 நிமிடங்கள் கொண்ட ‘குற்றம் தவிர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் ருத்ரா வாக வரும் ரிஷி ரித்விக் துடுக்கான வாலிபனாக வருகிறார்.அக்கா மீது பாசம் உள்ள தம்பியாக போலீஸ் வேலையில் இருக்கும் ஆராத்யாவை காதலிக்கும் காதலனாக,அக்கா மகள் பூஜா மீது பாசத்தைப் பொழியும் மாமாவாக ,போலீஸ் கனவுடன் இருக்கும் இளைஞனாக பல்வேறு நடிப்புத் தருணங்களைக் காட்டும் காட்சிகளில் தோன்றி நடித்துள்ளார்.அக்கா இறந்தபோது உடலைப் பார்த்துக் கதறுவதாகட்டும் காவல் நிலையத்தில் லாக்கப் சித்திரவதை செய்யப்படும் போது வலி,வேதனையில் துடிப்பதாகட்டும் ஆவேசமாக பொங்கி எழுந்து எதிரிகளைத் துவம்சம் செய்வதாகட்டும் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின் நடிப்பிற்காக தமது பங்களிப்பைச் சிறப்பாகவே செய்துள்ளார்.
போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் ஆராத்யா இளமைத் தோற்றத்துடன் வசீகரமான முகத்துடன் துள்ளலான நடிப்புடன் என்று தோன்றுகிறார்.நாயகனுடன் ஒரு குத்துப் பாட்டில் கலக்குவது, நாயகன் வாக்கப்பில் அடி வாங்கும் போது கதறுவது, காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டுவது ,சண்டைக் காட்சிகளில் ஆவேசமாகச் சண்டை போடுவது என்று குறையில்லாத நடிப்பைக் கொடுத்துள்ளார்.
ருத்ராவின் அக்கா கஸ்தூரியாக வரும் வினோதினி தனது மகளையும் தம்பியையும் வைத்துக் காப்பாற்றச் சாப்பாட்டுக்கடை வைத்திருப்பவராக வந்து, தவறான சிகிச்சையால் இறந்து அனுதாபத்தை அள்ளுகிறார்.
அமைச்சர் மணிவாசகமாக பருத்திவீரன் சரவணன் வருகிறார். அதிகார தோரணை, அரசியல்வாதியின் அலட்டல், சட்டவிரோத காரியங்களில் வெளிப்படுத்தும் வில்லத்தனம் என்று தனது பாத்திரத்தில் சரியாகவே பொருந்தியுள்ளார்.
மோசடிகள் செய்யும் டாக்டராக வரும் ஆனந்த் பாபு, சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு அநியாய காரியங்களில் இறங்கும் நபராக வருகிறார்.அமைச்சருக்கு நெருக்கமான பாண்டு பாத்திரத்தில் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் நடித்துள்ளார் . புதுமுகம் போல் தெரியாமல் அந்தப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பூஜாவாக வரும் சிறுமி சாய் சைந்தவி நடிப்பில் தேறி ஒரு குழந்தை நட்சத்திரமாகவே தோன்றுகிறார்.இன்ஸ்பெக்டராக வரும் மீசை ராஜேந்திரன் ரவுடி மணிவண்ணனாக வரும் சாய் தீனா இன்னொரு தரப்பு ரவுடியாக வரும் காமராஜ் என அனைவருமே பார்த்து பழகிப்போன எதிர்மறை பாத்திரங்கள்.
ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார் .சில காட்சிகளைச் சிக்கனமாகவும் சில காட்சிகளைச் செலவழித்தும் எடுத்துள்ளார்கள். எனவே
காட்சிகள் ஒரே சீரான தரத்துடன் இல்லாமல் தோன்றுகின்றன.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ஒரு வணிக ரீதியான படத்துக்குத் தேவையான இசையைக் கொடுத்துள்ளார் .’ நான் கோலார் பக்கம் போனேன்’, ‘அம்மா இல்லாத உலகத்துல’ எனத் தனியாகக் கேட்கும் போது இனிக்கும் பாடல்கள் படத்தில் அமைவிடத்தில் சலிப்பூட்டுகின்றன.
படத்தொகுப்பாளர் ரஞ்சித் குமார் சில இடங்களில் கத்தரி போட மறந்துள்ளார்.அதனால் காட்சிகள்அலுப்பூட்டுகின்றன.
மருத்துவ மோசடியை முதன்மைக் கதையாக வைத்துக் கொண்டு எடுத்திருந்தால் இந்த படம் மேலும் சிறப்பாக வந்திருக்கும் .அதில் குத்துப் பாட்டு,சென்டிமென்ட்டுக்காக தாலாட்டுப் பாட்டு என்று வணிக அம்சங்கள் என்ற பெயரில் இடையில் கலந்து அதன் வீரியத்தைக் குறைத்து விட்டார்கள்.
ருத்ரா டில்லி போலீஸ் என்று திடீரென்று சொல்வது நம்பும்படியாக இல்லை.இரண்டாவது பாதியில் நீளமான காட்சிகளைக் குறைத்திருக்கலாம். சிறுமி பூஜா ஹார்ட் டிஸ்க் தேடும் காட்சிகள் திக் என்று திகில் ஊட்டுகின்றன. இருந்தாலும் அந்த பூஜாவுக்கான அந்தப் தாலாட்டுப் பாடல் படத்தின் வேகத்திற்கு இடையூறு செய்கிறது.
மருத்துவக் காப்பீடு என்கிற பெயரில் நடக்க வாய்ப்புள்ள மோசடி குறித்து ஒரு எச்சரிக்கையை இந்தப் படம் தருகிறது.
இப்படிப்பட்ட குற்றங்களைத் தவிர் என்று கருத்தும் சொல்கிறது இந்த ‘குற்றம் தவிர்’ படம்.


