விமல், தான்யா ஹோப் ,கீர்த்தனா,திருநாவுக்கரசு, ஜனனி பாலு ,வினோதினி, போஸ் வெங்கட்,முத்துப்பாண்டி, லாவண்யா நடித்துள்ளனர்.
சிறப்புத் தோற்றத்தில் S R ஜாங்கிட் IPS வருகிறார். ஷரவண சக்தி இயக்கி உள்ளார்.
வசனம் விஜய் சேதுபதி, ஒளிப்பதிவு – ஒய்டு ஆங்கிள் ரவி ஷங்கர்,கலை – ஜெயக்குமார்
படத்தொகுப்பு – கோபிகிருஷ்ணா, இசை – வி.எம். மகாலிங்கம்.
பாலியல் வன்கொடுமைகள்,அதற்கு எதிராகக் கதாநாயகன் ஆவேசப்பட்டு பழிவாங்கும் கதை சார்ந்து உருவாகி உள்ள பட வரிசையில் இதுவும் ஒன்று.
தன் தங்கைக்கு நேர்ந்த பாலியல்கொடுமையும் உயிரிழப்பும் ஆட்டோ ஓட்டுநர் ஆன விமலின் மனதில் ஆழமாகப் பதிந்து அவரைக் குடிக்கு அடிமையாக்கி மௌனி ஆக்கி பழிவாங்கும் செயல்களில் ஈடுபட வைக்கிறது. சாது மிரண்டு காடு கொள்ளாது பழிவாங்குவதுதான் ‘குல சாமி’ படத்தின் கதை.
தன் தங்கையை ஒரு மருத்துவராகப் பார்க்க வேண்டும் என்ற கனவில் விமல் தன் தங்கையை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கிறார். அங்கே பணம் கொழுத்த கூட்டம் இளம் மாணவிகளை வேட்டையாடத் திட்டமிடுகிறது. அதில் பலரும் சிக்கிக் கொள்கிறார்கள்.அவர்களை வளைத்து மிரட்டிக் காரியம் சாதிக்கிறார்கள்.இந்தக் கொடுமைகள் தொடர்கதையில் விமலின் தங்கையும் சிக்கிக் கொள்கிறாள்.
அவருக்குத் ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பிற்கு நிவாரணம் தேடிப் புறப்படுகிறார். வழியில் தென்படும் இத்தகைய குற்றவாளிகளுக்கு.. தன் மனசாட்சிக்கு ஏற்ற வகையில் தண்டனை வழங்குகிறார்.
ஆனால் படத்தின் தொடக்கத்திலிருந்து பார்வையாளர்கள் எளிதில் யூகிக்கக்கூடிய வகையில் திரைக்கதை பயணிப்பதால் எந்த ஒரு ஆச்சரியமும் நிகழாமல் படம் செல்கிறது.
புறநகர் பகுதி ஒன்றில் கூட்டுப் பாலியல் வன்புணர்விற்கு ஆளாகும் கல்லூரி மாணவி ஒருவரின் மரணத்துடன் கதை தொடங்குகிறது. அடுத்தடுத்து நடைபெறும் காவல்துறை விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்ட சந்தேகத்திற்கிடமான நபர் பிடிபடுகிறார். அவரைக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் முன் மர்மமான முறையில் நாய் ஒன்று மூலம் கொலையாகிறார்.அது யார்? ஏன்? என்ற கேள்விகளுடன் திரைக்கதை பயணிக்கிறது.
நடிகர் விமல், சூர சங்கு என்ற கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநராக வருகிறார்.அதிகம் பேசாமல் ஆக்சனில் பேசுகிறார். கதாநாயகி தான்யா ஹோப்பிற்கு நடிக்க பெரிதாக ஸ்கோப் இல்லை.நடித்துள்ளவர்கள் ஆளாளுக்கு வந்து பேசி செயற்கைத் தனமான மிகை பாவனைகள் காட்டி படத்தை நாடகமாக மாற்றுகிறார்கள்.போலீஸ் அதிகாரி ஜாங்கிட் எல்லாம் நடித்துள்ளார். ஆனாலும் பெரிதாகப் பலனில்லை.
மருத்துவக் கல்லூரியில் அங்குள்ள பேராசிரியர் மூலமே நடத்தும் பாலியல் முறைகேடுகள் காட்டப்படுகின்றன.
இயக்குநர் பாலியல் குற்றங்கள் சார்ந்த இன்றைய சமூகத்திற்கு அவசியமான கருத்தினை முன்னிலைப்படுத்த நினைத்துக் கொண்டு கதை சொல்ல முயன்றாலும், அதற்கான காட்சி அமைப்பில் மலிவான போக்கைக் கையாண்டுள்ளார்.
இதனால் கதாபாத்திரத்தின் மீது பார்வையாளர்களுக்கு ஏற்பட வேண்டிய அனுதாபம் காணாமல் போகிறது.
படத்திற்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் கை கொடுத்திருக்கின்றன. கதையின் நாயகனான நடிகர் விமல் முழு திரைப்படத்தையும் தன் தோளில் சுமக்கிறார்.திரைக்கதையில் புதிய அம்சங்கள் எதுவும் இடம்பெறாததால் ‘மக்கள் செல்வன்’ விஜய சேதுபதியின் வசனங்கள் சிறப்பித்துச் சொல்ல முடியவில்லை .
எளிமையான கதையை மலிவான முறையில் சொல்லி உள்ளார்கள்.